தாய்மொழி சார்ந்த எழுத்தறிவு திட்டத்துக்காக கலிங்கா சமூக அறிவியல் நிறுவனத்துக்கு யுனெஸ்கோ விருது
- உள்ளூர் மக்களுக்கு கல்வியை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம், அச்யுதா சமந்தா என்பவரால் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 1992-93-ல் தொடங்கப்பட்டது.
- இங்கு முற்றிலும் இலவச கல்வி, ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு, விளையாட்டு பயிற்சி ஆகியவை தங்கும் வசதி கொண்ட பள்ளியில் வழங்கப்படுகிறது.
- இவர்களுக்கு உயர் கல்வியும் கிஸ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. இது உள்ளூர் மாணவர்கள் மட்டுமே படிக்கும் உலகின் முதல் பல்கலைக்கழகமாகும். கிஸ் மூலம் இதுவரை 70 ஆயிரம் உள்ளூர் மாணவர்கள் மேம்பாடு அடைந்துள்ளனர்.
- இந்நிலையில், கலிங்கா நிறுவனத்துக்கு, தாய் மொழி சார்ந்த பன்மொழிக் கல்வி திட்டத்துக்காக, கொரியா அரசாங்கத்தால் வழங்கப்படும் யுனெஸ்கோ மன்னர் செஜாங் எழுத்தறிவு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் நாட்டின் 5-வது மற்றும் ஒடிசாவின் முதல் கல்வி நிறுவனம் கிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச எழுத்தறிவு நாளை ஒட்டி கோட் டி ஐவரியில் செப்.8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இவ்விருதில் ரூ.16 லட்சம் ரொக்கம், பதக்கம், பட்டயம் ஆகியவை அடங்கும்.
அசாமில் அமைதியை ஏற்படுத்த 8 தீவிரவாத குழுக்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து
- அசாம் மாநிலத்தில் தீவிரவாத குழுக்கள் பல இயங்கி வந்தன. இவற்றில் சில கடந்த 2012-ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கியிருந்தனர்.
- இந்நிலையில் அசாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் 8 தீவிரவாத குழுக்கள் கையெழுத்திட்டன.
- ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அசாம் அமைப்பு, பிர்சா கமாண்டோ படை, சந்தல் புலி படை, ஆதிவாசி மக்கள் ராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
புதிய தலைமை செயலகத்துக்கு அம்பேத்கரின் பெயர் - முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு
- தெலங்கானா மாநிலத்துக்கு ஹைதராபாத்தில் புதிதாகக் கட்டப்படும் தலைமை செயலக பணிகளை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆய்வு செய்தார்.
- இந்திய சட்டத்தை இயற்றி, பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க் கையில் ஒளி ஏற்றி வைத்த டாக்டர் அம்பேத்கரின் பெயரே புதிய தலைமை செயலகத்துக்கு சூட்டப்படும். சட்டத்தை இயற்றும் இடத்தில் அம்பேத்கரின் பெயரை சூட்டுவதே நியாயமானதாகும். இது நம் நாட்டுக்கே முன்னு தாரணமாக திகழ வழி வகுக்கும். அனைத்து தரப்பு மக்களும் கவுரமாக வாழ வேண்டும் என்பதே அண்ணல் அம்பேத்கரின் கனவு. அம்பேத்கரின் அரசியல் சாசன சட்டம் பிரிவு 3-ன் படியே தெலங்கானா மாநிலம் உதய மானது.
- தெலங்கானா மாநிலம் உருவாக அம்பேத்கரும் ஒரு காரணம். இதேபோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கும் டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம் - மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
- அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- அதன்படி, அண்ணா பிறந்த நாளான நேற்று, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். குழந்தைகளுக்கு கேசரி, ரவா கிச்சடி, சேமியா உப்புமா வழங்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் 'தமிழக அரசின் நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி' என்னும் நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கோவையைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் போகத் வெண்கலம் வென்றார்
- 17வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
- இதில் நடந்த மகளிர் 53 கிலோ உடல் எடைப்பிரிவின் போட்டியில் ஸ்வீடனின் எம்மா ஜோனா மால்ம்கிரெனை தோற்கடித்து வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கட்டடங்களை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாமல் மாற்றுவதற்கு” ‘அங்கன் 2022’-எனும் 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது
- குறைந்த செலவில் புதிய பசுமை குடியிருப்புகள் மூலம் இயற்கையை விரிவுபடுத்துதல் என்ற பொருள் உடைய அங்கன் 2022 எனும் மூன்று நாள் சர்வதேச மாநாடு 2022 செப்டம்பர் 14 அன்று தொடங்கியது.
- “கட்டடங்களை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாமல் மாற்றுவது” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை மத்திய மின்சார அமைச்சக செயலாளர் திரு அலோக் குமார் தொடங்கிவைத்தார்.
- இந்தியா – சுவிட்சர்லாந்து கட்டுமான எரிசக்தித் திறன் திட்டத்தின் கீழ், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமையுடன் ஒருங்கிணைந்து மின்சார அமைச்சகத்தின் எரிசக்தி திறன் குழு அங்கன் 2.0 மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
- சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் மாத்தூர், சர்வதேச எரிசக்தி முகமையில், எரிசக்தி திறன் பிரிவின் தலைவர் டாக்டர் பிரயான் மதர்வே உட்பட 75 பிரபல பேச்சாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
- மேலும் எட்டு தொடக்க அமர்வுகள், எட்டு மையப்பொருள் அமர்வுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், கட்டடங்களில் எரிசக்தி திறன் ஆகியவை தொடர்பாக 15 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.