
2nd JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மருங்கூர் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு
- தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி, வெம்பக்கோட்டை, திருமலாபுரம், பொற்பனைக்கோட்டை, கீழ்நமண்டி, கொங்கல்நகரம், சென்னானூர், மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- அதன்படி மருங்கூர் அகழாய்வுப் பணிகள் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- தற்போது மூன்று அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு குழியில் 40 செ.மீ ஆழத்தில் சோழர் காலச் செப்பு நாணயம் ஒன்று கண்டறியப்பட்டது.
- இந்நாணயம் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சார்ந்ததாகும். இந்நாணயம் 23.3. செ.மீ விட்டமும், 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டுள்ளது.
- இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் மனித உருவம் இடம் பெற்றுள்ள நிலையில், இடது கையினை கீழ்நோக்கியும் வலது கை மேல் நோக்கியவாறும் காணப்படுகிறது.
- பின் பக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள மனித உருவம் வலது கை கீழ் நோக்கியும் இடது கை மேல் நோக்கிய நிலையிலும் காணப்படுகிறது.
- மருங்கூர் அகழாய்வுத் தளத்தின் மேலுள்ள பண்பாட்டு மண் அடுக்கு வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் வகையில் மாமன்னன் முதலாம் ராஜராஜனின் செப்புக் காசுக் கிடைத்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
- கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி. வசூல் நடைமுறையின் மாதாந்திர வசூல் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்ப்படும்.
- உள்நாட்டில் விற்பனை அதிகரித்த காரணத்தால், மே மாத ஜி.எஸ்.டி., வசூல், 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1.73 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 7.7 சதவீதத்துடன் ரூ. 1.74 லட்சம் கோடியாக உள்ளது.
- இதில் சி.ஜி.எஸ்.டி., ரூ. 39,586 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ. 33,548 கோடி உள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூன் மாதம் 8 சதவீதம் இ.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஏப்ரமல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2.20 லட்சம் கோடி பதிவு செய்து சாதனை படைத்தது.
- இந்தியா-தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சியான மைத்ரீயின் 13-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் சென்றனர்.
- இந்தப் பயிற்சி ஜூலை 1 முதல் 15 வரை தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள வச்சிராபிரகான் கோட்டையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே பயிற்சியின் கடைசி பதிப்பு 2019 செப்டம்பர் மாதத்தில் மேகாலயாவின் உம்ரோயில் நடத்தப்பட்டது.
- 76 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைப்பிரிவில் முக்கியமாக லடாக் சாரணர்களின் ஒரு பட்டாலியன், பிற ஆயுதங்கள் மற்றும் படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- ராயல் தாய்லாந்து ராணுவப் பிரிவில் முக்கியமாக 1-வது பட்டாலியன், 4-வது படைப்பிரிவின் 14 காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்கள் உள்ளனர்.
- மைத்ரீ பயிற்சியின் நோக்கம் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதாகும். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், வனம் மற்றும் நகர்ப்புற சூழலில் கிளர்ச்சி, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் ஒருங்கிணைந்த திறன்களை இந்தப் பயிற்சி மேம்படுத்தும். இந்தப் பயிற்சி, உயர் அளவிலான உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் மற்றும் கூட்டு உத்திகளில் கவனம் செலுத்தும்.
- உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச பிரதிநிதிகள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் உச்சி மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்த உள்ளது. உலக அளவில் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை இந்த உச்சிமாநாடு வெளிப்படுத்தும்.
- உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைக்கிறார்.
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாத் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
- செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையில் இந்தியாவின் தலைமைப் பாத்திரத்தின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு வழங்கும் பன்முக சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்வதில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கணினித்திறன், அடித்தள மாதிரிகள், தரவுத்தொகுப்புகள், பயன்பாட்டு மேம்பாடு, எதிர்காலத் திறன்கள், தொடக்க நிதி, பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் கருப்பொருளில் கவனம் செலுத்தும் இந்த நிகழ்வு, முழு செயற்கை நுண்ணறிவு குறித்த விரிவான விவாதங்களை உறுதி செய்கிறது.
- தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிதடத்தில், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் தொடர்பான, மூன்று அதிநவீன பரிசோதனை கூடங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு பரிசோதனை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் (DTIS), புதுதில்லியில் இன்று (02.07.2024), பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) இடையே கையெழுத்தானது.
- மத்திய / மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, அதிநவீன பரிசோதனைக் கூடங்களை அமைப்பதற்கான 400 கோடி ரூபாய் மதிப்பிலான DTIS திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மே 2020-ல் தொடங்கி வைத்தார்.
- உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவித்து, ராணுவ தளவாட இறக்குமதியை குறைத்து, தற்சார்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- பாதுகாப்புத் தொழில் பெருவழித்தடத்தில் அமையும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்களுக்கு ஊக்கமளிப்பதற்காக, தமிழ்நாட்டில் 4, உத்தரப்பிரதேசத்தில் 3 என மொத்தம் 7 பரிசோதனைக் கூடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
- இதில் தமிழ்நாட்டில் 3 பரிசோதனைக் கூடங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- பாதுகாப்பு பரிசோதனை கட்டமைப்புத் திட்டம் மூலம், அரசு 75 சதவீத நிதியுதவியை வழங்கும். எஞ்சிய 25 சதவீதம், இதற்கென அமைக்கப்பட்ட இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய- மாநில அரசுகளை உள்ளடக்கிய பிரத்தியேக அமைப்பால் வழங்கப்படும்.
- ஆளில்லா விமான பரிசோதனை வசதியை கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான், சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும். மற்ற இரு பரிசோதனைக் கூடங்களுக்கான வசதியை பாரத மின்னணு நிறுவனம் மற்றும் இந்தியா ஆப்டெல் நிறுவனங்கள் வழங்கும்.
- இத்திட்டம் நிறைவடையும் போது, பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கு ஊக்கமளிக்கும் விதமாக, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும்.