
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
- தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) தலைமைச் செயலகத்தில் கூடியது. ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- இராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ.9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ.13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14000 நபர்கள்), தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்), அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 15000 நபர்கள்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1395 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1033 நபர்கள்), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அசென்ட் சர்க்யூட் ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.612.60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1200 நபர்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திட்டங்களாகும்.
- ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(அக். 8) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின், 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது. அதன்படி வாக்கு எண்ணிக்கையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) ஆட்சி அமைக்கிறது.
- மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாஜக - 29, மக்கள் ஜனநாயகக் கட்சி - 3, மக்கள் மாநாட்டுக் கட்சி - 1, ஆம் ஆத்மி - 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1 சுயேச்சை - 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.
- ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி, பாஜக - 50, காங்கிரஸ் - 35, இந்திய தேசிய லோக் தளம் - 2 சுயேச்சை- 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
- இதையடுத்து ஹரியாணாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 58 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், வடிவமைக்கப்பட்ட 'ஹம்சஃபர் கொள்கையை' மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி புதுதில்லியில் வெளியிட்டார்.
- தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பல்வேறு சேவை வழங்குநர்களை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதை இந்த ஹம்சஃபர் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உணவகங்கள், எரிபொருள் நிலையம், அவசர சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை தொடர்பான சேவை வழங்குநர்கள் ஹம்சஃபர் கொள்கையின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
- பயணிகளுக்கு உயர்தர வசதிகளை வழங்குவதன் மூலமும், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலமும் உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதில் 'ஹம்சஃபர் கொள்கை' முக்கியப் பங்காற்றும்.
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), நாட்டில் புதுமைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய இணையப் பாதுகாப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது.
- செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பாதுகாப்பு, கிரிப்டோகிராபி, குவாண்டம் பாதுகாப்பு, ஐஓடி பாதுகாப்பு ஆகியவற்றில் அதிநவீனத் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சியை இந்த மையம் மேற்கொள்ளும்.