அக்னி பிரைம் ஏவுகணை 3வது சோதனை வெற்றி
- மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அக்னி ஏவுகணையில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
- இதன்படி, அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 1,000 - 2,000 கி.மீ., துாரத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி பிரைம் ஏவுகணையின் முதல் சோதனை, கடந்தாண்டு ஜூனில் நடந்தது.
- இரண்டாவது சோதனை டிசம்பரில் நடந்தது. இந்நிலையில், இந்த ஏவுகணையில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய தலைமுறை ஏவுகணையாக மேம்படுத்தும் பணி நடந்து வந்தது.
- இந்த ஏவுகணையின் மூன்றாவது சோதனை, ஒடிசா மாநில கடலோர பகுதியில் நடந்தது. இதில், திட்டமிட்ட இலக்கை, ஏவுகணை துல்லியமாக தாக்கியதை அடுத்து, சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும், அதன் செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததாகவும் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டம்
- பஞ்சாபில் அமலில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
- இம்மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தனது கட்சி வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது.
- அதன்படி, வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது.
- கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறுகையில், ''அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்,'' என்றார்.
இம்ரான் கான் தகுதி நீக்கம் - தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை
- பாகிஸ்தான் பிரதமா்களுக்கு வெளிநாட்டு அரசுகள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை அந்த நாட்டின் கருவூலத் துறை பாதுகாத்து வருகிறது.
- இந்த நிலையில், நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பு வகித்தபோது, அவருக்கு சவூதி பட்டத்து இளவரசா் முகமது சல்மான் வழங்கிய விலையுயா்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களை மலிவான விலை கொடுத்து அவா் வாங்கிக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
- அந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம், வழக்கின் தீா்ப்பை கடந்த 19-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், தோதல் ஆணையத்திடம் சொத்து விவரங்களை மறைத்த குற்றத்துக்காக இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்வதாக ஆணையத்தின் 4 உறுப்பினா்களும் ஒரு மனதாக தீா்ப்பளித்தனா்.
- தோதல் ஆணையத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-பாகிஸ்தான் கட்சி அறிவித்துள்ளது.
22வது சட்டத் திருத்தம் நிறைவேறியது - இலங்கை அதிபர் அதிகாரம் பறிப்பு
- இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு சிறிசேனா அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 19ஏ திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க இந்த திருத்தம் வகை செய்தது. பின்னர், ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே, அந்த திருத்தத்துக்கு மாற்றாக 20ஏ திருத்தம் கொண்டு வந்தார்.
- அதில், நாடாளுமன்றத்தை விட அதிபருக்கே கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இலங்கையில் சமீபத்தில் நடந்த போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் அதிபர், பிரதமர் பதவிகளில் இருந்து விலகியதை தொடர்ந்து, அதிபரின் அதிகாரங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
- அதை ஏற்று அரசியல் சட்டத்தில் 22-வது திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை இலங்கை அரசு உருவாக்கியது. அதில், அதிபரின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டதுடன், நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.
- நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த மசோதா மீது நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்கியது. இதன் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இதில், 225 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 179 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- இதன் மூலம், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவின் வெற்றியாக கருதப்படுகிறது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை அன்குஷ்
- ஸ்பெயினில் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் அன்குஷ் பங்கேற்றார்.
- அரையிறுதிக்கு எகிப்தின் நடா மெதானியை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தார். இதில் அன்குஷ், டோக்கியோ ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஜப்பானின் சுசாகியை சந்தித்தார்.
- போட்டியின் துவக்கத்தில் அன்குஷ் 0-4 என பின்தங்கினார். இதன் பின் அன்குஷை கீழே சாய்த்த சுசாகி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அன்குஷ் வெள்ளி வென்றார்.
உலக துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் சாகர்
- எகிப்தில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் ஜூனியர் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சாகர் டாங்கி (588 புள்ளி), வருண் தோமர் (583) முறையே முதலிரண்டு இடங்களை பிடித்து, 'ரேங்கிங்' சுற்றுக்குள் நுழைந்தனர்.
- இதில் அபாரமாக ஆடிய சாகர், 253.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் வருண், 251.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- பைனலில் சாகர், சீனாவின் ஜின்காங் மோதினர். இதில் ஏமாற்றிய சாகர் 12-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- இதுவரை 10 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்கலம் என, 28 பதக்கங்களை அள்ளிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் சீனா (23 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம்) உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் மனாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவடத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
- உத்தராகண்ட் மாநிலம் மானாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவட ஊர்தித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- முன்னதாக, பிரதமர் கேதார்நாத் சென்று ஸ்ரீ கேதார்நாத் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். அவர் ஆதி குரு சங்கராச்சாரியார் சமாதிக்கு சென்று மந்தாகினி அஸ்தபத் மற்றும் சரஸ்வதி அஸ்தபத் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
- பிரதமர் பத்ரிநாத் சென்று ஸ்ரீ பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜையும் செய்தார். பின்னர் அலக்நந்தா நதிக்கரையோரம் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
- உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் ஆளுநர் ஓய்வு பெற்ற ஜெனரல் குர்மித் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தீரத் சிங் ராவத், உத்தராகண்ட் அமைச்சர் திரு தன்சிங் ராவத், பிஜேபி மாநிலத்தலைவர் திரு மகேந்திர பட் உள்ளிட்டோர் இந்நிகழ்வில், பங்கேற்றனர்.