இந்தியாவிலேயே முதன் முறையாக நடுக்கடலில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் - தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் டெண்டர் வெளியிட்டது
- இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
- அதன்படி, ஒன்றிய எரிசக்தித் துறை சார்பில் இந்தியாவில் 7,600 கிலோ மீட்டர் நீள கடற்கரை பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- இதில், தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 29 கி.மீ. வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது.
- இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்த திட்ட அறிக்கையின் படி தமிழகத்தில் கடல் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க கடந்த 18ம் தேதி தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் டெண்டர் அறிவித்துள்ளது.
- அதன்படி, டிசம்பர் 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த ஏலத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
'ரோஜ்கார் மேளா' திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் மோடி வழங்கினார்
- கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார். இதன் பின்னர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்ப அறிவுறுத்தி இருந்தார்.
- அதன்படி, 'ரோஜ்கார் மேளா' என்ற பெயரில் 10 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை, கடந்த அக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- இந்நிலையில், 'ரோஜ் கார் மேளா' மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குஜராத் மற்றும் இமாச்சலில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அந்த இரு மாநிலங்களை தவிர, நாட்டின் 45 இடங்களில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் 71,056 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணையை வழங்கினார்.
கனவு இல்லத் திட்டம் - 10 எழுத்தாளர்களுக்கு வீடுகள் - அரசாணை வெளியீடு
- முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 03.06.2021 அன்று, 'தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்' என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.
- அதன் தொடர்ச்சியாக, 2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜி.திலகவதி, 2011ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன், 2011ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், 2013ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ப.மருதநாயகம், 2015ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற மறைமலை இலக்குவனார், 2015-16 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் முனைவர் இரா.கலைக்கோவன், 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்.இராமகிருஷ்ணன், 2016 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கா.ராஜன், 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆர்.என்.ஜோ.டி. குருஸ், 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 16.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் - ஆஸி., பார்லி ஒப்புதல்
- இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்திற்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது.கேன்பெர்ரா: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஆஸி., பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இது தொடர்பாக ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பனீசும், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.