'நிடி ஆயோக்' உறுப்பினராக அர்விந்த் விர்மானி நியமனம்
- மத்திய நிதி அமைச்சகத்தில் 2007 - 2009 வரை தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அர்விந்த் விர்மானியை நிடி ஆயோக் முழுநேர உறுப்பினராக நியமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
- இதையடுத்து அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரையில் விர்மானி இந்த பதவியை வகிப்பார்.
- ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில், 2013 - 2016 வரை பணியாற்றிய அர்விந்த் விர்மானி, சர்வதேச நிதியத்தில் 2012 வரை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
பிரிட்டன் நிறுவனத்துடன் டி.வி.எஸ்., ஒப்பந்தம்
- 'டி.வி.எஸ்., எஸ்.சி.எஸ்'., நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த, குப்பை சேகரிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனமான 'டென்னிஸ் ஈகிள்' நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது.
- சந்தைக்கு பின் சேவைக்கான இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அத்துடன், டென்னிஸ் ஈகிள் நிறுவனத்துக்கு தேவையான வாகன உபகரணங்களை, தொடர்ந்து வழங்க உள்ளதாகவும் டி.வி.எஸ்., தெரிவித்துள்ளது.
- நீட்டிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அது, 800 கோடி ரூபாயாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.
ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது
- உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி - 20 கூட்டமைப்பின் மாநாடு, ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.
- இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாலி சென்றார். அங்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
- 'ஜி - 20' அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பதுடன், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜி - 20 மாநாட்டையும் இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது.
- அடுத்த ஆண்டு செப்., 9 மற்றும் 10ம் தேதிகளில், ஜி - 20 மாநாடு புதுடில்லியில் நடக்க உள்ளது. இதையடுத்து, பாலி மாநாட்டின் இரண்டாம் நாளான இறுதி நிகழ்வாக, ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ மாநாட்டு தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். இந்நிலையில், டிச., 1ம் தேதி முதல், ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.
- மாநாட்டு நிறைவு அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:உலகம் முழுதும் புவிசார் பதற்றம், பொருளாதார மந்தநிலை, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஜி - 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவியது நாசா
- அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது 'அப்போலோ' திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை கடந்த 1969ம் ஆண்டு அனுப்பி சாதனை படைத்தது.
- அதன் பின், தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைக்க ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
- ஆர்டெமிஸ் ராக்கெட் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் 29ம்தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால், விண்வெளி ஓடத்தின் 3வது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு எரிபொருள் நிரப்புவதில் பிரச்னை ஏற்பட்டதால் விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது.
- அதன் பிறகு, 2வது முறையாக செப்டம்பர் மாதம் 3ம் தேதி மீண்டும் எரிபொருள் கசிவால் விண்ணில் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டது.
- இந்நிலையில், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு காலநிலை சாதகமாக இருந்ததால், புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 12.17 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், அதற்கான அழுத்தம் குறைக்கப்பட்ட பிறகு, 45 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களுக்கு பின்னர், ராக்கெட்டின் மைய பகுதியில் உள்ள இயந்திரம் பிரிந்து தனியாக சென்றது.
கடலோர மாவட்டங்களில் 2 நாள் 'சி-விஜில் 2022' பாதுகாப்பு பணி
- மும்பை தாக்குதல் எதிரொலியாக, தமிழக கடலோர மாவட்டங்களில் 'சாகர் கவாச்' மற்றும் 'சி- விஜில்' என்ற பெயரில் நடந்து வருகிறது.
- அதன்படி, காலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை கடலோர மாநிலங்களில் 'சி-விஜில் 2022' நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்துடன், இந்திய கடற்படை, இந்திய காவல்படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை, மீன்வளம், கலங்கரை விளக்கம் ஆணையம், நுண்ணறிவுப் பிரிவு, க்யூ பிரிவு புலனாய்வுத்துறை, கடல்சார் வணிகத்துறை, குடியுரிமை, சுங்கம், வனம், ஓஎன்ஜிசி, சென்னை துறைமுகம் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஆசிய 'ஏர்கன்' துப்பாக்கி சுடுதல் 2022
- தென் கொரியாவில், 15வது ஆசிய 'ஏர்கன்' துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில், ஜூனியர் பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் அசத்திய இந்தியாவின் ஈஷா சிங் (248.5 புள்ளி), மனு பாகர் (247.6) முதலிரண்டு இடங்களை பிடித்தனர்.
- அடுத்த நடந்த பைனலில் அபாரமாக செயல்பட்ட மனு பாகர் 17-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஈஷா வெள்ளி வென்றார்.
- பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் பாலக் (252.6 புள்ளி), ரிதம் சங்வான் (251.0) முறையே முதலிரண்டு இடங்களை கைப்பற்றினர். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ரிதம் சங்வான் 16-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
- ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ஷிவா நார்வல், விஜய்வீர் சித்து, நவீன் அடங்கிய இந்திய அணி 16-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
- ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் சாம்ராட் ராணா, வருண் தோமர், சாகர் அடங்கிய இந்திய அணி 16-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை 21 தங்கம் கிடைத்துள்ளது.
சர்வதேச நிதி சேவை மைய ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- சர்வதேச நிதி சேவை மைய ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் தங்களது வரம்பிற்கு உட்பட்ட துறைகளில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளன. தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
- அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பொறுப்பை சர்வதேச நிதி சேவை மையம் வகிக்கிறது.
- இதேபோன்ற கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் மத்திய வங்கியும், இந்திய நிதி ஆணையமுமான ரிசர்வ் வங்கியும் ஈடுபடுகிறது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையே ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, இதன் மூலம் அந்தந்த நிதி சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, வர்த்தக வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உகந்த சூழல்களையும் வளர்க்கிறது.