உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் காலமானார்
- உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆக. 22-ல் அனுமதிக்கப்பட்ட முலாயம் சிங்குக்கு, சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (10.10.2022) அவர் உயிரிழந்தார்.
- உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங், மூன்று முறை அம்மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
- மேலும், மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு 10 முறை, மக்களவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அவரது மறைவைத் தொடர்ந்து, உத்தர பிரதேச அரசு 3 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. பிஹார் அரசு ஒரு நாள் துக்கம் அறிவித்தது. லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
- இந்நிலையில், முலாயம் உடல் அவரது சொந்த ஊரான, எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைஃபைக்கு கொண்டு செல்லப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிப்காட் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஆதரவு - முதல்வா் முன்னிலையில் அண்ணா பல்கலை.,யுடன் ஒப்பந்தம்
- சிப்காட் நிறுவனமானது அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்பப் பங்குதாரராக நியமித்து அதனுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
- இந்த ஒப்பந்தப்படி, ஒரகடம் மருத்துவ உபகரணங்கள் பூங்காவுக்கான சிறப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், சிப்காட் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும் வகை செய்யப்படும். மருத்துவ தொழில்நுட்பத் துறையில் உள்ள உற்பத்தியாளா்களின் திறனை மேம்படுத்துவதுடன், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தயாரிப்புகளை உருவாக்கவும் சிப்காட் நிறுவனத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் உதவிடும்.
- இதேபோன்று, சிப்காட் நிறுவனத்துக்கும் பிரிட்டன் துணை உயா் ஆணையரகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம், சூளகிரி நகா்திறன் பூங்காவுக்கான தொலைநோக்குப் பாா்வை மற்றும் முதன்மைத் திட்டம் தயாரிக்கப்படும்.
- இந்த இரு ஒப்பந்தங்களும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திங்கள்கிழமை பரிமாறப்பட்டன.
- இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.
காவல் நிலையங்களில் அறிமுகமான "GREAT" திட்டம்
- பொதுமக்கள் யாரிடம் புகார் மனு அளிப்பது, எப்படி அளிப்பது என்ற சந்தேகம் நாள்தோறும் காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமனியர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
- இதனை களையும் விதமாகவும் பொதுமக்கள் காத்திருப்பை தவிர்க்கும் விதமாகவும், தமிழகத்திலயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் (Grievance Redressal And Tracking System) GREAT திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார்
குஜராத்தின் அகமதாபாதில் உள்ள மோடி கல்வி வளாகத்தின் முதலாம் தி்ட்டத்தினை பிரதமர் தொடங்கி வைத்தார்
- குஜராத்தின் அகமதாபாதில் உள்ள மோடி கல்வி வளாகத்தின் முதலாம் திட்டத்தினை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
- இந்த விழாவில் குஜராத் முதல்வர் திரு.பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.ஆர்.பாட்டீல், குஜராத் மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.