முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவைக் கூட்டம்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (13-8-2024) தலைமைச் செயலகத்தில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த முதலீடுகளின் மூலம், 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
- ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி ஆகிய துறைகளில் 15 நிறுவனங்கள் 44,125 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும்.
- இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்குப் பல புதிய முதலீடுகள் வரப்பெறுவதோடு, அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- எரிசக்தித் துறை சார்பாக தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் (PSP) கொள்கை 2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் (SHP) கொள்கை 2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை 2024 ஆகிய புதிய கொள்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.கே.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டது. எஸ்.கே. பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவருடைய பதவிக்காலம் 2028 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆகும். 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரபாகர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
- Facebook, Instagram போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவிற்கான வரைவு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
- இந்த மசோதா சமூக ஊடகங்களின் குரலை நசுக்குவதற்கான முயற்சி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- மேலும் இம்மசோதா குறித்து டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், இந்த நடவடிக்கை குறித்து தங்களிடம் இதுவரை ஆலோசிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டின. இந்த மசோதா பேச்சு சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்று பல தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன.
- இதனைத் தொடர்ந்து இந்த வரைவு மசோதாவை தற்போது ஒன்றிய அரசு திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே தகவல் ஒளிபரப்பு துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"வரைவு மசோதா மீதான கருத்து கேட்பு அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விரிவான ஆலோசனைக்கு பிறகு புதிய வரைவு மசோதா வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய நீர்வள ஆணையம் உருவாக்கிய 'ஃப்ளட்வாட்ச் இந்தியா' மொபைல் செயலி 2.0-ஐ மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டில் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
- நாட்டில் ஏற்படும் வெள்ள நிலைமை மற்றும் 7 நாட்கள் வரையிலான வெள்ள முன்னறிவிப்புகள் தொடர்பான தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் பொதுமக்களுக்கு தெரிவிக்க மொபைல் செயலியின் முதல் வெளியீட்டை 2023, ஆகஸ்ட் 17 அன்று அறிமுகப்படுத்தியது.
- முதலாவது செயலியில் 200 நிலை முன்னறிவிப்பு நிலையங்களில் வெள்ள முன்னறிவிப்புகள் பற்றிய தகவல்களை வழங்கியது. இரண்டாவது செயலி கூடுதலாக 392 வெள்ள கண்காணிப்பு நிலையங்களின் தற்போதைய தகவல்களை வழங்குகிறது.
- மொத்தம் 592 வெள்ள கண்காணிப்பு தகவல்களை அளிக்கிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள வெள்ள நிலைமைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.
- மேலும், நாட்டில் உள்ள 150 பெரிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குகிறது. இது தாழ்வான பகுதிகளில் உள்ள வெள்ள நிலைமையை நன்கு புரிந்துகொள்ள உதவும்.
- அனைத்து தகவல்களையும் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வழங்குகிறது. படிக்கக்கூடிய மற்றும் ஒளி வடிவத்தில் கிடைக்கிறது. இந்த செயலி அருகிலுள்ள இடத்தில் வெள்ள முன்னறிவிப்பையும் வழங்குகிறது.
- இந்தியா முழுவதும் டிஜிட்டல் சுகாதாரக் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய சுகாதார ஆணையமும் (NHA) மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் (MUHS) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று (13-08-2024) கையெழுத்தானது. இதன்படி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு செல்லும் நோக்கில் டிஜிட்டல் அடித்தள படிப்பை மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தும்.
- தேசிய சுகாதார ஆணையமும் மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து டிஜிட்டல் சுகாதார செயல்பாடுகளை மேற்கொள்ளும். எதிர்காலத்தில் டிஜிட்டல் சுகாதாரத்தில் மேலும் பல படிப்புகளை உருவாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்மொழிகிறது.