12th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
- தமிழகத்தில் பெரும்பாலும் கோயில் நிகழ்ச்சிகளின்போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. அவ்வாறு நடத்தப்படும் நிகழ்சிகளில் ஆபாச நடனங்கள் ஆடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் சில கோயில் திருவிழாக்களின்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக புகார் எழுந்தது. மேலும் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
- இந்நிலையில் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- அதில், குறவன், குறத்தில் ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.
- கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ சித்தரூத்த சுவாமிஜி ஹூப்பள்ளி நிலையத்தில் உள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
- 1,507 மீட்டர் நீளமுள்ள இந்த நடைமேடை சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
- பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் இந்த விரைவுச்சாலையில் செல்ல முடியும். இந்த சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை உள்பட ரூ.16 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார்.
- இந்த சாலை மூலம் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவாக செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, பிரெஞ்சு கடற்படை (எஃப்என்) கப்பல்களான எஃப்எஸ் டிக்ஸ்முட், எஃப்எஸ் லா ஃபயேட்,லா ஃபாயெட் கிளாஸ் ஃபிரிகேட் ஆகியவற்றுடன் இணைந்து 2023 மார்ச் 10-ம் தேதியன்று அரபிக் கடலில் கடல்சார் கூட்டுப் பயிற்சியில் (எம்பிஎக்ஸ்) பங்கேற்றது.
- இந்தப் பயிற்சியில் கடலில் குறுக்கு நிறுத்தகங்கள், ஏறும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையேயான உயர் மட்ட ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
- அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, வான் வழியாகவும், தரை வழியாகவும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் திறன் கொண்டது. இந்த கப்பல் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்குப்படையின் ஒரு பகுதியாகும்.
- இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் ஹான் டான் ஃபாரல் ஆகியோர் நேற்று சந்தித்து இருதரப்பு பொருளாதார உறவை மேலும் மேம்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
- பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (ECTA) செயல்படுத்துவது, இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (CECA) மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளிலும் முதலீட்டை மேலும் மேம்படுத்துவது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.
- ஜி-20, இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (IPEF) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவற்றில் ஈடுபடுவது குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர்.
- இரு நாடுகளும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்காக செயல்படுவதால், எரிசக்தி மாற்றத்தின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.
- மேலும், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய பொருளாதாரம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ரீதியான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டனர்.
- இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆஸ்திரேலியா வலுவான ஆதரவை அளிக்குமென அமைச்சர் ஃபாரெல் மீண்டும் உறுதியளித்தார்.
- நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான செயல்களை விரைவுபடுத்துவது உட்பட, வலுவான, நிலையான மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பாதையை உலகிற்கு கொண்டு வர ஜி-20 உதவ வேண்டும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
- ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகள் என்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 31 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது.
- இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கணிசமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.