சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அவரை வரவேற்றனர்.
- பின்னர் விதான சவுதாவுக்கு காரில் சென்று, அங்கு கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- பெங்களூரு ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நாட்டின் 5-வதும், தென்னிந்தியாவின் முதலாவதுமான சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற மோடி ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைத்தார்.
- தொங்கும் பூங்காவைப் போல கண்ணை கவரும் வகையில் 2,55,645 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட முனையத்தை பிரதமர் பார்வையிட்டார்.
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா
- திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- விழாவுக்குப் பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்தார். துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் சிவக்குமார் வரவேற்றனர்.
- ண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் ஊரகக் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (11.11.2022) பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
- இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2018-29, 2019-20 ஆகிய தொகுப்புகளைச் சேர்ந்த 2,300-க்கும் அதிகமான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் தகுதி மிக்க சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் பிரதமர் வழங்கினார்.
- இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் மோடி, தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை, இளங்கலை மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினார்.
- இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி, முருகன் உள்பட 6 பேரும் விடுதலை - உச்ச நீதிமன்ற தீர்ப்பு
- 1991 மே 21-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, பேரறிவாளன் உள்பட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.
- பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் வேண்டுகோளை ஏற்று, நளினியின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து அப்போதைய ஆளுநர் உத்தரவிட்டார்.
- அதேபோல, 2014-ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இதற்கிடையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது ஷரத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே 18-ம் தேதி தீர்ப்பளித்தது.
- இதேபோல தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
- இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது.
தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்
- தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
- அப்போது, 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 30,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார்.
ஜார்கண்டில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக அதிகரிப்பு - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது
- ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும் என ஹேமந்த் சோரன் வாக்குறுதி அளித்தார்.
- அதை நிறைவேற்றுவதற்கான மசோதாவுக்கு இம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த மாநிலத்தில் 60 சதவீதமாக உள்ள இடஒதுக்கீட்டு அளவை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவின்படி, தலித்துகளுக்கான ஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்பட்டோருக்கு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
- மேலும், இதர பிற்பட்டோருக்கு 12 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிந்த உயர் பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
- தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் ஜூனியா் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தங்கம், வெண்கலம் கிடைத்தது.
- இப்பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வாா் 260.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, மற்றொரு இந்தியரான ஸ்ரீகாா்த்திக் சபரிராஜ் 258.8 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.
- தென் கொரியாவின் பாங் சியுங்கோவிடம் வெள்ளிப் பதக்கம் சென்றது. அதேபோல், ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் கிரன் அங்குஷ் ஜாதவ் 10-16 என்ற புள்ளிகளில் தென் கொரியாவின் பாா்க் ஹாஜுனிடம் வெற்றியை இழந்து 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். அதே பிரிவின் ரேங்கிங் சுற்றில் ருத்ராங்ஷ் பாட்டீல் 4-ஆம் இடமும், அா்ஜுன் பபுதா 7-ஆம் இடமும் பிடித்தனா்.
ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022
- ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன், பா்வீன் ஹூடா, சவீதி, அல்ஃபியா கான் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனா்.
- ஜோா்டானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில், 75 கிலோ பிரிவில் லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மிடோவா சோகிபாவை வீழ்த்தினாா்.
- 63 கிலோ எடைப் பிரிவில் பா்வீனும் அதே புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் கிடோ மாயியை தோற்கடித்து தங்கத்தை தனதாக்கினாா். 81 கிலோ பிரிவில் சவீதி - கஜகஸ்தானின் குல்சயா யா்ஸானையும், அல்ஃபியா - ஜோா்டானின் இஸ்லாம் ஹுசாய்லியையும் வீழ்த்தி வாகை சூடினா்.
- இதில் சவீதியின் எதிராளி தோல்வியை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், அல்ஃபியாவின் எதிராளி தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் பேரிலும் அவா்கள் வென்றனா்.
- இதுதவிர, 52 கிலோ எடைப் பிரிவில் மீனாக்ஷி 1-4 என்ற கணக்கில் ஜப்பானின் கினோஷிடா ரின்காவிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றாா். இத்துடன், இப்போட்டியில் இந்திய மகளிா் 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தனா்.
பெங்களுரூவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
- பெங்களுரூவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். விமான நிலையத்தின் 2-வது முனையத்தின் கட்டட அமைப்பு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
- கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் அமைய பெற்றுள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். விமான நிலையத்தின் 2-வது முனையம் தொடர்பான ஒரு குறும்படத்தையும் பிரதமர் கண்டுகளித்தார்.
- சுமார் ரூபாய் 5,000 கோடி மதிப்பில் பெங்களுரூவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.
- தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2-5 கோடி பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த புதிய முனையம் மூலம், 5-6 கோடி பயணிகள் பயனடைவார்கள். அதாவது, சுமார் 2 மடங்கு பயணிகளின் போக்குவரத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
- “பூங்காவில் ஒரு பயணம்” என்ற கருப்பொருளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக, பூங்கா நகரமான பெங்களுரூவில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 2-வது முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தவார் சந்த் கெலாட் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெங்களூருவில் 108 மீட்டர் உயரம் கொண்ட திரு நடபிரபு கெம்பேகவுடாவின் வெண்கலச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்
- பெங்களூருவில் திரு நடபிரபு கெம்பேகவுடாவின் 108 மீட்டர் உயரமுள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் அருகில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
- பெங்களூரு நகரத்தை உருவாக்கிய நடபிரபு கெம்பேகவுடாவின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- ஒற்றுமை சிலை புகழ் ராம் வி சுதார் இதனை வடிவமைத்து, 98 டன் வெண்கலம் மற்றும் 120 டன் எஃகு மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.