'ஜி - 20' நாடுகளின் தூதர்களுடன் ஆலோசனை
- உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - 2௦யின் தலைமை பொறுப்பை நம் நாடு ஏற்க உள்ளது. வரும், டிச., 1 முதல் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, இந்தியா முறைப்படி ஏற்க உள்ளது.இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம், அந்தமான் நிகோபரின் சுவராஜ் தீப்பில் நடந்தது.
- மத்திய அரசின் சார்பில் அதன் பிரதிநிதி 'ஷெர்பா' என்றழைக்கப்படுவார். இதன்படி, நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த், மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜி - ௨௦ மாநாட்டுக்கான ஏற்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இந்தியாவுக்கான துாதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றி
- இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவைப்படும் தொலையுணர்வு வகை செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
- அதன்படி, கடல் ஆய்வுப் பணிகளுக்காக 1999, 2009-ல் ஓஷன்சாட்-1, ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் ஆய்வுக்காலம் 2011-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது.
- ஓஷன்சாட்-2 செயற்கைக் கோளில் சில கருவிகள் பழுதானதால், அதிலிருந்து தகவல்களைப் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, புவி கண்காணிப்பு, கடலாய்வு செயல்பாடுகளுக்காக, அதிநவீன ஓஷன்சாட்-3 (இஓஎஸ்-06) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது.
- ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி 30 நிமிட நேர கவுன்ட்-டவுண் நேற்று முன்தினம் தொடங்கியது.
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
- சரியாக 17 நிமிடத்தில் இஓஎஸ்-06 செயற்கைக்கோளை 742 கி.மீ. தொலைவில், திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
- மேலும், 2 மணி நேரத்துக்குப் பிறகு, இதர 8 சிறிய செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட ராக்கெட் பயணங்களில் இதுவும் ஒன்றாகும்.
- முதன்மை செயற்கைக்கோளான இஒஎஸ் 1,117 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், கடலின் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் வேக மாறுபாடு, வளிமண்டலத்தில நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, தரவுகளைப் பெற முடியும்.
- இதேபோல, இந்திய-பூடான் கூட்டமைப்பில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ்-2பி, பெங்களூரு பிக்சல் நிறுவனத்தின் ஆனந்த் சாட், ஐதராபாத் துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், அமெரிக்காவின் ஸ்பேஸ் ப்ளைட் நிறுவனத்தின் ஆஸ்ட்ரோகாஸ்ட் செயற்கைக்கோள்கள், அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அரசியல் சாசன தினத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி
- அரசியல் சாசன தினத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
- இந்த நிகழ்ச்சியில், பல்வேறு 'மொபைல் போன் ஆப்' உள்ளிட்ட புதிய முயற்சிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பொருநை இலக்கிய திருவிழா காணொலியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- நெல்லையில் 2 நாட்கள் நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார். விழாவில் விருது பெற்ற எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
- தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் இலக்கிய திருவிழா முதன்முதலாக தொடங்கியது. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ், ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
- இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தீபா மாலிக் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் தேசிய தூதராகி உள்ளார்
- பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருது பெற்ற, இந்தியாவின் முதலாவது மகளிர் பாராலிம்பிக் பட்டம் வென்ற, இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவரான டாக்டர் (கௌரவ பட்டம்) தீபா மாலிக், காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் தேசிய தூதராகி உள்ளார். இந்த இயக்கத்திற்கு முழு ஆதரவு அளிக்க அவர் உறுதிபூண்டுள்ளார்.
- 2018, மார்ச் மாதத்தில் புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 41-வது இந்தியா சர்வதேச வர்த்தக பொருட்காட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அரங்கில் காசநோய் விழிப்புணர்வு செயல்பாடுகளில் பங்கேற்றிருந்த தீபா மாலிக் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்திற்கு தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்தியக் கடற்படையின் கப்பல் தயாரிப்பு நிறுவனமான ஜிஆர்எஸ்இ, ஒரே ஆண்டில் 3வது மிகப்பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்துள்ளது
- மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) நிறுவனம், இந்திய கடற்படைக்காக 3-வது மிகப்பெரிய ஆய்வுக்கப்பலை வடிவமைத்துள்ளது.
- இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பிராந்திய இந்தியக் கடற்படையின் மனைவியர் நலச் சங்கத் தலைவர் திருமதி மதுமதி ஹம்பிஹோலி இந்த ஆய்வுக் கப்பலை தொடங்கிவைத்தார்.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஆய்வுக்கப்பல், 110 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது.
- இதன்மூலம், ஒரே ஆண்டில் 3-வது மிகப் பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்து ஜிஆர்எஸ்இ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
- இது இந்தியக் கடற்படையின் கடற்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2022ம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சரின் விருது ஜிஆர்எஸ்இ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.