கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
- இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதலமைச்சர் இன்று (22.8.2024) ஆணை வழங்கியுள்ளார்.
- சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 30.8.2022 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், முதல்வர், “நம்முடைய மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் “முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை” திட்டம் தொடங்கப்படும். இதற்கான மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று அறிவித்தார்.
- அதன்படி, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்திடும் வகையில், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற்றிட ஆராய்ச்சி மாணவர்களை தெரிவு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு 10.12.2023 இல் நடத்தப்பட்டு, 120 மாணவ, மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
- இவர்களில் 60 மாணவர்கள் அறிவியல் பாடப் பிரிவையும், 60 மாணவர்கள் கலை, மானுடவியல் மற்றும் சமூகவியல் பாடப் பிரிவையும் சார்ந்தவர்கள் ஆவார்கள்.
- இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆராய்ச்சி படிப்பினை அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடர மாதம் ரூ.25,000 ஊக்கத் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.12.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக முதல்வர் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்களில் 10 மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கான ஆணைகளை வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
- இத்திட்டம், தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பயின்று ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் எனறழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது.
- இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. கடந்த இரண்டு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல்ணிகள் மணிகள் கிடைத்தன. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும் 3.6 மில்லி மீட்டர் தடிமனும் 60 மில்லி கிராம் எடையும் கொண்டது.
- இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில் தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும்.
- சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராட்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் கிடைக்கின்றன.
- இதுபோன்று கல்மணிகளில் உருவங்கள் குழிவான முறையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் உரோம் நாட்டில் சிறப்புற்றிருந்தது.
- இதுபோன்று கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி (பட்டணம்) அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பெற்ற பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
- கீழடியில் காட்டுப்பன்றி உருவமும் முசிறியில் பாயும் சிங்கமும் கிடைக்கப் பெற்றுள்ளன. கீழடியிலும் முசிறியிலும் கிடைக்கப்பெற்ற சூதுபவள மணியால் ஆன பதக்கங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை. அதேபோன்று வெம்பக்கோட்டையிலும் கிடைத்திருப்பது சிறப்பாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி (22.08.2024) போலந்து குடியரசின் பிரதமர் திரு டொனால்ட் டஸ்க்கை வார்சாவில் சந்தித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்குப் போலந்துப் பிரதமர் டொனால்ட் டஸ்க் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளித்தார்.
- இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-போலந்து இடையேயான நல்லுறவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.
- வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர்.
- உணவுப் பதப்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, சுரங்கம், தூய்மைத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
- இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளையும் கலாச்சார உறவுகளையும் ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.
- ஜாம்நகர் மகாராஜா, கோலாப்பூர் அரச குடும்பத்தினர் ஆகியோரின் தாராள மனப்பான்மையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள தனித்துவமான பிணைப்பை அவர்கள் எடுத்துரைத்தனர்.
- உக்ரைன், மேற்கு ஆசியா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் உட்பட அனைத்து பரஸ்பர நலன் சார்ந்த முக்கியமான பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
- ஐக்கிய நாடுகள் சபை, இதர சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம், பருவநிலை மாற்ற நடவடிக்கை, பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
- இந்த சந்திப்பிற்குப் பிறகு இந்தியா-போலந்து இடையேயான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான கூட்டு அறிக்கையும் செயல் திட்டமும் [2024-2028] வெளியிடப்பட்டது.