ஆகஸ்ட் 2022 மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,43,612 கோடி
- 2022 ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,43,612 கோடியாகும். இதில் மத்திய ஜிஸ்டி ரூ.24,710 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,951 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.42,067 கோடி உட்பட) ரூ.77,782 கோடி, கூடுதல் வரி (செஸ்) ரூ.10,168 கோடி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,018 கோடி உட்பட).
- ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.29,524 கோடியையும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.25,119 கோடியையும் அரசு வழங்கியுள்ளது.
- முறைப்படியான பைசலுக்கு பின், 2022 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி-க்கான வருவாய் ரூ.54,234 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி-க்கான வருவாய் ரூ.56,070 கோடியாகவும் இருந்தது.
- கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,12,020 கோடி என இருந்த நிலையில், இந்த ஆண்டு வருவாயில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.
- சென்ற ஆண்டு இதே காலத்தைவிட பொருட்கள் இறக்குமதி மூலமான வருவாய் 57 சதவீதமும் உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் (சேவைகள் இறக்குமதி உட்பட) 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.
- தமிழ்நாட்டில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.8,386 கோடியாகி 19 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
- புதுச்சேரியில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.156 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.200 கோடியாகி 28 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
தேஜஸ் 2.0 போர் விமானம் தயாரிக்க மத்திய அரசு அனுமதி
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டத்துக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
- மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தேஜஸ் எம்.கே.1 ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. மொத்தம் 123 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை ஒப்பந்தம் வழங்கி உள்ளது. இதில் 30 விமானங்கள், விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- அடுத்த கட்டமாக தேஜஸ் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
- அடுத்த 3 ஆண்டுகளில் தேஜஸ் மார்க் 2 மாதிரி விமானம் தயாராகி விடும் என்றும் வரும் 2030-ல் உற்பத்தி தொடங்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- தற்போது விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள தேஜஸ் மார்க் 1 ரக விமானம் 3 டன் எடை கொண்டதாகும். தேஜஸ் மார்க் 2 விமானம் 4 டன் எடை கொண்டதாக இருக்கும். இதில் அதிநவீன ஆயுதங்கள், ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன.
செப்.15 - விஷ்வேஸ்வரய்யா பிறந்த தினம் - 'பொறியாளர் தினமாக' கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை
- இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரும் 'பாரத ரத்னா' விருது பெற்றவருமான சர் எம்.விஷ்வேஸ்வரய்யா பிறந்த தினமான செப்.15-ம் தேதியை, 'பொறியாளர் தினமாக'க் கொண்டாட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பு (ஐஎன்டிஇஎஃப்) கோரிக்கை விடுத்தது.
- இதை ஏற்ற மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், விஷ்வேஸ் வரய்யாவின் பிறந்த தினமான செப்.15-ம் தேதியை 'பொறியாளர் தினமாக' கொண்டாட முடிவெடுத்துள்ளது.
இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலா் கடன்: சா்வதேச நிதியம் ஒப்புதல்
- அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு வருகிறது.
- வெளிநாடுகளிடமிருந்து இலங்கை இதுவரை 51 பில்லியன் டாலா் வரை கடன் பெற்றுள்ளது. இதில் 28 பில்லியன் டாலரை வரும் 2027-க்குள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.
- மேலும், இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து, பொருளாதார சுணக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் வரையிலான நிலவரப்படி, எரிபொருளின் விலை உயா்வு காரணமாக இலங்கையின் பணவீக்கம் 64.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
- உணவுப் பொருள் விலை பணவீக்கத்தை பொருத்தமட்டில் சா்வதேச அளவில் ஜிம்பாப்வே, வெனிசூலா, துருக்கி, லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை 5-இவது இடத்தில் இருப்பதாக உலக வங்கி அதன் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.
- இந்தச் சூழலில், வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடனை கடந்த ஏப்ரலில் திருப்பி செலுத்த தவறிய நிலையில், சா்வதேச நிதியத்திடம் கடன் பெறுவதற்கான பேச்சுவாா்த்தையில் இலங்கையில் ஈடுபட்டது.
- ஐஎம்எஃப்-இலங்கை அதிகாரிகள் அளவில் நடைபெற்று வந்த இந்தப் பேச்சுவாா்த்தையில், இலங்கைக்கு அடுத்த 48 மாதங்களில் (4 ஆண்டுகள்) 2.9 பில்லியன் டாலா் கடன் வழங்க சா்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் கடனுதவி செய்யப்படுவதாக ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சிக் கணிப்பு குறைத்து அறிவித்தது 'மூடிஸ்'
- 'மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்' நிறுவனம், இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான வளர்ச்சிக் கணிப்பை, குறைத்து அறிவித்துள்ளது.
- இதற்கு முன், நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, கடந்த மே மாதத்தில், அறிவித்திருந்த நிலையில், இப்போது 7.7 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
- இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2021ல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.3 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 7.7 சதவீதமாக குறையும்.
- மேலும், 2023ல் வளர்ச்சி 5.2 சதவீதமாக குறையும். வட்டி விகித உயர்வு, சீரற்ற பருவமழை, உலக பொருளாதார வளர்ச்சி சரிவு ஆகியவை காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி வேகம் தடைபடும்.
- வட்டி விகித அதிகரிப்பு, டிசம்பர் காலாண்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அடுத்த ஆண்டிலும் பாதிப்பு நீடிக்கும்.பணவீக்கம் மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
- பணவீக்க அழுத்தத்தை குறைக்க, ரிசர்வ் வங்கி, தன்னுடைய பணக் கொள்கையில் இறுக்கமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும்.
கொச்சி மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலையில் பிரதமர் மோடி கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார். குருப்பந்தாரா-கோட்டயம்-சிங்கவனம் ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்திய ரயில்வேயின் 27 கிலோ மீட்டர் இரட்டைப் பாதையை பிரதமர் திறந்து வைத்தார்.
- மேலும் கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் கொல்லம்-புனலூர் இடையே சிறப்பு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 76 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கொல்லம்-புனலூர் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட பகுதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், கொச்சி மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
- முன்னதாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமத்திற்கு சென்ற பிரதமர், ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்தார்.
ஜேம்ஸ் வெப்பின் புதிய கண்டுபிடிப்பு
- அண்மையில், ஜேம்ஸ் வெப்பின் பார்வையில் பட்டது ஒரு அதிசயம். ஆம், நம் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ஒரு வெளிக் கிரகத்தின் வளி மண்டலத்தில், கார்பன்டையாக்சைடு இருப்பதை ஜேம்ஸ் வெப் படம்பிடித்திருக்கிறது. அந்த கிரகத்திற்கு வாஸ்ப்-39பி என்று பெயரிடப்பட்டுள்ளது.
- கடந்த ஜூலையில் வாஸ்ப்-96பியில் தண்ணீர் இருப்பதற்கான தடயத்தை ஜேம்ஸ் வெப்பின் ஸ்பெக்ட்ராஸ்கோபி கருவிகள் கண்டறிந்தன. தற்போது அது அனுப்பியுள்ள டிஜிட்டல் தரவுகளை வைத்துப் பார்க்கையில், அதே கிரகத்தின் வளி மண்டலத்தில் கார்பன்டையாக்சைடு இருப்பதற்கான தடயத்தையும் ஜேம்ஸ் வெப் படம்பிடித்துள்ளது.
- வெளி கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்றும், மனிதன் குடியேறுவதற்கேற்ற வளி மண்டலம் மற்றும் நீர் உள்ளனவா என்றும் ஆராய்வு தான் ஜேம்ஸ் வெப்பின் நோக்கம். அதை முதல் முறையாக நிறைவேற்றியுள்ளது அந்த தொலைநோக்கி.
டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் வெற்றி
- ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக எடுத்துள்ள முயற்சி என்று சாடிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் தன்னுடன் இருப்பதை காட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
- அதில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.
- வாக்கெடுப்பிற்கு முன்பு பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர், இதன் காரமாக ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக எந்தவொரு வாக்கும் பதிவாகிவில்லை.
- டெல்லியில் மொத்தம் இருக்கும் 62 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் 59 பேர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வந்திருந்தனர். மற்ற மூவரில் இருவர் வெளிநாட்டில் உள்ளனர்.
- சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கில் சிறையில் உள்ளார். சபாநாயகர் தவிர, மொத்தம், 58 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.