
24th SEPTEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடி முதலீடு செய்ய தமிழக அரசு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 24.09.2025 அன்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.
- ரிலையன்ஸ் நிறுவனம் என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும் . இதன் வணிகங்களில் எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், இயற்கை எரிவாயு, சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு, தொலைத்தொடர்பு, வெகுஜன ஊடகங்கள் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும்.
- இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனமான ரிலையன்ஸ், உலகளவில் 86வது பெரிய நிறுவனமாகும். இத்தகைய நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது முதலீடு செய்துள்ளது.
- ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 10,91,146 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி வழங்கப்பட உள்ளது.
- தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இத்தொகை துர்கா பூஜை மற்றும் தசரா விடுமுறை நாட்களுக்கு முன்னதாக வழங்கப்படுகிறது.
- அதே போல் இந்த ஆண்டும் சுமார் 10.91 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட உள்ளது. ரயில்வே ஊழியர்களின் பணிகளை மேம்படுத்தும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்த இத்தொகை அளிக்கப்படுகிறது.
- அதிகபட்சமாக ரூ.17,951 அளவிற்கு தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியருக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படுகிறது. ரயில்தடப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் (கார்டு) நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அமைச்சக ஊழியர்கள், மற்றும் இதர குரூப் “சி” ஊழியர்கள் போன்ற பல்வேறு பிரிவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.
- இந்தியாவின் கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் சூழல் அமைப்பை வலுப்படுத்த ரூ.69,725 கோடி மதிப்பிலான விரிவடைந்த திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டு திறனை வலுப்படுத்துதல், நீண்ட கால நிதியுதவியை மேம்படுத்துதல், புதிய பகுதியில் மற்றும் ஏற்கனவே செயல்படும் பகுதியில் கப்பல் கட்டும் தள மேம்பாடு, தொழில்நுட்ப திறன்களை விரிவாக்குதல் ஆகியவற்றை வலுப்படுத்த இந்த நான்கு முக்கிய அணுகுமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- இந்தத் திட்டத்தின் கீழ் கப்பல் கட்டுமான நிதியுதவி திட்டம் ரூ.24,736 கோடி தொகுநிதியத்துடன் 2036 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்கு ஊக்கத் தொகை வழங்குவதையும், ரூ.4001 கோடி ஒதுக்கீட்டுடன் கப்பல் உடைத்தலுக்கான கடன் குறிப்பை உள்ளடக்குவதையும் நோக்கமாக கொண்டது. அனைத்து முன்முயற்சிகளையும் மேற்பார்வையிடுவதற்கு தேசிய கப்பல் கட்டுமான இயக்கம் நிறுவப்படும்.
- ஒட்டுமொத்த திட்டம் சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு இந்திய கடல்சார் துறைக்கு சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பொருளாதார தாக்கத்திற்கு அப்பால், இந்த முன்முயற்சி எரிசக்தி, உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு முக்கியமான வழங்கல் தொடர் மற்றும் கடல்சார் வழித்தடங்களில் உறுதிப்பாட்டை கொண்டுவரும்.
- பீகாரில் ரூ. 2,192 கோடி செலவில் பக்தியார்பூர் – ராஜ்கீர்-திலையா ரயில்வே வழித்தடத்தை இரட்டிப்பாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- பீகார் மாநிலத்தில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் தற்போதுள்ள இந்திய ரயில்வே வலை அமைப்பில் 104 கி.மீ. அதிகரிக்கும்.
- ராஜ்கீர் (சாந்தி ஸ்தூபம்), நாளந்தா, பாவாப்பூரி போன்ற முக்கியமான இடங்களுக்கு ரயில்வே போக்குவரத்து தொடர்பை இந்தத் திட்டம் வழங்குவதால் நாடு முழுவதிலுமிருந்து யாத்ரிகர்களையும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும்.
- முன்னேற விரும்பும் இரண்டு மாவட்டங்களையும் (கயா, நவாடா) சுமார் 1434 கிராமங்களையும், 13.46 லட்சம் மக்களையும் இணைப்பதாகவும் இந்தத் திட்டம் இருக்கும்.

