கூட்டுறவு (Kooturavu) என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
- கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் இன்று (27.08.2024) சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுத்துறை அறிவிப்புகளின் தற்போதை நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
- கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், "கூட்டுறவு (Kooturavu)" என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களுக்கு மத்திய அரசு சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும். அதேபோன்று, தமிழகத்தில் மாநில அளவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.
- இந்த நிலையில் நிகழாண்டு தேசிய நல்லாசிரியா் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள ஆசிரியா்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- அதிலிருந்து தகுதியான 50 போ் விருதுக்கு தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
- அதன்படி, தமிழகத்தில் வேலூா் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் ஆா். கோபிநாத்துக்கும், மதுரை மாவட்டம் லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா் ஆா். முரளிதரனுக்கும் தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- தோ்வான ஆசிரியா்களுக்கு செப். 5-ஆம் தேதி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருது வழங்கி கெளரவிப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விருதுபெறும் நல்லாசிரியா்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
- இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது பதவி விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார்.
- பிசிசிஐயின் கவுரவச் செயலாளராக தற்போது பதவி வகித்து வரும் ஜெய் ஷா, ஐசிசியின் தலைவராக டிசம்பர் 1ஆம் (01.12.2024) பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.ஸ்ரீனிவாசன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.
- 1992-ஆம் ஆண்டு பிகாா் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவா், தற்போது ராஜ்கிரில் உள்ள பிகாா் காவல்துறை அகாதெமியின் இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.
- என்எஸ்ஜி தலைமை இயக்குநராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட நலின் பிரபாத்தை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜம்மு காஷ்மீா் காவல்துறை தலைவராக மத்திய அரசு நியமித்தது.
- இதையடுத்து, மத்திய ரிசிா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) தலைமை இயக்குநா் அனீஷ் தயாள் சிங்கிடம் என்எஸ்ஜி தலைமை இயக்குநா் பதவியும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
- இந்திய ரயில்வே மேலாண்மை சேவை அதிகாரி சதீஷ் குமாா், ரயில்வே வாரியத்தின் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.
- பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக நியமிக்கப்பட்டிருப்பதாக வாரியத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
- ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக உள்ள ஜெயா வா்மா சின்ஹாவின் பதவிக் காலம் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில் அந்த வாரியத்தின் புதிய தலைவா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியாக சதீஷ் குமாரை நியமிக்க உயா் பதவி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
- 1986-ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயின் இயந்திரப் பொறியாளா்கள் சேவைத்துறை பிரிவு அதிகாரியான இவா் கடந்த 2022, நவம்பா் மாதத்தில் வட மத்திய ரயில்வே துறையின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டாா்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், சுமார் ரூ.6,456 கோடி மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் 3 (மூன்று) திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இணைப்பு இல்லாத பகுதிகளை இணைப்பதன் மூலம் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்தும்.
- தற்போதுள்ள ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும் மற்றும் போக்குவரத்து நெட்வொர்க்குகளை மேம்படுத்தும். இதன் விளைவாக விநியோகச் சங்கிலிகள் சீரமைக்கப்படும் மற்றும் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்படும்.
- ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் , சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களை உள்ளடக்கிய 3 (மூன்று) திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் வலையமைப்பை சுமார் 300 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
- இந்தத் திட்டங்களுடன் 14 புதிய நிலையங்கள் கட்டப்படும். இது 2 (இரண்டு) முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு (நுவாபாடா மற்றும் கிழக்கு சிங்பம்) இணைப்பை மேம்படுத்தும்.
- புதிய வழித்தடத் திட்டங்கள் சுமார் 1,300 கிராமங்களுக்கும் சுமார் 11 லட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும். பல கண்காணிப்புத் திட்டம் சுமார் 1,300 கிராமங்களுக்கும், சுமார் 19 லட்சம் மக்களுக்கும் இணைப்பை மேம்படுத்தும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த நடவடிக்கை நாட்டின் தொழில்துறை சூழலை மாற்றியமைக்க அமைக்கப்பட்டுள்ளது, இது தொழில்துறை முனைகள் மற்றும் நகரங்களின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது.
- இது பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிக்கும்.
- 10 மாநிலங்களில், 6 முக்கிய வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டங்கள், அதன் உற்பத்தி திறன்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- உத்தராகண்டில் உள்ள குர்பியா, பஞ்சாபில் ராஜ்புரா-பாட்டியாலா, மகாராஷ்டிராவின் டிகி, கேரளாவில் பாலக்காடு, உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பீகாரில் கயா, தெலங்கானாவில் ஜாஹீராபாத், ஆந்திராவில் ஓர்வகல் மற்றும் கொப்பார்த்தி மற்றும் ராஜஸ்தானில் ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் இந்த தொழில்துறை பகுதிகள் அமையவுள்ளன.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பண்பலை வானொலி மூன்றாம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) நீங்கலாக மொத்த வருவாயில் பண்பலை அலைவரிசைகளுக்கான வருடாந்திர உரிமக் கட்டணம் (ஏஎல்எஃப்) 4% ஆக வசூலிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது 234 புதிய நகரங்களுக்கும் பொருந்தும்.
- இந்த 234 நகரங்களில் இதுவரை தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகள் தொடங்கப்படவில்லை. தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த நகரங்களில் பண்பலை வானொலிக்கான ஒலிபரப்புத் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும் தாய்மொழியில் உள்ளூர் உள்ளடக்கத்தையும் இவை ஒலிபரப்பும்.
- 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 234 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 730 அலைவரிசைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 11 நகரங்களில் தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 'வேளாண் கட்டமைப்பு நிதியம்' என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறையின் நிதித் திட்டத்தை, மேலும் ஈர்ப்புடையதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் வகையில் விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நாட்டில் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும், வேளாண் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.
- இந்த முயற்சிகள் தகுதியான திட்டங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதையும், வலுவான வேளாண் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு நிதி உதவியை (CFA) மாநில நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி ஒத்துழைப்பு மூலம் வழங்குவதற்கான, மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த திட்டம் 2024-25-ம் நிதியாண்டு முதல் 2031-32-ம் நிதியாண்டு வரை ரூ.4136 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 15,000 மெகாவாட் ஒட்டுமொத்த நீர்மின் திறன் ஆதரிக்கப்படும்.
- மின்துறை அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீட்டிலிருந்து வடகிழக்கு பிராந்தியத்திற்கான 10% மொத்த பட்ஜெட் ஆதரவு (GBS) மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும்.