ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா நிறைவேற்றம்
- தமிழக சட்டசபை, 17ம் தேதி துவங்கி, நிறைவடைந்தது. 'ஆன்லைன்' விளையாட்டு தொடர்பான சட்டம் இயற்ற, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
- அந்த குழு அளித்த அறிக்கை அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய, அரசு முடிவு செய்தது.இதற்காகவும், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
- அவசர சட்டத்துக்கு, அக்., 1ல் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
- இந்த சட்டம், பணம் அல்லது பிற பந்தயப் பொருட்கள் வைத்து, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் நபருக்கு, மூன்று மாதம் வரை சிறை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க, வழிவகை செய்கிறது.
- ஊடகங்களில் விளம்பரம் செய்யும் அல்லது விளம்பரம் செய்ய காரணமாக இருக்கும் நபருக்கு, ஓராண்டு வரை சிறை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
- இணையவழி சூதாட்ட சேவை வழங்குகிற நபருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க, சட்டம் வழிவகை செய்கிறது.
- இது தவிர, தமிழ் பல்கலை துணைவேந்தரை, மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா; 2022ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் தொடர்பான மசோதா உட்பட, 12 மசோதாக்கள், இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.
பாகிஸ்தான் எல்லையில் புதிய விமானப்படை தளம் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- குஜராத்தின் காந்திநகரில், பாதுகாப்புத்துறை கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீசா என்ற இடத்தில் அமையும் விமான படை தளத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- வட மேற்கு பிராந்தியத்தில் ராஜஸ்தானில் உள்ள பரோடி, குஜராத்தின் புஜ், நாளியா ஆகிய இடங்களில் விமான தளங்கள் உள்ளன. விமான தளம் அமைய உள்ள தீசா பாக். எல்லையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது.
- குஜராத்தின் அகமதாபாத்,பாவ் நகர் மற்றும் வதோதராவில் பெரிய,பெரிய தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மிர்பூர் காஸ், ஐதராபாத் போன்ற இடங்களில் எப்.16 போர் விமானங்களை அந்த நாடு நிறுத்தி உள்ளது.
- எனவே, குஜராத் தொழிற்சாலை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அதை தடுக்கவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கவும் தீசாவில் புதிய தளம் அமைக்கப்பட உள்ளது.
- தீசாவில் விமான தளம் செயல்படும்போது பாகிஸ்தானின் ஐதராபாத், கராச்சி, சுக்கூர் போன்ற நகரங்களை இந்திய விமானங்கள் எளிதில் தாக்கி அழிக்க முடியும்.
ஹுக்கா பார் - 3 ஆண்டு சிறை மசோதா நிறைவேறியது
- சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
- பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதிகளில் இந்த சேவையை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை.
- எனவே சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003-ஐ திருத்தி, புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும், அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது.
- தொடர்ந்து இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பிற்குப் பின்னர் நிறைவேறியது.
பெருமைக்கான பாதை எனும் பெயரில் 12வது ஆண்டாக பாதுகாப்புத்துறை கண்காட்சி
- பெருமைக்கான பாதை எனும் பெயரில் 12வது ஆண்டாக பாதுகாப்புத்துறை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்துக்கு வந்துள்ளார்.
- இந்த முறை பாதுகாப்புத்துறை கண்காட்சியில், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் ஸ்டால்கள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சியில் முதல்முறையாக இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
- வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்படும் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து நடத்தும் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
- இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் தயாரித்த ஹெச்டிடி-40 ரக பயிற்சி விமானத்தை வெளியிட்டார். இந்த விமானம் பயிற்சி பைலட்களுக்கு உதவியாகவும், அவர்களுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்கள் மூலம் விண்வெளியில் பாதுகாப்புப் படைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்துடன் 'மிஷன் டெஃப்ஸ்பேஸ்' பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் குஜராத்தில் தீசா விமானப் படை நிலையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- பாதுகாப்புத்துறை தளவாடங்கள், கருவிகளை உருவாக்கும் 7 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவாகவும், இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் 451 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் செய்யப்பட உள்ளது.
குஜராத்தின் அடலாஜில் உள்ள த்ரிமந்திரில் மிகச்சிறந்த பள்ளிகள் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- குஜராத்தின் அடலாஜில் உள்ள த்ரிமந்திரில் மிகச்சிறந்த பள்ளிகள் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- த்ரிமந்திரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.4260 கோடி மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இம்மாநிலத்தில் புதிய வகுப்பறைகள், நவீன வசதி கொண்ட வகுப்பறைகள், கணினி சோதனைக் கூடங்கள், அடிப்படை கட்டமைப்பின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவை கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்
தமிழ் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் - இனி வேந்தருக்கு பதில் அரசு
- தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில், அந்த சட்டத்தில் வேந்தர் என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்.
- குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்தது.
- அதேபோல், தமிழகத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்தம் செய்வதற்காக கடந்த ஏப்ரல் 25-ந் தேதியன்று சட்டசபையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
- அதன் படி, தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாக்கள் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறியது.