உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா
- நடப்பு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இந்த தொடரில் அவர் வெல்லும் நான்காவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- புவேர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தை சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றுள்ளார் புனியா.
- 2013, 2018, 2019 மற்றும் 2022 என உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் புனியா பதக்கம் வென்றுள்ளார். இதில் 2018-ல் அவர் வெள்ளி வென்றிருந்தார். மற்ற அனைத்தும் வெண்கலப் பதக்கமாகும்.
கீழடியில் தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுப்பு
- கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ம் தேதியிலிருந்து 8-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
- ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் ஆன பகடை, காதில் அணியும் அணிகலன், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- தற்போது தந்தத்தால் ஆன பெரிய மணி (அணிகலன்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன.
- இந்த மணியின் நீளம் 5.6 செ.மீ., மொத்த விட்டம் 4 செ.மீ. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு வழுவழுப்பாகக் காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக இருந்தன.
உலக பாரா உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் 'தங்கம்'
- உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் தங்கம் வென்றார்.மொராக்கோவில், உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் நடந்தன.
- இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் 'டி47' பிரிவில் இந்தியா சார்பில் நிஷாத் குமார் பங்கேற்றார். அதிகபட்சமாக 2.10 மீ., தாண்டிய நிஷாத் குமார் முதலிடம் பிடித் தங்கத்தை தட்டிச் சென்றார்.
- டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் 2.06 மீ., தாண்டி, வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், ஆசிய சாதனை படைத்திருந்தார். தற்போது தனது சொந்த ஆசிய சாதனையை முறியடித்துள்ளார்.
- தவிர இவர், 2019ல் துபாயில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதலில் (டி47) வெண்கலம் வென்றிருந்தார்.
- ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப் 46' பிரிவில் இந்தியா சார்பில் அஜீத் சிங், தேவேந்திர ஜஜாரியா பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 64.77 மீ., எறிந்து முதலிடம் பிடித்த அஜீத் சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- பாராலிம்பிக்கில் இரண்டு தங்கம் (2004, 2016), ஒரு வெள்ளி (2020) வென் ஜஜாரியா, உலக சாம்பியன்ஷிப் (2013ல் தங்கம், 2015ல் வெள்ளி), ஆசிய பாரா விளையாட்டு (2014ல் வெள்ளி) போட்டிகளிலும் பதக்கத்தை கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்தன.
- மற்ற இந்திய வீரர்களான நீரஜ் யாதவ் (தங்கம், வட்டு எறிதல் எப் 55-56), அனில் குமார் (வெள்ளி, 100 மீ., ஓட்டம் டி54), ரஞ்ஜீத் பதி (வெண்கலம், ஈட்டி எறிதல் எப்57) பதக்கம் வென்றனர்.
துாரந்த் கால்பந்து - பெங்களூரு 'சாம்பியன்'
- கோல்கட்டாவில், அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் துாரந்த் கோப்பை கால்பந்து 131வது சீசன் நடந்தது.
- கோல்கட்டாவில் நடந்த பைனலில் மும்பை சிட்டி, பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
- இதன்மூலம் பெங்களூரு அணி, இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகள் அனைத்திலும் கோப்பை வென்றது. ஏற்கனவே 'ஐ-லீக்' (2013-14, 2015-16), ஐ.எஸ்.எல்., (2018-19), பெடரேஷன் கோப்பை (2014-15, 2016-17), சூப்பர் கோப்பை (2018) தொடர்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஜப்பான் - இந்திய கடல்சார் பயிற்சி 2022 முடிவடைந்தது
- ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட ஜிமெக்ஸ் 22, வங்கக் கடலில் செப்டம்பர் 17 அன்று வழக்கமான மரபுப்படி இரு தரப்பும் பரஸ்பரம் பிரியாவிடை அளித்து முடிவுக்கு வந்தது.
- ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎஃப்) ஃபிளாக் ஆபிசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள், ஒரு வார கால பயிற்சியில் பங்கேற்றன.
- ஜிமெக்ஸ் 22 இரண்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்ட சில முக்கிய பயிற்சிகளைக் கண்டது. இரு தரப்பும் மேம்பட்ட நிலை நீர்மூழ்கி எதிர்ப்புப் போர், ஆயுதத் துப்பாக்கிச் சூடு மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சியில் கப்பலில் செல்லும் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றன.
- 2012 இல் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் -இன் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதன்மையை ஒருங்கிணைத்தது.