போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
- இந்திய விமானப்படையைச் சேர்ந்த சகோய் வகை விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் வகையிலான தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது.
- இந்த ஏவுகணை விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
- அப்போது நிர்ணயித்த. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ. வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டிலேயே 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்து
- நாடுமுழுவதும் 2021-ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது.
- நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், உயிரிழப்பில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
- நாடு முழுவதும் கார் விபத்தில் உயிரிழந்த 19,811பேரில் 83% பேர் (14,397) சீட்பெல்ட் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ள 69,385 பேரில் 67% பேர் (47,000) தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது.
- நாட்டில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 6,445 பேரும், தமிழ்நாட்டில் 5,888 பேரும் மகாராஷ்டிராவில் 4,966 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.300 கோடி அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு தொடங்கிவைக்கப்பட்டது
- தல்சார் நிலக்கரி வயல்களில் இருந்து நிலக்கரியை வெளியே கொண்டு வரும் 14 கி.மீ. நீள அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
- தினசரி 40 ஆயிரம் டன் என்ற நிலக்கரியை கொண்டு செல்லும் மகாநடி நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறனை அதிகரிக்க இது வகைசெய்கிறது.
- ரூ.300 செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் இணைப்பு தினசரி 10 பெட்டிகள் அளவுக்கு நிலக்கரியை கூடுதலாக கொண்டு செல்லக்கூடியதாகும்.
- இந்த ரயில் இணைப்பை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சர் திரு அஸ்விணி வைஷ்ணவ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
- அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு, 68 கி.மீ. தூர உள்வழித்தடம்- அங்குல்-பல்ராம்-புதுக்கடியா ஜராபதா-டென்டுலோய் ரயில் இணைப்பின் முதல் கட்டமாகும்.
கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் மறைவு
- கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார் பீலே.
- ஆனால், கடந்த சில நாட்களாக, அவரின் உடல்நிலை பலவீனமடைந்தது. அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
- இந்நிலையில், பீலே மரணமடைந்தார். பீலே உயிரிழந்ததை அவரின் மகள் இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் பீலேவின் இறப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
- கால்பந்து வரலாற்றில் மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் பீலே. 92 போட்டிகளில் 77 கோல்கள் அடித்து பிரேசிலின் ஆல்-டைம் டாப் ஸ்கோரராக இருக்கும் பீலே, 1940-ம் ஆண்டு பிறந்தவர்.
- கால்பந்தாட்ட உலகின் மாபெரும் ஜாம்பவனாக இன்றும் விளங்குபவர். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட கோல்கள் மட்டுமின்றி ஹாட்ரிக் கோல்களில் உலக சாதனையும் படைத்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்
- பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல்நிலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.