22nd March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
6ஜி ஆராய்ச்சி, மேம்பாடு சோதனை மையம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- 6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்க கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில், பல்வேறு துறை அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது.
- இந்த குழு பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று, பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டு, 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பையும், சர்வதேச தொலைத்தொடர்பு பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- போபாலில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அஜர்பைஜானின் ருஸ்லன் லுனெவுடன் மோதிய அவர் 16-0 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தார்.
- ருஸ்லன் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் வருண் தோமர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- இந்தியாவின் முதல் பி.எம். மித்ரா பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் நேற்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில், இந்தியாவில் முதலாவதாக பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசிற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டன.
- விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவானது மொத்தம் ரூ.2,000 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் மூலம் உருவாக்கப்படும்.
- இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி, உடனடியாக தொழில் தொடங்க ஆயத்த தொழிற் கூடங்கள், தொழில் பணியாளர்களுக்கான வீடுகள், காற்றாலை மற்றும் சூரிய தகடு மின் உற்பத்தியை உள்ளடக்கிய பசுமை ஆற்றல், பூஜ்ய கழிவு வெளியேற்றக்கூடிய பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் போன்ற சிறப்பு வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்கா முழு அளவில் செயல்படும் போது சுமார் 2,00,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.
- இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும், என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- இதன் மூலம் ரூ.1,231 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6,315 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் அனைத்து வாய்ப்புகளையும், தொழில் நிறுவனங்களும் தொழில் முனைவோர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
- நாட்டிலேயே முதல் முறையாக வக்கீல்கள் பாதுகாப்பு மசோதாவை ராஜஸ்தான் அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. வழக்கறிஞர்களைத் தாக்குவது, காயப்படுத்துவது அல்லது மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று மசோதா ஒன்றை ராஜஸ்தான் அரசு நிறைவேற்றியுள்ளது.
- நாடு முழுவதும் கொவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இதில் கொவிட்-19 தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கொவிட்-19 அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இன்ஃப்ளூயன்சாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- கடந்த 2 வாரங்களில் கொவிட்-19 தொற்று பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
- இக்கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை செயலாளர், சர்வதேச அளவிலான கொவிட்-19 சூழ்நிலை குறித்தும், இந்தியாவில் தொற்று அதிகரிப்பு குறித்தும் உரையாற்றினார். இந்தியாவில் கொவிட்-19 தொற்று சற்று அதிகரிப்பது குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
- அதாவது, 2023, மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக புதியதாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 888- ஆக இருந்ததாகவும், வாரந்திர தொற்று பாதிப்பு 0.98 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதே வாரத்தில் உலக நாடுகளில் நாள் தோறும் சராசரியாக 1.08 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.