டெல்லியின் 8வது முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார்
- டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் புகாரில் சிக்கி சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
- இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, டெல்லி அமைச்சரவையையும் கலைத்தார். இதனை அடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் புதிய அமைச்சரவையில், முன்னதாக அமைச்சர்களாக இருந்த சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூடுதலாக புதிய அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில், முதலமைச்சர் உள்பட 7 அமைச்சர்கள் முழுபலத்துடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
- இன்று பதவியேற்பு விழா நடத்த ஆம் ஆத்மி பரிந்துரைத்த நிலையில், புதிய முதலமைச்சர் தொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
- அதன்படியே மாலை 4 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது டெல்லியின் 8வது முதலமைச்சராக அதிஷி (43) பதவியேற்றுக்கொண்டார்.
- புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அதிஷிக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா பதிவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சுஸ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்தை அடுத்து டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்றிருக்கிறார்.
- தொடர்ந்து செப்.26 மற்றும் 27ம் தேதிகளில் சட்டசபை சிறப்புக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். தற்போது வரை டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்துள்ளது.