
15th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்
- நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய், தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
- தவெக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதல் சுதந்திர தின விழா என்பதால், இந்த நிகழ்ச்சி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றது.
- முன்னதாக, விழா நடைபெற்ற இடத்துக்கு வெள்ளை நிற காரில் வந்த முதல்வர் விஜயை தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் வரவேற்றனர்.
- தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதையடுத்து காவல் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்று கொண்டார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வெள்ளை நிற ஜீப்பில் நின்றபடி அணிவகுப்பை பார்வையிட்டார்.
- அணிவகுப்பு ஆய்வை முடித்துக்கொண்ட முதல்வர் விஜய் கோட்டை கொத்தளத்திற்கு சென்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மூவர்ண கொடி பட்டொளி வீசி பறந்தபோது மலர்கள் தூவப்பட்டன.
- காவல்துறை இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அப்போது முதல்வர், முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
- இந்தியாவின் 80வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
- இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, நாட்டின் எதிர்கால வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, கல்வி மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
- விழாவில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசுகையில், 'நாட்டில் உள்ள 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் சிறப்பு பயிற்சி வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
- இதற்காக வரும் 1 ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், நாட்டின் சிறந்த ஆசிரியர்களை கொண்டு டிஜிட்டல் முறையில் இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்' என்று கூறினார்.
- வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை நிர்ணயித்து, அதற்குத் தேவையான 'சக்தி கி சப்ததாரா' என்ற ஏழு அம்ச தொலைநோக்கு பார்வையை அவர் அறிவித்தார்.
- சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் உறுதியான மனதிடத்துடன் பெரிய கனவுகளைக் கண்டு, அதை நனவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

