கார்கிலில் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி
- கடந்த, 2014ல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை நம் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் கார்கிலில் கொண்டாடினார்.
- நாட்டின் பிரதமராக, 2014ல் மோடி பொறுப்பேற்ற பின் வந்த முதல் தீபாவளியை இமயமலையில் உள்ள உலகின் மிக உயர்ந்த போர் களமான சியாச்சின் பனிமலை சிகரத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார். அதற்கு அடுத்த ஆண்டு, 2015ல் பஞ்சாப் எல்லையில் வீரர்களுடன் கொண்டாடினார்.
- 2016ல், ஹிமாச்சல பிரதேசத்தில் இந்தோ - திபெத் எல்லை போலீசாருடனும், 2017ல், ஜம்மு - காஷ்மீர், பந்தி போராவிலும், 2018ல், உத்தரகண்டின் ஹர்சில் என்ற இடத்திலும், 2019ல் ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியான ரஜவுரியிலும், 2020ல் ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும், 2021ல் ஜம்முவின் நவ்ஷேராவிலும் தீபாவளியை ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பிரதமர் கொண்டாடினார்.
வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து பிரதமராக இந்தியர் போட்டியின்றி தேர்வு
- ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின. பிரதமர் பதவிக்கான போட்டியில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் ஆகியோர் இருந்தனர்.
- நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட் (வயது 49) போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார்.
- எனினும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரம் இருக்கும்போது, போட்டியில் இருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
- ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை இன்னும் பெறவில்லை.
- இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குள் பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார்.
- இந்த நிலையில், பென்னி மார்டண்ட்டிற்கு 100 எம்.பிக்கள் ஆதரவு கிடைக்காததால் அவர் பிரதமர் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
- இதனால், இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆக போட்டியின்றி தேர்வானார்.
வெற்றிகரமாக 36 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோ
- எல்.வி.எம். - 3 என்பது இஸ்ரோவின் அதிக எடைக் கொண்ட ராக்கெட் ஆகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி.- எம்.கே 3 என்று அழைக்கப்பட்டது.
- இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒன்வெப் நிறுவனம், அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில், 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது.
- இதுதொடர்பாக ஒன்வெப் நிறுவனம் மற்றும் இஸ்ரோ இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி ஏழு நிமிடங்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, 36 செயற்கைக்கோள்களுடன், எல்விஎம் - 3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
- பூமியில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்கள் 15 வினாடியில், ராக்கெட் திட்டமிட்டபடி 601 கிலோமீட்டர் துாரமுள்ள புவி சுற்றுவட்ட பாதையில் ஐந்தாயிரத்து 796 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்த துவங்கியது. பின்னர் அடுத்த சில நிமிடங்களில் அனைத்து செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.
- இதன்மூலம் 'எல்விஎம் 3' ராக்கெட் முதல்முறையாக வணிக பயன்பாட்டுக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் உயரம் 43 புள்ளி 50 மீட்டராகும். இஸ்ரோ ஏவியதிலேயே மிகவும் அதிக எடைகொண்ட ராக்கெட் இதுவே ஆகும்.
தீபாவளியையொட்டி 15.75 லட்சம் விளக்கொளியில் மிளிர்ந்த சரயு நதி கின்னஸ் சாதனை
- தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது.
- கடந்த ஆண்டு தீபோற்சவத்தின் போது, அயோத்தியா நகரில் 9 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு இருந்தது. இதனை முறியடிக்கும் முயற்சியாக இந்த ஆண்டில் 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த சாதனையை படைப்பதில், ஆவாத் பல்கலை கழகத்தின் மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும் பெருமளவில் பங்காற்றினார்கள். பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.