தேசிய துப்பாக்கி சுடுதல்: அரியாணாவின் அனிசா செய்யது தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
- தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியாணாவின் அனிசா செய்யது தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட அனிசா, இறுதிச்சுற்றில் 33 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
- இதனிடையே, ஜூனியர் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மானு பேக்கர் தங்கம் வென்று அசத்தினார். அவரை உள்ளடக்கிய அணி ஜூனியர் சிவிலியன் அணிகளுக்கான பிரிவிலும் தங்கம் வென்றது. இது, மானு பேக்கர் இந்தப் போட்டியில் வெல்லும் 10 மற்றும் 11-வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதேபோன்று ஜூனியர் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அரியாணாவின் சிங்கி யாதவ், இறுதிச்சுற்றில் 31 புள்ளிகளை எட்டி தேசிய சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார்.
- அதே மாநிலத்தைச் சேர்ந்த கெளரி ஷியோரன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், மகாராஷ்டிரத்தின் சயி அசோக் காட்போல் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
தெற்கு ரயில்வேயில் அமலுக்கு வந்தது பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை
- தெற்கு ரயில்வேயில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு 'பயோ மெட்ரிக்' (விரல் ரேகை) வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வந்தது.
- 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறை இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு தொழிற் சங்கங்கள் இந்த முறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்த வருகை பதிவேடு முறை நவம்பர் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
- ஆதார் எண் அடிப்படை: ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, 'பயோ மெட்ரிக்' தொழில்நுட்பம் மூலம், ஊழியர்கள் வருகையைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ரயில்வேயில் மேற்கொள்ளப்படவுள்ளது.
- வருகைப் பதிவேடு இணையதளம்: ஊழியர்களின் அன்றாட வருகைப் பதிவேட்டை, அனைவரும் காணும் வகையில், www.attendance.gov.in என்ற இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பயோ மெட்ரிக் முறையில் 1.30 லட்சம் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டு விவரம் இடம் பெறும்.
மூங்கில் மசோதா நிறைவேற்றம்
- மூங்கிலை மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கும் மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- இதையடுத்து குரல் ஓட்டெடுப்பில் இந்த மசோதா நிறைவேறியது. மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால் மூங்கிலை வெட்டுவதற்கான தடை நீங்குவதால், பழங்குடியின மக்களின் வருவாய் அதிகரிக்கும்.
யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி
- சென்னையை சேர்ந்த பெண் தொடர்ந்து தொடர்ச்சியாக 6 நாட்கள் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சோந்தவா கவிதா பரணிதரன்.
- இவருக்கு சிறு வயதிலிருந்தே யோகா மீது ஆர்வம் இருந்துள்ளது. பல யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார். யோகாவில் கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்த கவிதா தொடர்ச்சியாக மாரத்தான் யோகா செய்வதனெ முடிவு செய்தார்.
இருப்புத் தொகை பராமரிக்காததால் எஸ்.பி.ஐ வங்கி அபராதம் வசூலி : மத்திய அரசு தகவல்
- குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததால் எஸ்.பி.ஐ வங்கி ரூ.1771.77 கோடி அபராதம் வசூலித்துள்ளது.
- 2017-18-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1771.77 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா : மக்களவையில் அறிமுகம் செய்தார் ஜே.பி.நட்டா
- தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அடமைச்சர் ஜே.பி.நட்டா அறிமுகம் செய்து வைத்தார். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்று மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
- இந்த மசோதா மூலம் போதிய அளவில் தரமான மருத்துவ நிபுணர்கள் இருப்பதை மருத்து ஆணையம் உறுதி செய்யும்.
எய்ட்ஸ் நோய் தொற்று இல்லாத யூனியன் பிரதேசம் புதுச்சேரி
- புதுச்சேரியை எய்ட்ஸ் நோய் தொற்று இல்லாத யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக சுகாதார இயக்குநர் ராமன் தெரிவித்தார்.
உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டம் : 14 ஆண்டுகளுக்குப் பின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி
- உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றி உள்ளார்
- சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக விரைவு செஸ் சாம்பியனுக்கான போட்டி நடை பெற்றது. இதில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற போட்டியில் மேக்னஸ் கார்ல்செனை விஸ்வநாதன் ஆனந்த் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- நேற்று நடந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் விளாதிமீர் ஃபெடொசீவை தோற்கடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இந்தப் போட்டியில் இவர் 29 நகர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் இவர் சுமார் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டன்: பாரம்பரிய ஆற்றலை விஞ்சிய பசுமை ஆற்றல் உற்பத்தி
- பசுமை ஆற்றல் உற்பத்தியில் புதிய உச்சங்களை பிரிட்டன் தொட்டு இருப்பதாக, அந்த நாட்டின் தேசிய மின்சார விநியோக அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
- புதுபிக்கத்தக்க ஆற்றல்களான காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் ஆகியவை அந்நாட்டின் மின்சார தேவையில் இந்த ஆண்டு முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. அதாவது நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆற்றலைவிட, காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் தயாரிக்கப்பட்ட ஆற்றலின் அளவு அதிகம்.
- தொழிற்புரட்சி காலத்திலிருந்து, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முதல் முதலாக நிலக்கரி இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஆற்றலைக்கொண்டு, அதாவது மாற்று ஆற்றலைக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பிரிட்டன் இயங்கியது.
அதிக வாராக்கடன் நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம்
- வங்கி வாராக்கடன் அதிகமுள்ள நாடுகளில், இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது.'பிரிக்ஸ்' நாடுகளின் வங்கி துறையில், அதிகளவில் வாராக்கடனுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயின் உள்ளிட்ட, பி.ஐ.ஐ.ஜி.எஸ்., நாடுகளில், அதிக வாராக்கடனில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது.
- இப்பட்டியலில், முதல் நான்கு இடங்களில், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், இத்தாலி ஆகியவை உள்ளன. இந்தியாவின் வாராக்கடன் விகிதம், 9.85 சதவீதமாக உள்ளது.
- இது, அடுத்துள்ள ஸ்பெயின் நாட்டின், 5.28 சதவீதத்தை விட, 4 சதவீதம் அதிகமாகும்.ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், தென் கொரியா, பிரிட்டன் ஆகியவை, மிகக் குறைந்த வாராக்கடனை வைத்துள்ளன. இவற்றின் வாராக்கடன், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
- அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வாராக்கடன், 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நடுத்தர வாராக்கடன் பிரிவில், ஐரோப்பிய நாடுகள் சிலவும், பிரேசில், இந்தோனேஷியா, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய வளரும் நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
ஆசியாவின் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியாவுக்கு 12வது இடம்
- ஆசியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.
- ஆசியாவில் உள்ள 37 நாடுகளில் வேலையில்லாத மக்கள் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 3.6 சதவீதமாகும். பூடானில் 2.4 சதவீதம், நேபாள் 3.2 சதவீதம், பாகிஸ்தானில் 5.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.
- சவுதி அரேபிய நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் வேலையில்லாத் திண்டாட்டம் 3.8 சதவீதமாகவும், சவுதி அரேபியாவில் 5.5 சதவீதமாகவும் உள்ளது.
- இலங்கை 4.6 சதவீதத்துடன் 17வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 5.3 சதவீதம், ஓமன் அதிகப்படியாக 16.9 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து ஏமன் 16 சதவீதம், ஜோர்டான் 14.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கழிப்பறை வசதி இல்லை
- தமிழகத்தில் 25 மாவட்டங்களில் உள்ள மக்களில் பலர் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடங்கள் குறித்து நாடு முழுவதும் மத்திய சுகாதாரத்துறை களப்பணி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்கள் மட்டுமே பெரும்பாலும் கழிப்பறை வசதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 மாவட்டங்களில் மக்கள் இன்னனும் சரியான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் உத்தரகாண்ட், சிக்கிம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
- முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது.
- இதையடுத்து அதற்கான சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதையடுத்து முத்தலாக்கை சட்டவிரோதம் என அறிவிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. 3 முறை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வோருக்கு கிரிமினல் குற்றமாக கருதி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
- இறுதியாக, முத்தலாக்கை தடை செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டன.
- இதனையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். மாநிலங்களவையில் நிறைவேறிய பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.
தனுஷ்கோடி புனரமைப்பு ரூ.1.36 கோடி ஒதுக்கீடு
- புயலால், 53 ஆண்டுகளுக்கு முன் உருக்குலைந்த சுற்றுலா பகுதியான தனுஷ்கோடி புனரமைப்புக்கு, 1.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வரலாற்று சிறப்பு மிக்க தனுஷ்கோடி நகரம்,1964 டிச., 22ல் வங்க கடலில் ஏற்பட்ட புயலின் கோரதாண்டவத்தால் உருக்குலைந்தது. பெரும் பகுதி கடலுக்குள் சென்றது.
- அழிவின் எச்சங்களாக உள்ள மாதா கோவில், ரயில் நிலையம், துறைமுகம் பகுதி, தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளன.
- அங்கு சுற்றுலா பயணியரின் வசதிக்காக கார் பார்க்கிங், பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்காக சுற்றுலாத்துறை சார்பில், 1.36 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
- கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- வாராக்கடன் பிரச்னையைக் கையாள மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும், அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திவால் சட்டத் திருத்தத்தை கடந்த நவம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது.
- இந்த அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இதற்கு மாற்றாக திவால் சட்டத் திருத்த மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.
- இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வாராக்கடன் நிறுவனங்களின் சொத்துகள் ஏலம் விடப்படும்போது, அந்த நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது.
- கடன் மோசடி செய்த நிறுவனங்கள் நிறுவன அமைப்புகளைப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள நிதியை வேறு வகையில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இந்தச் சட்டம் மூலம் அபராதமாக ஒரு லட்சம் மூலம் ரூ.2 கோடி வரை விதிக்கலாம்.
- மசோதாவைத் தாக்கல் செய்து மக்களவையில் பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி, 'வாராக்கடன் உருவாகக் காரணமானவர்கள், பின்வாசல் வழியாக கம்பெனி நிர்வாகத்தை கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார். இந்த மசோதா மாநிலங்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஜி.எஸ்.டி., இழப்பீடு : மாநிலங்களுக்கு ரூ.24,500 கோடி மத்திய அரசு அளிப்பு
- ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.24,500 கோடியை வரி இழப்பீடாக அளித்துள்ளது.
- ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பீட்டை சரி செய்வதாக மத்திய அரசு ஏற்கனவே உறுதியளித்திருந்தது. அதன்படி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாத காலத்தில் ரூ.24,500 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
- கர்நாடகா அதிகபட்சம் இதில் அதிகபட்சமாக கர்நாடகம் ரூ.3,271 கோடி இழப்பீடு பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக குஜராத் ரூ.2,282 கோடியும், பஞ்சாப் ரூ.2,098 கோடியும் பெற்றுள்ளன. பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம்
- திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 60 மாணவர்கள் படிக்கும் வகையில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். வேடசந்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.
- திண்டுக்கல் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை திண்டுக்கல் மாநகராட்சி, 7 பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- வேடசந்தூர் பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் வடிகால்கள் அமைக்கப்படும். குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.பில்லமநாயக்கன் பட்டியிலும், வடமதுரை ஒன்றியம், புத்தூரிலும் புதிய கால்நடை கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
- வேடசந்தூர் ஒன்றியம், ரெங்கநாதபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.11.68 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
- மேலும், ரூ.28.5 கோடி மதிப்பீட்டில் டிப்ளமேட் ஆப் நேஷனல் போர்டு(டிஎன்பி) மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்குவதுடன், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.
- ரூ.82.5 லட்சம் மதிப்பீட்டில் வளர் இளம் பருவத்தினர் பாதுகாப்புத் திட்டம் ஏற்படுத்தப்படும். அம்மையநாயக்கனூர் சமுதாய சுகாதார நிலையத்தில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி, பழனி அரசு மருத்துவமனைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.22 லட்சம் செலவில் டயாலிசிஸ் கருவி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- திண்டுக்கல்- குஜிலியம்பாறை- கரூர் சாலையில் உள்ள ரயில்வே கடவு பாதையில், ரூ.16.18 கோடி செலவில் சுரங்கப்பாதை கட்டப்படும்.
- திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி: திண்டுக்கல் நகருக்கு 19.25 கி.மீ நீளத்திற்கு புற வழிச்சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. நில எடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
ரூ.5,000 கோடி கடன் கோரும் மின்வாரியம்
- துாத்துக்குடி, விருதுநகரில் அமைய உள்ள பிரமாண்ட துணை மின் நிலையங்களுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடன் கேட்க மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.திருவள்ளூர், விழுப்புரம், கோவை, விருதுநகரில், 765 கி.வோ., திறனில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- அதில், விருதுநகரில் அமைய உள்ள துணை மின் நிலையத்திற்காக, தமிழக அரசின் வாயிலாக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, மின் வாரியம், கடன் கேட்க முடிவு செய்துள்ளது.
- திருவள்ளூர், விழுப்புரம், கோவையில் அமைக்கும் துணை மின் நிலையங்களுக்கு, மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' போன்ற நிறுவனங்கள், கடன் வழங்க உள்ளன.
- விருதுநகரில், 4,000 கோடி ரூபாய் செலவில், 765 கி.வோ., பிரமாண்ட துணை மின் நிலையம்; துாத்துக்குடியில், 1,000 கோடி ரூபாய் செலவில், 400 கி.வோ., துணை மின் நிலையம் மற்றும் அதற்கான வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் கேட்கப்பட உள்ளது. கடன் ஒப்புதல் கிடைத்ததும், கட்டுமான பணிகள் துவங்கப்படும்.
உலக யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவி
- முதுகுளத்தூர் அருகே உள்ளது பொசுக்குடிபட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்திரைசாமியின் மகள் காமாட்சி (22). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக் கழகத்தில் முதுநிலை யோகா முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த தேசிய யோகா போட்டிகளில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியிலும், காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியிலும் வெள்ளி பதக்கஙகளை வென்றுள்ளார்.
- துபாய் அபுதாயில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற மாணவி காமாட்சி முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். காலத்தால் கிடைத்த இந்த உதவியின் மூலம் மாணவி காமாட்சி தங்க பதக்கம் வென்று தான் அன்று சொன்னைதை நிறைவேற்றியிருக்கிறார்.
குற்றங்களை விசாரிக்க சிறப்பு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல்
- பத்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
- பத்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்து வரும் குற்றவியல் வழக்குகளை வரும் ஜனவரி 6 ஆம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குகள் குறித்த பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும்.
- எனவே 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து வழக்குரைஞர்கள் மற்றும் வழக்காடிகள் தெரியபடுத்தலாம். நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க வழக்குரைஞர்களும் வழக்காடிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.