6th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கோவையில் ரூ.300 கோடியில் தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மையம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி இன்று (நவ.6) தொடங்கப்பட்டது.
- இவ்விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
- அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கியது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78), ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்(60), போட்டியிடுகின்றனர்.
- ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், இன்டியானா, கென்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 270 தொகுதிகளில் வெற்றி தேவை.
- தற்போதைய நிலவரப்படி, டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை கடந்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், வெர்மான்ட், மாசசூசெட்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களில், 226 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கி உள்ளார்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2024-25 நிதியாண்டில் நடைமுறை மூலதனத்திற்காக ரூ.10,700 கோடி முதலீட்டை, இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- வேளாண் துறையை மேம்படுத்தவும், நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்திசார் நடவடிக்கை விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதிலும், இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் அரசின் உறுதியான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
- இந்திய உணவுக் கழகம் 1964 ஆம் ஆண்டு ரூ.100 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மற்றும் ரூ.4 கோடி பங்கு மூலதனத்துடன் தனது பயணத்தைத் தொடங்கியது.
- இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரித்ததன் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.11,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக பிப்ரவரி 2023-ல் அதிகரித்தது.
- 2019-20 நிதியாண்டில் ரூ.4,496 கோடியாக இருந்த இந்திய உணவுக் கழகத்தின் பங்கு 2023-24 நிதியாண்டில் ரூ.10,157 கோடியாக அதிகரித்துள்ளது.
- இப்போது, இந்திய உணவுக் கழகத்திற்கு கணிசமான தொகையான ரூ.10,700 கோடி பங்குத் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது இந்திய உணவுக் கழகத்தை நிதி ரீதியாக வலுப்படுத்துவதுடன், இந்த மாற்றத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முன்முயற்சிகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும்.
- குறைந்தபட்ச ஆதரவு விலையில், உணவு தானியங்களை கொள்முதல் செய்வது, முக்கிய உணவு தானிய கையிருப்பைப் பராமரித்தல், நலத்திட்டங்களுக்காக உணவு தானியங்களை விநியோகித்தல் மற்றும் சந்தையில் உணவு தானிய விலைகளை நிலைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய உணவுக் கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வகை செய்யும் திட்டமாகும்.
- இதன் கீழ், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனத்தில் (QHEIs) சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும் வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
- எளிய, வெளிப்படையான, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் இதுவாகும்.
- என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைகளால் தீர்மானிக்கப்பட்டபடி, நாட்டின் தரமான உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டம் கல்விக் கடன் மற்றும் வட்டி மானியம் உள்ளிட்ட பல பயன்களைக் கொண்டதாகும்.
- உத்தராகண்ட் மாநிலத்தில் குடிநீர் விநியோகம், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பிற நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த உதவுவதற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இன்று 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- உத்தராகண்ட் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் திருமதி ஜூஹி முகர்ஜி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் மியோ ஓகா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி, இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (எல்எம்வி) பெற்றவர்கள் கார், டாக்சி, ஆட்டோ ரிக்ஷா போன்ற இலகுரக வாகனங்களை மட்டுமே இயக்க முடியும். வணிகத்திற்கு பயன்படும் அதிக எடை கொண்ட வாகனங்களை இயக்க முடியாது.
- இதன் அடிப்படையில், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் (எல்எம்வி), வணிக வாகனங்களை இயக்கி விபத்து நேரும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு காப்பீடு வழங்க மறுத்து வந்தது.
- மேலும், சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்குக் காரணம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், வணிக வாகனங்களை இயக்குவதுதான் என்றும் கூறப்பட்டது.
- இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
- இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், 7,500 கிலோ வரை உள்ள வணிக வாகனங்களை இயக்கலாம் என்றும் நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு இலகுரக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் காரணம் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
- இதற்கான சட்டத் திருத்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.