Type Here to Get Search Results !

TNPSC JUNE CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES -UNIT 3 -GROUP 1 GROUP 2

 1. அண்மையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில், கேரளத்தின் கொல்லம்சார்ந்த கல்லூரியொன்றின் விலங்கியல் துறைத்தலைவர், ஒரு புதிய வெள்ளி மீனினத்தைக் கண்டறிந்தார். இச்சிறிய நன்னீர்மீன், Cyprinidae குடும்பத்தைச் சேர்ந்ததாகும். அதற்கு, ‘Puntius sanctus எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவரது ஆராய்ச்சிக்கு, அறிவியல் & தொழில்நுட்பத்துறை நிதியுதவி செய்துள்ளது. இப்புதிய மீன், இந்திய விலங்கியல் ஆய்வகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச விலங்குப் பெயரிடல் ஆணையத்தின் உயிரியல் வங்கியிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 2. கொச்சியைச் சார்ந்த துளிர்நிறுவனம் ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் உருவாக்கிய ‘Bev Q’ என்னும் மெய்நிகர் வரிசை மேலாண்மை செயலிக்கு, சமீபத்தில், இரண்டு நிலை சோதனைக்குப்பிறகு கூகிள் ஒப்புதல் அளித்தது. மதுக்கடைகளின் வரிசைகளை நிர்வகிக்க இச்செயலி செயல்படுத்தப்படவுள்ளது. வரிசை மேலாண்மை முறை அமல்படுத்தப்படும் வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கேரள மாநில பானங்கள் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இணையவழியில் இதுகுறித்து பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.
 3. ஹாரி பாட்டர் புகழ் எழுத்தாளர் J K ரெளலிங், அண்மையில் தனது கதையை உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்காக இணையத்தில் வெளியிட்டார். ‘தி இக்காபாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது, ஹாரி பாட்டருடன் எந்தத் தொடர்பும் இல்லாத குழந்தைகளுக்கான அவரது முதல் கதையாகும்.அண்மையில் இக்கதைக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக இணையதளத்தில், இந்தக்கதையின் அத்தியாயங்கள் ஜூலை 10 வரை நாள்தோறும் வெளியிடப்படும். இந்தக் கதையை, பத்தாண்டுக்கு முன்பு தான் எழுதியுள்ளதாகவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார். 
 4. இந்தியாவின் வாடகையுந்து சேவை நிறுவனமான ஓலாவின் துணை நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், அண்மையில் நெதர்லாந்தைச் சார்ந்த அசல் கருவி உற்பத்தி நிறுவனமான எடெர்கோ BV’ஐ கையகப்படுத்தியது. இதன்மூலம், ஓலா எலக்ட்ரிக் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பிரீமியம் மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் நுழையவுள்ளது. ஓலா எலக்ட்ரிக் அதன் ஸ்மார்ட் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை உருவாக்கவும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் அதனை அறிமுகப்படுத்தவும் எடெர்கோவின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தவுள்ளது.
 5. பேஸ்புக் நிறுவனம் அண்மையில், ‘Catch Up’ என்னும் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்களை இலவச தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. பேஸ்புக்கின் உள்ளக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவான NPE குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பயன்பாடு, பயனர்களை ஒரே நேரத்தில் எட்டு பேருக்கு வரை அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. சேவையை ஒருங்கிணைக்க இது தொலைபேசியில் உள்ள பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்துகிறது. சோதனை முறை சேவையாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை, விரைவில் உலகம் முழுவதும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 6. பிரதமரின் மத்ஸ்ய சம்பத யோஜனா - இந்தியாவில் மீன்வளத்துறையில் நீடித்த மற்றும் பொறுப்புமிக்க வளர்ச்சி மூலம் நீலப்புரட்சியை உருவாக்கும் திட்டம்” என்ற தலைப்பில் மாநாட்டில் பேசிய மத்திய மீன் வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்தத் திட்டத்துக்கு மே.20 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். நாட்டில் மீன் உற்பத்தி 2018-19’இல் 137.58 இலட்சம் மெட்ரிக் டன் என்றிருந்த நிலையில், 2024-25’க்குள் அதை 220 இலட்சம் டன்களாக அதிகரிக்க பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டமிட்டுள்ளது. அதாவது 9% வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துக்கொண்டுள்ளது.  `20,050 கோடி முதலீட்டுடன் இந்தத்திட்டம் அமல்செய்யப்படும். இதில் மத்திய அரசின் பங்கு `9,407 கோடியாகவும், மாநில அரசுகளின் பங்கு `4,880 கோடியாகவும், பயனாளிகளின் பங்கு `5,763 கோடியாகவும் இருக்கும்.
 7. மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் வங்கியல்லா முன்னணி நிதி நிறுவனமுமான மின் நிதிக்கழகம், மத்திய பிரதேச மாநில அரசுக்குச் சொந்தமான நர்மதா படுகை திட்டங்கள் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய பிரசேசத்தில் `22,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள 225 MW நீர்மின் திட்டங்கள் மற்றும் பல்நோக்குத்திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில், 225 MW நீர்மின் திட்டங்கள் மற்றும் மின் உபகரணங்களுக்கான 12 பெரிய பல்நோக்குத் திட்டங்களுக்கு NBPCL நிதியளிக்கிறது. இந்த ஒப்பந்தம்மூலம் செயல்படுத்தப்படவுள்ள பெரிய பல்நோக்குத்திட்டங்களுள் பசானியா பல்நோக்குத்திட்டம், திந்தோரி, சிங்கி போரசு பல்நோக்குத் திட்டம், நரசிங்பூர், ரைசன், ஹொசங்காபாத், சக்கர் பெஞ்ச் லிங்க் நரசிங்பூர் சிந்த்வாரா, துதி திட்டம் சிந்த்வாரா ஹொசங்காபாத் உள்ளிட்டவை அடங்கும்.
 8. நடப்பாண்டு (2020) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நாடாக சீனா உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் மறு அளவீடு செய்வதற்கான திட்டத்தின் ஒருபகுதியாக இந்த ஆய்வுக்குழு எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணித்துள்ளது. COVID-19 தொற்று பரவல் காரணமாக பொதுவாக வசந்த காலத்தில் நடைபெறும் மலையேற்றத்தை நேபாளமும் சீனாவவும் இரத்து செய்துள்ளன. எனவே நடப்பாண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த ஒரே நாடாகவும் அணியாகவும் சீனா ஆய்வுக்குழு உள்ளது.
 9. அரசாங்க ஆதரவுடைய ரஷ்ய செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, ரஷ்யா தனது முதல் மறைந்திருந்து தாக்கும் குண்டுவீச்சு விமானத்தை, ‘PAK DA’ என்ற பெயரில் உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த விமானம் எதிர்வரும் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இது, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உட்பட மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை எடுத்துச்செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (USA), ‘B2’ என்னும் மறைந்திருந்து தாக்கும் குண்டுவீச்சு விமானத்திற்கு இணையாக இது தயாரிக்கப்படும். சீனாவும் தனது சொந்த மறைந்திருந்து தாக்கும் குண்டுவீச்சு விமானத்தை, ‘சியான் H20’ என்னும் பெயரில் உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.
 10. பன்னாட்டு சேவைகள் அமைப்பான டெலாய்ட், சமீபத்தில் ஓர் இணையவழி குழுமத்தைப் பயன்படுத்தி ‘உலகளாவிய நுகர்வோர் மனநிலை கண்காணிப்பு’ என்ற ஓர் ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வு, உலகெங்கிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நடத்தப்பட்டது.இந்த ஆய்வின்படி, நெருக்கடிமிக்க இக்காலத்தில், இந்திய நுகர்வோர்கள், மிகவும் மனக்கவலைக்கு உரியவர்களாக உள்ளனர். இதன் காரணமாக, 33 மதிப்பெண்களுடன் உலகளாவிய மனக்கவலைக் குறியீட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. இருப்பினும், கடந்த மே மாதத்தில் இந்தியாவின் இம்மதிப்பெண் படிப்படியாக குறைந்து காணப்பட்டது.
 11. உலக பசி நாள் என்பது, ‘The Hunger’ திட்டத்தின் ஒரு முயற்சியாகும். இது, நியூயார்க்கைச் சார்ந்த ஓர் அமைப்பாகும். உலகெங்கும் உள்ள பசிக்கொடுமையை அறவே ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று உலகம் முழுமைக்கும் உலக பசி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா அவையின் அண்மைய தரவுகளின்படி, 2015ஆம் ஆண்டுக்குப்பிறகு பசியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடும் பசியின் தாக்கம் மற்றும் பசி மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக பசி நாளின் தலையாய நோக்கமாகும்.
 12. இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகளை செயல்படுத்தும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) அண்மையில், ‘PAi’ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இயலியை (chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மெய்நிகர் உதவியாளர், NPCI’இன் முதன்மை தயாரிப்புகளான FASTag, RuPay, UPI, AePS போன்றவை குறித்து நிகழ்நேர அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள், அந்தக் குறிப்பிட்ட தயாரிப்புகளைப்பற்றிய கேள்விகளை இயலியிடம் கேட்கலாம். அதற்குத்தகுந்த பதில்கள் இயலியால் அனுப்பப்படும். உலகளாவிய RuPay அட்டைதாரர்களும் இவ்வியலியை அணுகலாம்.
 13. பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாளை ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று இனப்பெருக்க உரிமைகளுக்கான உலகளாவிய பெண்கள் வலையமைப்பு (WGNRR) கொண்டாடு வருகிறது. கடந்த 1987ஆம் ஆண்டு முதல் பல்வேறு பெண்கள் உடல்நல ஆதரவாளர்களும் அவர்களது சமூகங்களும் இந்தக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிவருகின்றனர். கோஸ்டாரிகாவில் நடந்த பன்னாட்டு பெண்கள் உடல்நலம் குறித்த சந்திப்பின்போது, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மகளிர் உடல்நல வலையமைப்பு, மே.28’ஐ பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாளாக கொண்டாடுவதற்கு முன்மொழிந்தது.
 14. இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அதில் சுமரிவாலா தலைமையில் 11 பேர்கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக்சங்கம் அமைத்துள்ளது. நிதித்துறையுடன் ஒருங்கிணைந்து அதன் உறுப்பினர்களின் வருடாந்திர (2020-2021ஆம் ஆண்டுக்கானது) மானியம் மற்றும் இணைவுக் கட்டணத்தை மதிப்பாய்வு செய்து கண்காணிப்பதற்காக இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் தொடர்புடைய நிலுவையில் உள்ள அனைத்து சிக்கல்கள் குறித்த அறிக்கையையும் IOA தலைவருக்கு இது அனுப்பும்.
 15. மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB), மத்திய அரசும் கையெழுத்திட்டன.இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இதன்மூலம் கிராமப்புற மக்கள் சந்தைகள், வேலைவாய்ப்புக்கு மற்றும் சேவைகளுக்கு செல்லமுடியும். மேம்படுத்தப்பட்ட இயங்குதிறன், மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வெளியேயுள்ள இரண்டாம் நிலை நகரங்களில் வளர்ச்சி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும். இதன் மூலம் வருவாய் வித்தியாசங்கள் குறையும். பன்னாட்டுத் தரத்தைப் பின்பற்றி இந்தச் சாலைத்திட்டம் அமைக்கப்படுவதால், சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படும்.
 16. கர்நாடக மாநில மாம்பழ மேம்பாடு & சந்தைப்படுத்தல் கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிளிப்கார்ட் கையெழுத்திட்டுள்ளது. இது, விவசாயிகள் தங்கள் புதிய பழங்களை ஆன்லைனில் விற்க உதவுகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், இந்திய அஞ்சல் மையங்கள் விநியோகப் பங்காளராக செயல்படும். மாம்பழ வாரியம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள், பிளிப்கார்ட் தளத்தில் தங்களை இணைத்துக்கொள்வதன்மூலம் மாநிலம் முழுவதும் பல வகையான மாம்பழங்களை விற்கவியலும்.
 17. கர்நாடக மாநில அரசானது அண்மையில், “மாநில சுகாதாரப் பதிவேடு” என்று அழைக்கப்படும் இதன் வகையில் முதலான ஒரு திட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்தது. பதிவேட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் சுகாதாரம் குறித்த தகவல்களை பராமரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் அம்மாநிலம் அறிவித்துள்ளபடி, ASHA குழுமம், ஆரம்ப சுகாதார மையங்கள், வருவாய் மற்றும் கல்வித் துறைசார் உறுப்பினர்களைப் பயன்படுத்தி, அம்மாநிலத்தில் உள்ள 6.5 கோடி மக்களின் சுகாதாரம் குறித்த தகவல்கள் திரட்டப்படும். இந்தத் திட்டம், முதன்முதலாக, அம்மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படும்.
 18. தொழிலகம் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, 2019-20ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிக அளவு அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொண்ட நாடுகளால் $14.67 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மொரீஷியஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 2018-19ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-மார்ச் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 4,436 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டைக்காட்டிலும் 2019-20ஆம் நிதியாண்டில் 13% அதிகமாக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.  அதன்படி, இந்தியா, கடந்த நிதியாண்டில் 4,998 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் சேவைத்துறையில் 785 கோடி அமெரிக்க டாலர் முதலீடு ஈர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை அதிகளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
 19. நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் (FSDC) 22ஆவது கூட்டத்துக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். அதன்சமயம், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் நிதி நிலைத்தன்மை குறித்து அவர் ஆய்வுசெய்தார்.கடந்த 2010ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தன்னாட்சிமிக்க ஓர் ஒழுங்குமுறை அமைப்பான நிதி நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சிக்குழுவின் தலைவராக மத்திய நிதியமைச்சர் உள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதிச்செயலாளர் தலைமைப் பொருளாதார ஆலோசகர், SEBI, IRDAI, PFRDA, IBBI ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட இக்குழுவின் பத்து உறுப்பினர்கள்தவிர வேறுசில தகுதியான நபர்களையும் இக்குழுவில் சேர்த்துக்கொள்ள மத்திய நிதியமைச்சருக்கு அதிகாரமுண்டு.
 20. மத்திய நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்பைத்தொடர்ந்து, உடனடியாக நிரந்தரக் கணக்கு எண்ணை (நிகழ்நேரத்தில்) ஒதுக்கும் வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறைப்படி தொடங்கிவைத்தார். ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை வைத்திருக்கும் நிரந்தரக் கணக்கு எண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கும். காகிதமிலா முறையில் செய்யப்படும் இந்த ஒதுக்கீடுமூலம், மின்-நிரந்தக் கணக்கு எண் விண்ணப்பதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன் ‘மாதிரிப்பதிப்பு’ சோதனை முறையில் வருமான வரித்துறையின் e-தாக்கல் இணையதளத்தில் 2020 பிப்.12 அன்று தொடங்கப்பட்டது. அன்றுமுதல், வெறும் பத்து நிமிடங்களுக்குள்ளாக நிரந்தரக் கணக்கு எண்கள் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன.
 21. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பால் (CII) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏற்றுமதிகள் குறித்த டிஜிட்டல் உச்சிமாநாட்டில் மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். காணொளிவழிமூலம் உரையாற்றிய அவர், ஜூன் மாதத்தில் ஏற்றுமதியில் 8-10 சதவீதம் வரை சரிவு இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார். ஏப்ரல் மாதத்தில், முப்பதில் 28 முக்கிய தயாரிப்புகளின் ஏற்றுமதி, 99 சதவீதம் வரை பெரும் சரிவைக்கண்டதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
 22. ஒவ்வோர் ஆண்டும் மே.28ஆம் தேதியன்று உலகம் முழுமைக்கும் உலக மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாடப்படுகிறது. இது, WASH United என்ற ஜெர்மனியைச் சார்ந்த ஓர் அரசு சாரா அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும். “Periods in Pandemic” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். பாதுகாப்பான மாதவிடாய் நடைமுறைகள் மற்றும் உடல்நலவாழ்வு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு அரசாங்க நிறுவனங்கள், தனி நபர்கள், இலாப நோக்கற்றவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்நாளில் ஒன்றிணைகின்றன.
 23. பேஸ்புக் நிறுவனமனது அண்மையில், ‘Collab’ என்ற சோதனை வடிவிலிருக்கும் குறுவிசைக் காணொளிப் பயன்பாட்டை அறிமுகம் செய்தது. ‘Collab’ பயன்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கதைகள் உள்ளிட்ட தளங்களில் வெளியிடலாம். பேஸ்புக்கின் NPE அணிகளின் ஆராய்ச்சிக் குழு இந்தப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளது. முன்னதாக, இந்தக் குழு, ‘CatchUp’ மற்றும் ‘Hobbi’ உள்ளிட்ட வேறுசில பயன்பாடுகளையும் உருவாக்கியிருந்தது.
 24. 2017ஆம் ஆண்டில், ‘மிஸ் வேர்ல்ட்’ பட்டத்தை வென்ற மானுஷி சில்லர், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐ.நா குழந்தைகள் நிதியத்துடன் (UNICEF) கைகோர்த்துள்ளார். மானுஷி, ‘சக்தி திட்டம்’ என்ற மாதவிடாய் சுகாதாரம் குறித்த ஒரு முன்னெடுப்பை நடத்தி வருகிறார்.இந்தக்கூட்டாண்மைமூலம், மாதவிடாய் சுகாதாரம் குறித்து சிறுமிகளுக்கு அறிவுறுத்துவதற்கும், நலவாழ்வு வசதிகளை உருவாக்குவதற்குமான முயற்சிகளை அவர் ஊக்குவிப்பார். உலக மாதவிடாய் சுகாதார நாளான மே.28 அன்று, UNICEF நடத்திய ‘ரெட் டாட் சவாலிலும்’ அவர் பங்கேற்றார்.
 25. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அதன் புதிய தலைமைச் செயல் அதிகாரி & மேலாண்மை இயக்குநராக தியரி டெலாபோர்டே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விப்ரோவின் தற்போதைய தலைவராக இருந்துவரும் அபிதாலி நீமுச்வாலாவுக்கு மாற்றாக தியரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்னர், தியரி டெலாபோர்டே காப்ஜெமினியுடன் தொடர்பு கொண்டிருந்தார். அங்கு, தலைமை இயக்க அதிகாரி, குழு நிர்வாக வாரியத்தின் உறுப்பினர் உட்பட பல பாத்திரங்களை அவர் வகித்தார். இந்திய நிறுவனங்களால் செய்யப்பட்ட முதல் இந்தியர் அல்லாத தலைமைப் பொறுப்பு நியமனம் இதுவாகும்.
 26. அமைதிகாக்கும் படையினரின் பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.29 அன்று பன்னாட்டு ஐ.நா அமைதிகாப்போர் நாள் கொண்டாடப்படுகிறது. “Women in Peacekeeping: A Key to Peace” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம், 1325 நிறைவேற்றப்பட்ட இருபதாம் ஆண்டு நிறைவையும் நடப்பாண்டு (2020) குறிக்கிறது. கடந்த 1948ஆம் ஆண்டு முதல், தங்கள் சேவையின்போது உயிரிழந்த 3,900’க்கும் மேற்பட்ட ஐ.நா அமைதிகாக்கும் படையினரை ஐக்கிய நாடுகள அவை கெளரவித்து வருகிறது.
 27. சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய திறன்மிகு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மத்திய பிரதேச மாநில அரசு, அண்மையில், ‘ரோஜ்கார் சேது’ என்றவொரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, பிற மாநில தொழிலகங்களில் பணிபுரிந்த திறன்மிகு தொழிலாளர்களை அரசு கணக்கெடுத்து வருகிறது. மேலும், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாலை & பாலம் கட்டுமானம் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களையும் இதற்காக அம்மாநில அரசாங்கம் தொடர்புகொள்ளும்.
 28. வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய இரகப் பொருள்களை, குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலமாக விற்பனை செய்யும் முறையை கடந்த 2011ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்தது. இத் திட்டத்தின்கீழ் கூடுதலாக 23 வன உற்பத்தி சிறிய இரகப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில் சேர்ப்பதைப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவின்மூலம் விற்பனைக்கு வரும் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய இரகப்பொருட்களின் எண்ணிக்கை ஐம்பதிலிருந்து எழுபத்து மூன்றாக அதிகரித்துள்ளது.
 29. INS கலிங்காவில், “அக்னிபிரஸ்தா” என்னும் ஏவுகணைப் பூங்காவுக்கு கட்டளை அதிகாரி இராஜேஷ் தேப்நாத் அடிக்கல் நாட்டினார்.  சூரிய ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் முன்னெடுப்புகளை கவனத்தில் கொண்டும், தேசிய சூரிய மின்னாற்றல் இயக்கத்தின் ஒருபகுதியாக 2022’க்குள் 100 GW சூரிய மின் ஆற்றலை உற்பத்திசெய்யும் இலக்கை அடையும் குறிக்கோளை கவனத்தில்கொண்டும் INS கலிங்கா -வில் இரண்டு MW சூரிய ஒளிமின்னழுத்த உற்பத்திப்பிரிவை விசாகப்பட்டினத்தில் துணை அட்மிரல் அதுல் குமார் ஜைன் தொடங்கிவைத்தார். கிழக்கு கப்பற்படைப் பிரிவில் உள்ள உற்பத்திப் பிரிவுகளில் இதுவே மிகப்பெரிய உற்பத்திப்பிரிவாகும். இதன் மதிப்பீட்டு ஆயுட்காலம் 25 ஆண்டுகளாகும்.
 30. பதிவுசெய்த வேலைதேடுவோருக்காக, மத்திய தொழிலாளர் நலன் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவைத்திட்டமானது TCS iON Digital Learning அமைப்புடன் இணைந்து இலவச ஆன்லைன், “வாழ்க்கைத்தொழில் பயிற்சி”யைத் தொடங்கியுள்ளது. இன்றைய சூழலில் தொழிற்துறை விரும்பக்கூடிய திறமைகளை இந்தப்படிப்பு அளிக்கும். மென்திறன் குறித்த இப் பயிற்சி, பெருவணிக நடைமுறைகளுடனான கற்பவர்களின் ஆளுமை மேம்பாட்டை அதிகரிப்பது, பயனுள்ள விளக்கவுரை ஆகியவற்றுடன் இதர தேவையான மென்திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும். அனைத்துப் பயிற்சிகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத்திட்டம் (National Career Service Project - NCS) தளத்தில் கிடைக்கும்.
 31. நேஷனல் ஜியோகிராபிக் அலைவரிசையானது மத்திய குடிநீர் மற்றும் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, ‘தூய்மை இந்தியா: இந்தியாவின் சுகாதாரப்புரட்சி’ என்ற படத்தை வெளியிட்டுள்ளது. இப் படம், அண்மையில், இந்திய குடியரசுத்தலைவருக்கான சிறப்புத் திரையிடலிலும், நேட் ஜியோ அலை வரிசையிலும் திரையிடப்பட்டது. இப்படம், தூய்மை இந்தியா இயக்க கிராமீனின் யூடியூப் சேனலிலும் கிடைக்கிறது. பல்வேறு ‘தூய்மை தூதர்கள்’, இத்திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ள திட்டத்துடனான தங்கள் தொடர்பைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
 32. தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் தரவின்படி, 2019-20ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.59 சதவீதமாக உள்ளது. இது, 3.8 சதவீதமாக இருக்கும் என கடந்த பிப்ரவரி மாதத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது. நிதிப் பற்றாக்குறை என்பது அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியாகும். இருப்பினும், மொத்த வரவுசெலவுத்திட்டத்தின் மதிப்பீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகும். வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டைவிட 0.5% அதிக பற்றாக்குறையை ஈடுகட்ட, நிதிப்பொறுப்பு மற்றும் வரவுசெலவுத்திட்ட மேலாண்மைச் சட்டத்தின் விடுபடு பிரிவை மத்திய நிதியமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.
 33. பாதுகாப்புக்கவுன்சிலின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஒரு புதுவிதமான வாக்களிப்பு நடைமுறையை ஐக்கிய நாடுகள் பொது அவை அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது. பேரளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் COVID-19 தொற்றின்போதான சமூக விலகலை உறுதி செய்வதுவுமே இம்மாற்றத்திற்கான காரணமாகும். வழக்கமாக, ஐ.நா. தலைமையகத்தில் குதிரை லாட வடிவில் அமைக்கப்பட்டுள்ள சட்டசபை அறையில் சட்டசபை கூடுகிறது. ஆனால் தற்போது, 193 ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதர்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்திலும் நேரத்திலும் இரகசிய வாக்குகளை செலுத்துவார்கள்.
 34. ஆண்டுதோறும் வெளியிடப்படும் அதிக சம்பளம்வாங்கும் விளையாட்டு ஆளுமைகளுக்கான போர்ப்ஸ் தரவரிசையில், சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவ்விதழின் கூற்றுப்படி, பெடரரின் மொத்த வருவாய் $106.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதன் பரிசுத்தொகை மட்டும் அவருக்கு $6.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டித்தந்துள்ளது.  அவரைத்தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாமிடத்திலும், லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காமிடத்திலும் உள்ளனர். நவோமி ஒசாகா மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் பட்டியலின் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளாக உள்ளனர்.
 35. சத்தீஸ்கர் மாநில அரசு தங்களது 2020-21ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் பரிசீலனைக்கும், அனுமதிக்குமாக சமர்ப்பித்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டுக்குள் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நீண்டகால அடிப்படையில் குறிப்பிட்ட தரத்தில் போதுமான அளவில் குடிநீரை வழங்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஜல்சக்தி அமைச்சகமானது ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக `3.60 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டம், மாநிலத்தில் உள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு தர திட்டமிட்டுள்ளது. இந்த மாநிலத்தில், 2020-21ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த இந்திய அரசு `445 கோடியை அனுமதித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்துக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நீர் வழங்கல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
 36. பிரேசில் (B), இரஷ்யா (R), இந்தியா (I), சீனா (C), தென்னாப்பிரிக்கா (S) ஆகிய நாடுகளை உள்ளடக்கிய BRICS அமைப்பின் வரித்துறைத் தலைவர்களின் கூட்டத்தை, தற்போது அதன் தலைமைப் பதவியை வகித்துவரும் இரஷ்யா நடத்தியது. இந்தக் கூட்டம், மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் COVID-19 தொற்றை முன்னிட்டு, இது காணொளிக்காட்சிமூலம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில், மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் Dr அஜய்பூஷன் பாண்டே கலந்துகொண்டார். வரி விஷயங்களில் ஒத்துழைப்பின் கூறுகளை ஆராய்வதற்கான சாத்தியங்கள் மற்றும் வரி அதிகாரிகளின் தீர்வுமொழிகள் ஆகியவை இதன்சமயம் விவாதிக்கப்பட்டன.
 37. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு உதவுவதற்காக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ‘சோடார்’ என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச்செயலி மிகை மெய்ம்மை (Augmented Reality) என்னும் வசதியை பயன்படுத்தி இயங்குகிறது. இந்த அம்சம், பயனரின் ஆண்ட்ராய்டு திறன்பேசி நிழற்படக்கருவிகளில் ஒன்றிணைந்து இயங்குகிறது.  இந்த அம்சத்தினை இயக்கியதும், பயனர்களை இது ஒரு வட்டத்தில் நிறுத்துகிறது. திறன்பேசியினை வைத்துக்கொண்டு நடக்கும்போது, பயனர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமானால், திரையில் அதற்கான எச்சரிக்கை தகவல் தெரியும். முன்னதாக, ஐ.நா. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆய்வகங்கள், புளூடூத் சமிக்ஞையைப் பயன்படுத்தி இயங்கும் ஓர் இலவச சமூக இடைவெளி பயன்பாட்டை, ‘1point5’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தது.
 38. கேரள நுண்ணிழை ஒளியிய வலையமைப்புத் திட்டமானது (Kerala - Fibre Optic Network) 2020 டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்கும் பிறருக்கும் மலிவு விலையில் இலவச இணைய வசதியை வழங்குவதே `1,500 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் நோக்கமாகும். இதை கேரளமாநில IT உட்கட்டமைப்பு நிறுவனமும் கேரள மாநில மின்சார வாரியமும் செயல்படுத்துகின்றன. கேரள மாநில மின்சார வாரியத்தின் மின் கம்பங்களைப்பயன்படுத்தி, மாநிலம் முழுவதும் ஒளியிழை வடங்கள் பதிக்கப்படவுள்ளன.
 39. கோவா இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாகவும் உள்ளது. அண்மையில் இது தனது மாநில நாளை மே.30 அன்று கொண்டாடியது. 1961ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் விஜய்’மூலம் இந்திய ராணுவம் கோவா, டாமன் & டையூ ஆகியவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது. அதன்பிறகு கோவா, டாமன் மற்றும் டையூவுடன் இணைந்து இந்தியாவின் மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த 1987 மே.30 அன்று அந்த யூனியன் பிரதேசம் பிளவுபட்டு, கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. டாமன் மற்றும் டையூ தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே இருந்தது.
 40. COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக உத்தரகண்ட் மாநில அரசு, அண்மையில், “முக்கிய மந்திரி ஸ்வரோஜ்கர் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையில் `25 இலட்சம் வரையிலும், சேவைத் துறையில் `10 இலட்சம் வரையிலுமான கடன்களை உத்தரகண்ட் அரசு வழங்கும். மாநிலத்திற்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இவ்வகை கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின்மூலம் விண்ணப்பதாரர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
 41. சமீபத்தில் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்ட ஓர் உத்தரவின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக கணினி கோப்புப்பகிர்வு வலைத்தளமான, ‘We Transfer’ஐத் தடைசெய்ய அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் (ISP) அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் ‘We Transfer’ வலைத்தளத்தில் உள்ள இரண்டு பதிவிறக்க இணைப்புகளையும், முழு வலைத்தளத்தையும் தடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ‘We Transfer’ என்பது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவப்பட்ட, ஓர் இணைய அடிப்படையிலான கணினி கோப்புப்பரிமாற்ற சேவைத்தளமாகும்.
 42. மூன்று பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை பதவிக்கான நியமனத்தை மேற்கொள்ள சமீபத்தில் வங்கி வாரிய பணியகம் (BBB) பரிந்துரை செய்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அடுத்த மேலாண்மை இயக்குநராக அஸ்வனி பாட்டியாவை நியமிக்க BBB பரிந்துரை செய்துள்ளது. அஸ்வனி பாட்டியா, தற்போது SBI’இன் துணை மேலாண்மை இயக்குநராக உள்ளார். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மாதம் வெங்கட் ராவையும், இந்திய ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக PP செங்குப்தா அவர்களையும் நியமிக்க அவ்வாரியம் பரிந்துரைத்துள்ளது.
 43. G7 என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய உலகின் மிகப்பெரிய ஏழு பொருளாதாரங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும். முன்னதாக இது இரஷ்யாவை உள்ளடக்கியிருந்தபோது G8 என அழைக்கப்பட்டது. 47ஆவது G7 உச்சிமாநாடு முதலில் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் நகரத்தில் 2020 ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அண்மையில், இந்த 47ஆவது உச்சிமாநாட்டை செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கி G7 கூட்டமைப்பை விரிவுபடுத்தவும் அவர் அப்போது பரிந்துரைத்தார்.
 44. இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை மதிப்புமிக்க இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி யாதவ் உள்ளிட்ட பிற கிரிக்கெட் வீரர்களை BCCI பரிந்துரைத்துள்ளது. விருதுகளுக்கான பரிசீலிப்பு காலம் 2016 ஜன.1 முதல் 2019 டிசம்பர் 31 வரையாகும். கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் ரோகித் சர்மா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
 45. இளையோருக்கான பொறுப்புள்ள செயற்கைப்புலனறிவு (AI)” என்ற இளையோருக்கான தேசியத் திட்டத்தையும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் சட்டம், நீதித்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார். இந்தத்திட்டத்தின் நோக்கம் என்பது நமது நாட்டில் உள்ள இளம் மாணவர்களுக்கு செயற்கைப் புலனறிவுத்தொழினுட்பங்களைக் கிடைக்கச்செய்வதாகும். இந்தத்திட்டத்தை இன்டெல் இந்தியாவுடன் இணைந்தும், மத்திய மனிதவள மேம்பாட்டமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையின் ஆதரவுடனும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்னாளுகைப் பிரிவு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டுகாலம் நிறைவடைந்ததை ஒட்டி, www.ai.gov.in என்ற பெயரில் இந்தியாவின் தேசிய செயற்கைப்புலனறிவு வலைத்தளத்தை மத்திய மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார். மின்னணுவியல் & IT அமைச்சகம் மற்றும் IT நிறுவனங்கள் இணைந்து இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளன. மின்னணுவியல் & IT அமைச்சகத்தின் தேசிய மின்னாளுகைப்பிரிவு மற்றும் IT தொழில்துறையின் NASSCOM ஆகியவை இணைந்து இந்த வலைத்தளத்தை இயக்கும்.
 46. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1 அன்று உலக பால் நாள் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் நாள், 2001ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பாலின் பங்கை சிறப்பித்துக்காட்டுவதற்கும், பால் மற்றும் பால் தொழிற்துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவதற்குமாக ஐ.நா அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஜூன்.1ஆம் தேதியை உலக பால் நாளாக தேர்வுசெய்தது. “20th Anniversary of World Milk Day” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். மே 29-31 வரை, ‘Enjoy Dairy Rally’ என்ற மெய்நிகர் பரப்புரை பேரணியும் நடந்தது.
 47. உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, ஒடிசா, சிக்கிம் மற்றும் மிசோரம் ஆகிய 3 மாநிலங்கள் அண்மையில், ‘ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை’த் திட்டத்தில் திட்டத்தில் இணைந்துள்ளன. இதன்மூலம், இந்தத்திட்டத்தில் சேர்ந்துள்ள மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.  இந்த முயற்சியில், மத்திய தேசிய தகவலியல் மையத்தின் குழுவினரோடு இணைந்து, இந்த மூன்று மாநிலங்களை தேசியத்தொகுப்புடன் இணைக்கத்தேவையான தயாரிப்பு நடவடிக்கைகளான மின்ன -ணு விற்பனை முனையக்கருவி (e-PoS) மென்பொருளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டத்தில் சேர தேவையான உட்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
 48. ஜூன்.1ஆம் தேதியை உலக பெற்றோர் நாளாக 2012’இல் ஐ.நா பொது அவை அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன்.1 அன்று உலக பெற்றோர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கெளரவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சமூக மேம்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில், UNGA, 1994ஆம் ஆண்டை பன்னாட்டு குடும்ப ஆண்டாகவும், ஒவ்வோர் ஆண்டும் மே.15’ஐ பன்னாட்டு குடும்ப நாளாகவும் அறிவித்தது.
 49. உத்தரகண்ட் மாநில கால்நடை பராமரிப்புத்துறையின் சோதனை அறிக்கையின்படி, தொகுக்கப்பட்ட உத்தரகண்ட் மாநில ஆடுகளின் கம்பளியின் தரம் மெரினோ செம்மறி கம்பளிக்கு ஒத்ததாக உள்ளது. ஆஸ்திரேலிய மெரினோ செம்மறி கம்பளி அதன் சிறந்த அமைப்புக்காக, ஜவுளித்தொழிலில் உலகம் முழுவதும் பிரபலமானதாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 8000 மெட்ரிக் டன் கம்பளியை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டின் தேசிய கால்நடைத் திட்டத்தின்கீழ், உத்தரகண்ட் 250 மெரினோ ஆடுகளை வாங்கியது. பொருத்தமான இனப்பெருக்கத் திட்டங்களுடன், உத்தரகண்ட் உயர்தரமான மெரினோ கம்பளியை உற்பத்திசெய்யவுள்ளது.
 50. மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனா (PMBJP) திட்டத்தை பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி மையங்களின் (PMBJK) வலையமைப்புமூலம் செயல்படுத்துகிறது. தரமான மருந்துகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கச்செய்வதும், நலவாழ்வுக்கான செலவுகளைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.இந்தத் திட்டம், 2020- 21ஆம் ஆண்டின் முதலிரண்டு மாதங்களில், `100.4 கோடி அளவிற்கு விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளன. 2019- 20ஆம் ஆண்டில் இதே காலத்தில் விற்பனை `40 கோடி என்ற அளவிற்கு இருந்தது. மார்ச், ஏப்ரல், மே 2020 வரையிலான காலத்தில் சுமார் `144 கோடி மதிப்பிலான தரமான, மலிவுவிலையிலான மருந்துப் பொருள்களை இந்த மையங்கள் விற்பனை செய்துள்ளன.
 51. விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஐ.நா அவை ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று உலக சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாடப்படுகிறது. “Celebrating Biodiversity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். இந்தச் சிறப்பு நாள், கொலம்பியாவில், ஜெர்மனியுடன் இணைந்து கொண்டாடப்பட்டது. தற்போது வரை சுமார் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிவை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது, “செயல்திறன்மிக்க கழிவு மேலாண்மைமூலம் பல்லுயிரைக்காத்தல்” என்ற அறிவுறுத்தல் தொடரைத் தொடங்கியுள்ளது.
 52. பிரதமரின் தனி செயலாளராக பணியாற்றிவந்த 1996ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரியான இராஜீவ் டாப்னோ, IAS உலக வங்கியின் நிர்வாக இயக்குநரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அயல்நாட்டில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு கூடுதலாக ஐந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இரவி கோட்டாவை அமைச்சராக (பொருளாதார) நியமித்ததும் இதிலடங்கும். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆலோசகராக (பொருளாதாரம்) லெகான் தாக்கரும், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குநரின் ஆலோசகராக H அதெலியும் அவ்வைவருள் அடங்குவர்.
 53. நகர்ப்புறங்களில் வனப்பகுதியை அதிகரிப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “நகர்ப்புற வனங்கள்” திட்டத்தை தொடங்கினார். நடப்பாண்டு (2020) உலக சுற்றுச்சூழல் நாளின் மெய்நிகர் கொண்டாட்டத்தின்போது, இந்தியா முழுவதும் 200 நிறுவனங்கள் மற்றும் நகரங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தங்கள் பகுதிகளில் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் இத் திட்டத்தில் பொதுமக்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டு, 145 கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.
 54. AFC மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டித்தொடர், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு அணிகள் பங்கேற்றுவந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான தொடரில் 12 அணிகள் களம்காணவுள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணி நேரடியாக பங்கேற்பது உறுதியாகி உள்ளது. 2023 FIFA மகளிர் உலககோப்பை கால்பந்து போட்டித்தொடருக்கான கடைசி தகுதிச்சுற்று போட்டியாகவும் இது அமையும்.
 55. நெடுஞ்சாலைகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறப்பதைத்தடுப்பது” குறித்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் தேசிய விழிப்புணர்வுப் பரப்புரையை இந்தியா தொடங்கியுள்ளது. உலக சுற்றுச் சூழல் நாளை முன்னிட்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி இதனை தொடங்கினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்வதாக அமைச்சர் அப்போது எடுத்துரைத்தார்.
 56. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையானது சிவகங்கை மாவட்டம் கீழடி தளத்தில் மேற்கொண்ட ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்கீழ், மதுரைக்கு அருகிலுள்ள மணலூரில் விலங்கொன்றின் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K பழனிசாமி, ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை, கடந்த பிப்ரவரி மாதத்தின்போது மதுரைக்கு அருகிலுள்ள கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களின் தொடங்கிவைத்தார்.  அங்கு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது, நெசவு, கால்நடை வளர்ப்பு, நீர் மேலாண்மை சார்ந்த பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பொருட்கள் அனைத்தும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப்பண்பாட்டுக்குரியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 57. சட்டத்துக்குப் புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்”, ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று அனுசரிக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகளால் மீன்வளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உணர்தலே இந்த நாளின் நோக்கமாகும். கடந்த 2017 நவம்பரில், ஐ.நா பொது அவை, ஜூன்.5ஆம் தேதியை இந்தச் சிறப்பு நாளாக அறிவித்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்நாள் கொண்டாடப்பட்டது. துறைமுக நிலை செயல்பாடுகள் குறித்த ஒப்பந்தமும் அதேநாளில் நடைமுறைக்கு வந்தது.
 58. இரஷ்யாவின் நிக்கல் தலைநகரம் என்று அழைக்கப்படும் நோரில்ஸ்கில் 60 கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்ந்தோடும் ஆம்பர்னே ஆற்றில், 20,000 டன் டீசல் எண்ணெய் கொட்டியதை அடுத்து அவசரகால நிலையை இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இந்த எண்ணெய் கசிவு ஆம்பர்னே ஆற்றின் மேற்பரப்பை செங்கல் சிவப்பு நிறமாக மாற்றியுள்ளது. நோரில்சுக் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் அமைந்துள்ள மாபெரும் எரிபொருள் தொட்டி இடிந்து விழுந்ததன் விளைவாக இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 59. உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) RK சிங், ‘#iCommit’ இயக்கத்தை தொடங்கிவைத்தார். அரசுகள், பெரு நிறுவனங்கள், பன்முக மற்றும் இருதரப்பு நிறுவனங்கள், சிந்தனை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் என்ற பரவலான பலரையும் ஒருங்கிணைப்பதாக இந்த முன்முயற்சி அமைந்துள்ளது. ‘#iCommit’ என்ற இந்த முன்முயற்சி, மத்திய மின்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தின்கீழ் எரிசக்தி சிக்கன சேவைகள் நிறுவனத்தின் (EESL) உந்துதலால் உருவாக்கப்பட்டது.
 60. ஐ.நா அதன் ஆறு அலுவல்பூர்வ மொழிகளான ஆங்கிலம், அரபு, ஸ்பானியம், சீனம், உருஷியம் மற்றும் பிரஞ்சு ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு மற்றும் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆறு தனி மொழி நாட்களைக் கொண்டாடுகிறது. ஜூன்.6, ஐக்கிய நாடுகள் உருஷிய மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது, சிறந்த உருஷிய கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கினின் பிறந்தநாளும் கூட. அவர், ‘நவீன உருஷிய இலக்கியத்தின் தந்தை’ எனக்கருதப்படுகிறார். அவரது பிரபலமான இலக்கியப் படைப்புகளுள் சில, “யூஜின் ஒன்ஜின்” என்ற புனைக்கதையும், “வெண்கல குதிரைவீரன்” என்ற தலைப்பில் அவரது கவிதையும் அடங்கும்.
 61. காவல்துறை பணியாளர்கள் தொடர்புடைய தற்கொலை சம்பவங்களை குறைப்பதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு, அண்மையில், ‘ஸ்பந்தன்’ என்னும் ஒரு பரப்புரையை அறிமுகப்படுத்தியது. மாவட்ட தலைமையகத்தில் பணிபுரியும் மனச்சோர்வடைந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மனநல மருத்துவர்கள் அல்லது உளவியலாளர்கள் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. யோகா வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஈராண்டுகளில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
 62. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1, “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” எனக் கூறுகிறது. அண்மையில், உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அது, முதல் பிரிவிலிருந்து, ‘இந்தியா’ என்ற பெயரை நீக்குவதற்கு முற்பட்டது. ‘பாரத்’ மற்றும் ‘இந்தியா’ இரண்டும் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் என்றும், இந்தியா ஏற்கனவே அரசியலமைப்பில் ‘பாரத்’ என்று அழைக்கப்படுகிறது என்றும் இந்திய தலைமை நீதிபதி சரத் பாப்டே கூறினார். அதேசமயம், மனுதொடர்பாக உரிய முடிவெடுக்க, நடுவணரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 63. நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற் –காக, ஜூன்.7 அன்று உலக உணவுப் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. ‘Food Safety, Everyone’s Business’ என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். உணவுப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நாடுகள், உள்நாட்டு சமூகம் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்குமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக நலவாழ்வு அமைப்பானது உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் கூட்டிணைந்து, உறுப்புநாடுகளை உணவுப் பாதுகாப்பு நாளைக் கொண்டாட வழிவகுக்கிறது.
 64. மத்திய பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விஷயங்களை ஆராய்வதற்காக பத்துபேர்கொண்ட பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.Ms. ஜெயா ஜேட்லி, அப்பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்புடைய துறைகளின் செயலாளர்கள், முன்னாள் அலுவலர்கள் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு தாய்மை அடையும் வயது, பேறுகால உயிரிழப்பைக்குறைப்பதற்கான தேவைகள், ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பான விஷயங்களை ஆராயும்.
 65. புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக CSIR’உம், அடல் புத்தாக்க இயக்கமும் கூட்டிணைந்துள்ளன. பல்வேறு துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இரு அமைப்புகளுக்கும் இடையே விருப்ப ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடல் புத்தாக்க இயக்கத்தின்கீழ், புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கான CSIR மையங்கள் மூலம் உலகத்தரம்வாய்ந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆதரவு தெரிவிப்பது; CSIR புத்தாக்கப் பூங்காக்கள் உள்ளிட்ட புதிய புத்தாக்க மாதிரிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு ஆதரவு அளிப்பது; ARISE அமைப்புடன் இணைந்து சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறைக்கான புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிகளை CSIR ஊக்குவிப்பது ஆகியவை அவ்வொப்பந்தத்தின் முக்கிய கூறுகளாகும்.
 66. உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் ஆந்திர முதலமைச்சர் Y S ஜெகன் மோகன் ரெட்டி, அண்மையில் ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மேலாண்மைக் கழகத்தை ஜூன்.5ஆம் தேதி அன்று தொடங்கினார். தொழிற்சாலைக் கழிவுகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அறிவியல் பூர்வமாக அதனை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட பணிகளை மாநகராட்சி செய்யும். தொழிற்சாலைகள், ஆந்திர பிரதேச அரசால் பிறப்பிக்கப்பட்ட கழிவு மேலாண்மை நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதையும் அது உறுதிசெய்யும்.
 67. பன்னாட்டு வானூர்தி நிலைய கவுன்சிலின் ஆசியா-பசிபிக் பசுமை வானூர்தி நிலைய அங்கீகாரம் 2020’இல் ஹைதராபாத் பன்னாட்டு வானூர்தி நிலையம் மிகவுயர்ந்த பிளாட்டினம் அங்கீகாரத்தைப் பெற்றது. GMR குழுமத்திற்குச் சொந்தமானதும் அதாலேயே இயக்கப்படுவதுமான இந்த நிலையம், ஆண்டுக்கு 15-35 மில்லியன் பயணிகளைக் கையாளும் பிரிவில் இவ்வங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
 68. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEBI) தனது ‘பண்டங்கள் பங்குகள் ஆலோசனைக்குழு’வை மீண்டும் அமைத்துள்ளது. அண்மைய அறிவிப்பின்படி, 17பேர்கொண்ட இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற இ.ஆ.ப அதிகாரி அசோக் தல்வானி தலைமைதாங்குவார். இந்தக் குழு, ஒப்பந்த வடிவமைப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகள் தொடர்பான சிக்கல்களை ஆராய்வதோடு விநியோக வழிமுறை மற்றும் கிடங்குகள் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை கூறுகிறது. இக்குழுவில் BSE, NSE, NCDEX NITI ஆயோக், NABARD உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் உள்ளனர்.
 69. மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் ஓர் இணை அலுவலகமாக புது தில்லியிலிருந்து செயல்படும் நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடம், இணையவழிமுலம், ‘நைமிஷா’ 2020 - கோடைக்கால கலைநிகழ்ச்சியை 2020 ஜூன்.8 முதல் ஜூலை.3 வரை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி அதன் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் உடல்நலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாதவகையில், பயிற்றுவிக்கும் கலைஞர்களிடமிருந்து கலைப்படைப்புகள் குறித்து கற்றுக்கொள்வதற்கான ஒரு நல் வாய்ப்பை வழங்கும் முன்முயற்சியாகும்.
 70. இரஷ்யாவைச் சார்ந்த முன்னாள் உலக ரேபிட் சாம்பியனான டேனியல் டுபோவ், $150,000 டாலர் மதிப்பிலான லிண்டோர்ஸ் அபே ரேபிட் சேலஞ்ச் செஸ் பட்டத்தை வென்றுள்ளார். 24 வயதான அவர், கடந்த இரண்டு போட்டிகளில் தனது சகநாட்டு வீரரான செர்ஜி கர்ஜாகினையும் சீனத்து வீரரான டிங் லிரனையும் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில், 3-2 என்ற புள்ளிக்கணக்கில், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகாமுராவை வீழ்த்தி வெற்றியடைந்தார். டேனியல் டுபோவ் தனது பதினான்காம் வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். மேலும், கடந்த 2018ஆம் ஆண்டில் உலக ரேபிட் சாம்பியனானார்.
 71.  உலக பெருங்கடல்கள் நாளானது (World Oceans Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8 அன்று உலகம் முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. பெருங்கடல்களைக் கொண்டாட மக்களை ஊக்குவிப்பதற்கும், கடல் நலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “Innovation for a Sustainable Ocean” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.  கடந்த 1992ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சிமாநாட்டில், உலக பெருங்கடல்கள் நாளைக் கொண்டாடுவதற்கான கருத்தை கனடா நாடு முன்மொழிந்தது. 2008 டிசம்பரில், ஐ.நா அவை ஜூன்.8ஆம் தேதியை உலக பெருங்கடல்கள் நாளாக நியமித்து அறிவித்தது.
 72. உத்தரகண்ட் மாநில தலைமைச்செயலரின் சமீபத்திய அறிவிப்பின்படி, சாமோலி மாவட்டத்தில் உள்ள கேர்சைன் நகரம் உத்தரகண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் ஆளுநர் பேபி இராணி மெளரியாவும் இந்த முடிவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்போதுள்ள தலைநகரமான டேராடூனிலிருந்து 270 கி.மீ தொலைவில் கேர்சைன் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கோடைகால தலைநகரத்தை அறிவிப்பது என்பது மலைப்பாங்கான பகுதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 73. உலக மூளைக்கட்டி நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8ஆம் தேதியன்று உலகம் முழுமைக்கும் அனுசரிக்கப்படுகிறது. மூளைக்கட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதுகுறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதும் அன்றைய நாளின் நோக்கமாகும். உலக மூளைக்கட்டி நாளை, தொடக்கத்தில், லீப்ஜிக்கைச் சார்ந்த இலாபநோக்கற்ற அமைப்பான ஜெர்மன் மூளைக்கட்டி சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டில் நியமித்து அறிவித்தது. பின்னர் இது, உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அனுசரிப்பு, இந்தத்துறைசார்ந்த கூடுதல் ஆராய்ச்சிகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
 74. மிஷன் சாகரின் ஒருபகுதியாக, இந்திய கடற்படைக் கப்பலான கேசரி, செஷல்சில் உள்ள விக்டோரியா துறைமுகத்துக்கு சென்றடைந்தது. COVID-19 பெருந்தொற்று காலத்தில், நட்புநாடுகளுக்கு இந்திய அரசு உதவி வருகிறது. இதனையொட்டி செஷல்ஸ் நாட்டு மக்களுக்கு, COVID-19 தொற்று தொடர்பான அத்தியாவசிய மருந்துகளை INS கேசரி கப்பல் எடுத்துச்சென்றுள்ளது. வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, முன்னர் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட, “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு & வளர்ச்சி” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
 75. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பதிவு விவரங்களை வழங்கும் 1 செ.மீ அகல பச்சை நிற ஒட்டி, அனைத்து BS 6 இணக்கமான மோட்டார் வாகனங்களிலும் ஒட்டப்படவேண்டும். இந்த உத்தரவு 2020 அக்டோபர்.1 முதல் அமலுக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அனைத்து மோட்டார் வாகனங்களிலும் கிழித்தெறியவியலாத, உயர்பாதுகாப்புகொண்ட பதிவெண் தகடுகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்தப் பச்சைநிறப்பட்டை, பதிவெண் தகட்டுக்கு மேலே ஒட்டப்படும். இது, பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனத்திற்கு வெளிர்நீலவண்ணப் பட்டையாகவும், டீசல் வாகனங்களுக்கு ஆரஞ்சுநிறப்பட்டையாகவும் இருக்கும்.
 76. தனித்தப் போக்குவரத்துக்காக வான்படை மீட்புக்கருவி ஒன்றை (Airborne Rescue Pod for Isolated Transportation - ARPIT) இந்திய வான்படை, உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. தொலைதூர, தனித்த, மிகவும் உயரமான பகுதிகளில் COVID-19 உட்பட நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, நெருக்கடி நிலையிலுள்ள நோயாளிகளை வெளியேற்றிக்கொண்டு வருதற்கு இந்தக்கருவி பயன்படுத்தப்படும்.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவி `60,000 செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இதேபோன்ற கருவிகளின் விலையான `60 இலட்சத்துடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவாகும். தற்போதைய நிலவரப்படி, இந்திய வான்படை 7 ARPIT’களை உருவாக்கியுள்ளது.
 77. யேல் பல்கலையால் ஈராண்டுக்கொருமுறை வெளியிடப்படும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டின் (EPI குறியீடு 2020) 12ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறனை அளவிடும் இக்குறியீட்டில், இந்தியா நூற்றுக்கு 27.6 மதிப்பெண்ணுடன் 168ஆவது இடத்தைப்பிடித்தது. கடந்த ஆண்டு, 30.57 மதிப்பெண்கள் பெற்று 177ஆவது இடத்தை இந்தியா பிடித்திருந்தது. டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்த இடங்களில் லக்சம்பர்க் மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தக் குறியீட்டில் 24ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
 78. இந்திய கவிஞரும் எழுத்தாளருமான ஜாவெத் அக்தர், நடப்பாண்டிற்கான (2020) மதிப்புமிக்க ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதைப் பெறுவதன் மூலம், இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆங்கில பரிணாம உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் பெயரால் இது வழங்கப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை, பகுத்தறிவுவாதத்தின் கூறுகளை வெளிப்படையாக அறிவித்து அறிவியல் பூர்வமாக மெய்யினை நிலைநிறுத்தும் அறிவியல், கல்வி அல்லது பொழுதுபோக்கு ஆகிய துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 2003’லிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
 79. சுங்க வரி மற்றும் மாநகராட்சி வரியிலிருந்து வசூல் குறைந்துவருவதால், மத்திய வரிகளின் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2019-20ஆம் நிதியாண்டில் 9.88%ஆக குறைந்தது. 2018-19ஆம் நிதியாண்டில் 10.97 சதவீதமாகவும், 2017-18ஆம் நிதியாண்டில் 11.22 சதவீதமாகவும் இருந்த இந்த விகிதம், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கநிலை காரணமாக, இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. மொத்த வரி வருவாயும், 2019-20ஆம் நிதியாண்டில் 3.39% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது, இவ்வாண்டின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட இலக்குடன் ஒப்பிடும்போது `1.5 டிரில்லியன் பற்றாக்குறையாகும்.
 80. வரிசெலுத்துவோர் வசதிக்காக குறுஞ்செய்திமூலம் GSTR – 3B விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து NIL GST மாதாந்திர வரிக்கணக்கைத் தாக்கல்செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது. இது 22 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்த வரி செலுத்துவோருக்கு GST வரி செலுத்தும் இணக்கத்தைக் கணிசமாக மேம்படுத்துகிறது. அவர்கள் பொதுவான இணையதளம்மூலம் தங்கள் கணக்கில் உள்நுழைந்து ஒவ்வொரு மாதமும் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யவேண்டும்.  தற்போது, NIL கணக்கைத் தாக்கல்செய்வோர் இந்த GST இணையதளத்தில் உள்நுழைய தேவை இல்லை. மேலும் குறுஞ்செய்திமூலம் தங்கள் NIL கணக்கை தாக்கல்செய்யலாம். இந்நோக்கத்திற்காக, குறுஞ்செய்திமூலம் NIL Form GSTR–3B’ஐ தாக்கல்செய்வதற்கான செயல்பாடு GSTN வலைத்தளத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எளிதான வரிசெலுத்தும் நடைமுறைகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் 190 நாடுகளுள் இந்தியா 115ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.
 81. 2019 ஏப்ரல் - 2020 மார்ச் வரையான காலகட்டத்தில், இந்திய இரயில்வே மிகச்சிறந்த பாதுகாப்பு சாதனையைப் பதிவுசெய்துள்ளது. இந்த ஆண்டு (01.04.2019 முதல் 08.06.2020 வரை) எந்தவொரு இரயில் விபத்திலும் எந்தவொரு இரயில் பயணிக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. 166 ஆண்டுகளுக்கு முன்பு 1853ஆம் ஆண்டில், இந்தியாவில், இரயில்வே அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 2019-2020ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை அடையப்பட்டுள்ளது. மனிதர்களால் இயக்கப்படும் 1274 இருப்புப்பாதை கடவுகள் 2019-2020’இல் அகற்றப்பட்டுள்ளன. இதுவே மனிதரால் இயக்கப்படும் இருப்புப்பாதை கடவுகளை (level-crossing) அகற்றுவதில் உச்சபட்ச எண்ணிக்கையாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன மற்றும் பல்வேறு தண்டவாளங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
 82. நடப்பு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவில் `101,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அதிக அளவில் ஒதுக்கப்பட்ட நிதி இதுவே. 2020-21ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக `31,493 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் 50 சதவீதம் அதிகமாகும்.
 83. ஆசியாவின் நோபல் பரிசு” எனக்கருதப்படும் ரமோன் மகசேசே விருதுகள், COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில், இவ்விருதுகள் இரத்து செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, கடந்த 1970ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் 1990ஆம் ஆண்டில் பிலிப்பைன்சைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கம் ஆகியவற்றின் காரணமாக இவ்விருதுகள் இரத்து செய்யப்பட்டன.இந்த விருதுகள், மணிலாவைச்சார்ந்த ஓர் அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் குடியரசின் மூன்றாவது தலைவராக இருந்தவரின் பெயரால் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 84. இந்திய சூரிய மின்னாற்றல் கழகத்தின் சூரிய மின்னுற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அதானி தூய ஆற்றல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த உற்பத்தித் திறன், 8 GW என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 GW சூரிய ஆற்றலைச் சேமிக்கும் மின்கல உற்பத்தி திட்டத்தையும் அது செயல்படுத்தவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு `45 ஆயிரம் கோடியாகும். இந்த ஒப்பந்தத்தின்மூலம், தற்போது அதானி தூய ஆற்றல் நிறுவனத்தின் வசமிருக்கும் சூரிய மின்னுற்பத்தி திட்டத்தின் திறன் 15 GW (கிகாவாட்) ஆகும்.
 85. வந்தே உத்கல ஜனனி’ என்னும் பாடலை ஒடிசாவின் மாநில அமைச்சரவை அண்மையில் அதன் மாநில கீதமாக ஏற்றுக்கொண்டது. கவிஞர் லட்சுமிகனாதா மோகபத்ரா என்பவரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், முதன்முதலில் 1912’இல் பாலசூரில் நடைபெற்ற உத்கல் சம்மிலானியின் மாநாட்டில் பாடப்பட்டது. இப்பாடலுக்கு, ‘மாநில கீதம்’ என்ற அந்தஸ்தை வழங்கவேண்டும் என்பது ஒடிசா மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அதிகாரப்பூர்வ பாடல் வெளியானபிறகு, ஒடிசா மாநிலத்தின் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் ஒலிக்கப்படும்.
 86. மின்-கற்றலை மேலும் பயனுள்ளதாக்கும் வகையில், அனைத்து தேசிய கல்வி, ஆராய்ச்சிக்குழுமத்தின் (NCERT) தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, NCERT’உம் ரோட்டரி இந்தியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ முன்னிலையில் டிஜிட்டல் முறையில் புது தில்லியில் கையெழுத்தானது. 1-12ஆம் வகுப்புவரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை இணையவழிகற்றல்மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல், ‘வித்யா தான் 2.0’ என்ற திட்டத்தின்கீழ் NCERT’இடம் அளிக்கும். இதுமட்டுமன்றி, சிறப்புத்தேவைகள் உள்ள சிறார்களுக்காக பாடங்களை அவர்களுக்கேற்ற வகையில் வடிவமைத்து ரோட்டரி அமைப்பு அளிக்கும்
 87. ஊனீர் (plasma) பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக, ‘ஷோஹோஜோதா’ என்ற பெயரில், வங்கதேசம், சமீபத்தில் ஓர் இணையவழி வலையமைப்பை அறிமுகப்படுத்தியது. இது COVID-19 தொற்றிலிருந்து குணமான நோயாளிகளுக்கும், COVID-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படுபவர்களுக்கும் இடையில் பரிமாற்றகமாக செயல்படுகிறது. இருப்பினும், வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிளாஸ்மா சிகிச்சைமுறை, இன்னமும் சோதனைமுறையிலேயே உள்ளது. அரசாங்கத்தின் இறுதி ஒப்புதலுக்காக இது காத்திருக்கிறது.
 88. $4.6 பில்லியன் டாலர் செலவிலான Grand Ethiopian Renaissance Dam (GERD), எத்தியோப்பியாவின் மிகப்பெரிய திட்டமாகும். இந்த அணை நீல நைல் நதியில் அமைந்துள்ளது. இதன் கட்டுமானம் கடந்த 2011ஆம் ஆண்டில் தொடங்கியது. சமீபத்தில் நைல் படுகை நாடுகளான எத்தியோப்பியா, எகிப்து மற்றும் சூடான் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத்தொடங்கின. எத்தியோப்பியா ஒரு பெரிய மின்னுற்பத்தியாள -ராக மாற விரும்பும் அதேவேளையில், இத்திட்டம், எகிப்திற்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தும் என எகிப்து அஞ்சுகிறது. சூடான் இருநாடுகளையும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.
 89. வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் அங்கீகாரத்தின் பங்கை முன்னிலைப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உலக அங்கீகார நாள், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Accreditation: Improving Food Safety” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். இது, பன்னாட்டு அங்கீகார மன்றம் மற்றும் பன்னாட்டு ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தச் சிறப்புநாளை நினைவுகூரும் வகையில் இந்திய தர ஆணையம் (QCI) ஓர் இணையவழி கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.
 90. குஜராத் மாநில வனத்துறையின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் வசிக்கும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 29% அதிகரித்துள்ளது. சிங்கங்கள் வசிக்கும் பரப்பளவும், 36 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநில மக்களின் பங்களிப்பு காரணமாக ஆசிய சிங்கத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கொள்ளப்படும் நிலத்திட்டம் ஆசிய சிங்கங்களின் பாதுகாப்பிற்கு மேலும் உதவும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 91. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான `3 இலட்சம் கோடி அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், ஜூன்.9 வரை பொதுத்துறை வங்கிகள்மூலம் `12,200.65 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கிகள்மூலம் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த `2,637 கோடியிலிருந்து மொத்தம் `1,727 கோடியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து `1,225 கோடி நிதியை வழங்கி உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
 92. பன்னாட்டு சமயவுரிமைச்சட்டம், 1998’இன்படி, ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை ஆண்டுதோறும் ‘பன்னாட்டு சமயவுரிமை அறிக்கை’யை வெளியிட்டுவருகிறது. அமெரிக்க காங்ரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சமய உரிமையின் நிலையை விவரிக்கிறது.  இந்த அறிக்கை, இந்தியாவில் நிலவும் சமய உரிமை குறித்து கண்டனம் எழுப்பியதால் அது அண்மைய செய்திகளில் இடம்பெற்றது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 93. அண்மையில், பெண்கள் கால்பந்து போட்டிக்கு தொழிற்முறை அந்தஸ்தை ஸ்பெயின் வழங்கியுள்ளது. ஸ்பானிஷ் கூட்டமைப்பின் கூற்றுப்படி, ஸ்பெயினில் உள்ள இரண்டு முன்னணி பெண்கள் கால்பந்து பிரிவுகளும் தொழிற்முறை தகுதியைப்பெற்றுள்ளன. இம்முடிவு தொழிற்முறையற்ற கால்பந்து என்று கருதப்பட்ட இந்தப் போட்டிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் விளையாட்டுக்குழுவும் இப்போட்டிகளுக்கான தகுதியை ஒப்புக்கொண்டுள்ளது. இது, நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து போட்டிகளுக்கும் செல்லுபடியாகும்.
 94. திருவனந்தபுரம்–காசர்கோடு அரை அதிவேக இரயில் வழித்தடம் (அ) ‘சில்வர் லைன்’ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடுக்கு இடைப்பட்ட 529.45 கி.மீ., தொலைவை 4 மணிநேரத்தில் கடப்பதே, ‘சில்வர் லைன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வழித்தடத்தின் நோக்கமாகும். • இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான கேரள இரயில் மேம்பாட்டுக்கழகம் லிட் (கே-இரயில்) என்பது இந்திய இரயில்வே மற்றும் கேரள அரசின் ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்த வழித்தடத்தில், புதுச்சேரியின் மாகேவைத்தவிர்ப்பதற்காக, அமைச்சரவை, இத்திட்டத்தில் சிறுமாற்றம் மேற்கொண்டது. இத்திட்டத்திற்கான தோராய செலவு `63,941 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் இந்தத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 95. பவள முக்கோண நாளானது ஒவ்வொரு ஜூன்.9 அன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பவள முக்கோணம் என்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆறு நாடுகளில் (இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள் & திமோர் லெஸ்டே) பரவியிருக்கும் கடற்பரப்பாகும். இந்நாடுகள், “CT6” நாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. • பவள முக்கோணத்தின் வளமான கடல்சார் வளங்களால் பயனடைகின்ற அனைத்து நாடுகளும் இந்த நாளை கொண்டாடுகின்றன. காங்கோ வடிநிலப்பரப்பு மற்றும் அமேசான் மழைக்காடுகளுடன் சேர்த்து நமது புவியில் உள்ள மூன்று மிகப்பெரிய சுற்றுச்சூழல் வளாகங்களுள் இதுவும் ஒன்றாகும்.
 96. தென்கிழக்காசிய நாடுகள் COVID-19 தொற்றுச்சூழலைக் கையாளுவதற்கு உதவும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா முன்னணி வல்லுநர்கள் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவை ADB துணைத்தலைவர் அகமது M சையீத் நிர்வகிக்கிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன் நிதி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கட்டமைப்பு சீர்திருத்தங்கள், உள்நாட்டு வள அணிதிரட்டலில் புதுமை ஆகியவற்றில் இந்தக்குழு தனது முழுகவனத்தையும் செலுத்தும்.
 97. இந்திய அரசின், “திறன் இந்தியா” திட்டத்துக்கு அழுத்தந்தரும்வகையில், தேசிய உரங்கள் நிறுவனம், தொழிற்பயிற்சி மையங்களுடன் (ITI) இணைந்து இளையோர்களுக்கு, பல்வேறு தொழில்களில் பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு அருகிலுள்ள ITI’களுடன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள இளையோர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது. • கனரக தொழில்கள் உள்ளிட்ட பலதொழில்களில் இளையோர்கள் வேலைவாய்பைப்பெற இது உதவும். இதனையொட்டி தேசிய உரங்கள் நிறுவனத்தின், பஞ்சாபில் உள்ள நங்கல் தொழிற்சாலை அங்குள்ள ITI’உடன், இளைஞர்களுக்கு 12 தொழிற்துறைகளில் பயிற்சியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 98. கழிவு மேலாண்மையில் தலைசிறந்து விளங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனமான “ரெசிக்கல்” என்ற நிறுவனமானது நீடித்த நெகிழிக் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் இந்துஸ்தான் கோகோ-கோலா குளிர்பான நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.இது இந்திய அளவிலான பங்களிப்பாக “பிரித்திவி திட்டம்” என்று அழைக்கப் படுகின்றது.
 99. சிலி மற்றும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டகோனியப் பகுதியில் “மகலன்டோன் பைகாஷ்கென்க்” என்று அழைக்கப்படும் ஒரு உயிரினத்தின் பற்களைக் கண்டறிந்துள்ளனர். இது 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும்.
 100. PM CARES” நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் “ஒரு பொதுத் துறை ஆணையம் அல்ல” என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.எனவே RTI சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் இந்த நிதி குறித்து எந்தவொரு தகவலையும் வழங்க மறுக்கலாம்.
DOWNLOAD TNPSC JUNE CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES PDF

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel