நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் பிரதமர் மோடி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்
- இந்திய கடற்படையில் ஏற்கனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது.
- இதன் நினைவாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டது. போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு வடிமைத்த இந்த கப்பல், கேரளாவின் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது.
- கப்பலின் அடிப்பகுதி கடந்த 2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கடலில் இறக்கப்பட்டது. மொத்தம் ரூ.20,000 கோடி செலவில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- போர்க்கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
- கடற்படைக்கு புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்படை கொடியில், இருந்த புனித ஜார்ஜின் சிவப்பு பட்டை நீக்கப்பட்டு, சத்ரபதி சிவாஜி மகாராஜின் ராயல் முத்திரை இணைக்கப்பட்டுள்ளது.
- இந்தியக் கடற்படை கொடியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வெள்ளைக் கொடியில் தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
- அதோடு கடற்படையின் மோட்டோவும் தேவநாகிரி மொழியில் இடம் பெற்றுள்ளது. எண்கோண வடிவில் எட்டு திசைகளில் குறிக்கும் வகையில் இதன் சின்னம் உள்ளது. 1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடற்படை கொடியில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து சங்க தலைவரானார் கல்யாண் சவுபே
- இந்திய கால்பந்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 45 வயதான கல்யாண் சவுபே 33 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வானார்.
- அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வீரரான பாய்ச்சுங் பூட்டியாவுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. இந்த தேர்தலில் 34 மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்து சங்க பிரதிநிதிகள் வாக்களித்தனர்.
- 85 வருட இந்திய கால்பந்து வரலாற்றில் முன்னாள் வீரர் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
மின்சாரம், ஹைட்ரஜன் வாகனங்களை அதிகரிக்க ஐஐடி புதிய ஒப்பந்தம்
- சென்னை ஐஐடியில் போக்குவரத்து துறையில் முன்னெடுக்கப்படும் தொழிநுட்பங்களுக்கு புதிய தீர்வுகளை உருவாக்கும் வகையில், சென்னை ஐஐடி மற்றும் டெய்ம்லர் இந்தியா கமர்சியல் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்த நிகழ்ச்சியில், சிஐஐ தமிழ்நாடு சேர்மன் மற்றும் டெய்ம்லர் இந்திய வணிக வாகன நிறுவனத்தின் இயக்குனர் சத்யகாம் ஆர்யா, ஐஐடி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை ஐஐடி மற்றும் டெய்ம்லர் இந்தியா கமர்சியல் நிறுவனம் ஒப்பந்தம் மூலம், எதிர்கால போக்குவரத்தில் புதிய தீர்வுகள் கண்டறியப்படும்.
- மேலும், புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டறியப்பட்டு தொழில் வளர்ச்சி உதவப்படும் மற்றும் எதிர்காலத்தில் மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் வாகன பயன்பாடுகள் அதிகரிக்க வழிவகை செய்யப்படும்.
ஸ்டார்பக்ஸ் சிஇஓ.வாக இந்தியாவை சேர்ந்த லஷ்மன் நியமனம்
- இங்கிலாந்தை சேர்ந்த சர்வதேச நுகர்வோர் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனை நிறுவனமான ரெக்கிட் பென்சிக்சர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லஷ்மன் நரசிம்மன் (55).
- தற்போது காபி நிறுவனமான ஸ்டார்பக்சின் புதிய சிஇஓ.வாக நியமிக்கப்பட்டு உள்ளார். அக்டோபர் 1ம் தேதி இப்பதவியை அவர் ஏற்கிறார்.
மங்களூருவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- பிரதமர் திரு.நரேந்திர மோடி, மங்களூரூவில், ரூ.3,800 கோடி மதிப்பிலான இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- அங்கு திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இந்திய வரலாற்றில் இந்த நாள் என்றும் நினைவில் நிறுத்த தக்க நாளாகும் என்று அவர் தெரிவித்தார்.
- பிராந்திய பாதுகாப்பாக இருந்தாலும், பொருளாதார பாதுகாப்பாக இருந்தாலும், இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இதனால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை அடைவதாக தெரிவித்தார்.