12th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் மக்கள் சேவைக்கான 'க்யூஆர்' குறியீடு செயலி - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான 'விரைவு துலங்கல் (க்யூஆர்) குறியீடு' மென்பொருள் செயலியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தொடர்ந்து ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு 'செழிப்பு' என பெயரிட்டு அதன் விற்பனையை அறிமுகப்படுத்தினார்.
- தமிழக அரசு நிர்வாக செயல்பாடுகளில் டிஜிட்டல் மயமாக்குதல் என்பது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் துறைதோறும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
- அதன்படி 'க்யூஆர்' குறியீடு மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த 'க்யூஆர்' குறியீடு ஒவ்வொரு கட்டமைப்புகளின் முகப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும்.
- இதன்மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி சேவைகளின் மீதான நிறைகுறைகளை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி ஊழியர்கள் தங்களது பணியை மேம்படுத்தி மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும்.
- சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலிமூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே 'க்யூஆர்' குறியீட்டை ஸ்கேன்செய்து பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகார் / கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலை பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
- அத்துடன், உள்ளாட்சி கட்டமைப்புகளான, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், எரியூட்டு மயானம், மார்க்கெட், விளையாட்டு மைதானம், நகர்நல மையம், கழிப்பறைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள 'க்யூஆர்' குறியீடு மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தால் உள்ளாட்சிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்கட்டமைப்புகளை மேலும் நல்ல முறையில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் 'க்யூஆர்' குறியீடு மூலம் தெரிவிக்கும் கோரிக்கைகள் / புகார்கள் அனைத்தும் உள்ளாட்சிஅலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைந்தமுறையில் பெறப்படும்.
- பின்புஅவை தொடர்புடைய அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுவதால் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் இந்த சீர்மிகு ஆளுமை திட்டத்தின் மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
- 'செழிப்பு' இயற்கை உரம்: ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு'செழிப்பு' என பெயரிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து நகர்ப்புர உள்ளாட்சிகளிலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் டன்குப்பை சேகரம் ஆகிறது.
- மாநகராட்சிகளில் 629 இடங்களில், நகராட்சிகளில் 334 இடங்களில் மற்றும் பேரூராட்சிகளில் 489 இடங்களிலும் உள்ள நுண் உர மையங்கள் மற்றும் காற்றாடல் மையங்களில் மக்கும் குப்பை அறிவியல் முறையில் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
- தமிழகத்தின் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் ராக்கெட் இன்ஜின் பரிசோதனை மையம் உள்ளது. இங்கு செமி-கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனை மையம் புதிதாக தொடங்கப்பட்டது.
- இங்கு 2000 கே.என் (கிலோநியூடன்) திறனுள்ள செமிகிரையோஜெனிக் இன்ஜின் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகம் தெரிவித்தது.
- இந்த 2000 கே.என் இன்ஜின் திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கக் கூடியது. இந்த வகை இன்ஜின்கள் எதிர்காலத்தில் அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- இந்த இன்ஜினில் உள்ள குறைந்த அழுத்தம் மற்றும் அதிக அழுத்தம் கொண்ட டர்போ பம்ப்புகள், காஸ் ஜெனரேட்டர், கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள் நேற்று முதல் முறையாக பரிசோதனை செய்யப்பட்டன.
- இந்த இன்ஜின் வடிவமைப்பை இஸ்ரோவின் திரவ எரிபொருள் இன்ஜின் மையம் (எல்பிஎஸ்சி) உருவாக்கியது. முழு அளவிலான இன்ஜின் பரிசோதனைக்கு முன்பாக, மேற்கொள்ளப்பட்ட செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை மிக முக்கிய சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.
- சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. செமி-கிரையோஜெனிக் இன்ஜினின் இந்த பரிசோதனை அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
- இதன் மூலம் எதிர்காலத்தில் அதிக எடையுடன் கூடிய செயற்கை கோள்களை, இஸ்ரோ ராக்கெட் டுகள் கொண்டு செல்லும்.
- நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், 18 மாதங்களில் இல்லாத அளவில் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.
- உணவுப் பொருட்கள் விலை குறைந்ததன் காரணமாக, கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்துள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது.
- இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் 7.79 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு முன், கடந்த 2021 அக்டோபரில், மிக குறைந்த அளவாக 4.48 சதவீதம் எனும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, உணவு பொருட்கள் பிரிவில், பணவீக்கம் ஏப்ரலில் 3.84 சதவீதமாக குறைந்துள்ளது.
- இது, முந்தைய மாதமான மார்ச்சில் 4.79 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு ஏப்ரலில் 8.31 சதவீதமாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து அறிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது.
- இரு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.
- சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம் மற்றும் வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும், குறுகிய கால கடனுக்கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது.
- நம் நாட்டில், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில், மின்னணு முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில், இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், இ - பைலிங் 2.0 சேவையை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் துவக்கி வைத்தார்.
- தாஷ்கன்டில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் பல்கேரியாவின் ஜே டயஸ் இபனேஸ் உடன் மோதிய நேற்று இந்திய வீரர் முகமது ஹுசாமுதீன் (75 கி.) துரதிர்ஷ்டவசமாக முழங்கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் அவர் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- மற்றொரு அரையிறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் தீபக் போரியா (51 கி.), பிரான்ஸ் நட்சத்திரம் பிலால் பென்னமாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் 8-வது கூட்டம், காணொலி காட்சி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்றது.
- இதில் இந்தியாவுடன், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் தலைமையில் ஷாங்காய் அமைப்பு உறுப்பு நாடுகள், பொலிவுறு வேளாண் திட்டத்தை ஏற்று கொண்டுள்ளன.
- குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்.
- இதில் நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் விநியோகம், சாலை மற்றும் போக்குவரத்து, சுரங்கங்கள், கனிமங்கள் ஆகிய துறைகளில் ரூ.2450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
- பிரதமரின் கிராமம் மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் ரூ.1950 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட19,000 வீடுகளின் கிரஹப்பிரவேசத்தில் பங்கேற்றதுடன், பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார் பிரதமர். மேலும் காணொலி காட்சி வாயிலாக பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
- 2022-ம் ஆண்டில் பொன்விழாவைக் கொண்டாடிய இந்திய வானியல் கழகம், இந்தியாவின் வானியல் மற்றும் வானியற்பியல் துறைக்குப் பங்களித்த புகழ்பெற்ற இந்திய வானியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில், கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தது. பேராசிரியர் கோவிந்த் ஸ்வரூப்பின் (1929-2020) நினைவாக இந்த விருது அவரது பெயரில் வழங்கப்படுகிறது.
- சிறந்த வானியலாளரும், புனேவிலுள்ள ஐயுசிஏஏ-வின் நிறுவன இயக்குனரும், இந்திய வானியல் கழகத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ஜெயந்த் வி. நர்லிகர், முதன்முறையாக வழங்கப்படும் இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார்.