11th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தஞ்சை அருகே 1000 ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
- தஞ்சை அருகே 1000 ஆண்டுகள் பழமையான சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் ராஜகிரியை சேர்ந்த தர்மராஜ் வயலில் உள்ள ஒரு கல்லில் எழுத்துகள் காணப்படுவதாக அவ்வூரை சார்ந்த ராமபாரதி, விக்னேஷ்வரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தகவல் கொடுத்தனர்.
- அதன்பேரில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் மற்றும் பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
- அப்போது பாபநாசத்தின் தெற்கே குடமுருட்டி ஆற்றுக்கும், வடக்கே அரசலாற்றுக்கும் இடையே அமைந்துள்ள அரையபுரம் தட்டாங்கல் படுகையில் கால்வாயை ஒட்டி நான்கு துண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
- இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், இக்கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால எழுத்தமைதியுடன் காணப்படுகின்றன.
- நான்கு துண்டு கல்வெட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவையாகக் காணப்படுவதோடு முழுமையாகவும் இல்லை. கல்வெட்டு காணப்படும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் சோழர் காலத்தைய கோயில் ஒன்று முற்றிலுமாகச் சிதைவடைந்து அழிந்திருக்க வேண்டும்.
- அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவையாக இத்துண்டு கல்வெட்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கல்வெட்டு வரிகளை படித்தறிந்தபோது ராசேந்திர சோழன் விண்ணகரம் என்ற கோயிலுக்கு நிலக்கொடை வழங்கியதைப் பற்றியதாக இருக்கலாம் என அறிய முடிகிறது.
- அதிலுள்ள வாசகங்களில் மங்கலம், பிறவிகலாஞ்சேரி, கலாகரச்சேரி போன்ற இடங்களின் பெயர்களும் நக்கன் நித்தவிநோதகன், கண்டன், மும்முடிச் சோழ சோழவரையன் போன்ற பெயர்களும், மணல்பெறும்வதி, ஆதித்தவதி, கண்டன் வாய்க்கால் என்ற வாய்க்கால்களின் பெயர்களும் நில எல்லை, மா, குழி, விலையாவணம் போன்ற நில அளவு குறித்த சொற்களையும் காண முடிகின்றது என்றனர்.