பிரதமர் நரேந்திர மோடி, ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தம்
- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவு கடந்த 2021-ல் 50 ஆண்டுகளை எட்டியது.
- அதன்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரமதர் நரநேதிர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.
- இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் ஷேக் ஹசீனாவும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வங்கதேச வெள்ள நிலவரம், தீவிரவாத பிரச்சினை, இருதரப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, நீர்வளம், வர்த்தகம், முதலீடு, எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, வளர்ச்சியில் கூட்டுறவு, பிராந்திய மற்றும் பல்நோக்கு விஷயங்கள் தொடர்பாக இருதரப்பு குழுவினரும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இரு தலைவர்கள் முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடி விடுவித்தது மத்திய அரசு
- 2022-23 நிதி ஆண்டுக்கு, நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறையாக 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடி வழங்க 15-வது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதன்படி, இந்தத் தொகை 12 மாதத் தவணையாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- இந்நிலையில், 6-வது தவணையாக செப்டம்பர் மாதத்துக்கு ரூ.7,183 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட 14 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை மத்திய செலவினத் துறை விடுவித்துள்ளது. அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கு இதுவரையில் ரூ.43,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- அரசமைப்புச் சட்டம் 275 அடிப்படையில், நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருமானப் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வுக்கு பிறகு மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிட்டு வருவாய் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களை நிதிக் குழு பரிந்துரை செய்யும். பரிந்துரை செய்யப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய செலவினத் துறைஒவ்வொரு ஆண்டும் 12 தவணைகளில் மானியம் வழங்கும்.
- 2022-23-ம் நிதி ஆண்டுக்கு ஆந்திரா, அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.
திருச்சூர், நிலாம்பூர், வாரங்கல் நகரங்களுக்கு ஐ.நா., அங்கீகாரம்
- ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, பல்வேறு நாடுகளில் உள்ள நீண்ட கால கற்றல் முறையை ஊக்குவிக்கும் வகையில், அவற்றில் சிறப்பாக செயல்படும் நகரங்களை அங்கீகரித்து வருகிறது.
- இவ்வாறு அங்கீகரிக்கப்படும் நகரங்கள், சர்வதேச அளவிலான கற்றல் நகரங்களின் பட்டியலில் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் பட்டியலில், தற்போது 44 நாடுகளைச் சேர்ந்த, 77 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- நம் நாட்டிலிருந்து, தெலுங்கானாவின் வாரங்கல், கேரளாவின் திருச்சூர், நிலாம்பூர் ஆகிய நகரங்கள், இந்த பட்டியலில் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.
- உக்ரைன் தலைநகர் கீவ், தென் ஆப்ரிக்காவின் டர்பன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜா ஆகிய நகரங்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக, இந்த பட்டியலில், இதுவரை மொத்தம் 76 நாடுகளைச் சேர்ந்த, 294 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டின் விளையாட்டு வீரர்களுக்கான முதல்வர் விருதுகள் அறிவிப்பு
- கடந்த 1996-ம் ஆண்டு முதல், முதல்வர் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2004-ல் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், 2008-ல் விளையாட்டு நிர்வாகி,கொடையாளர், நடுவர்களும் விருதாளர்களாக சேர்க்கப்பட்டனர்.
- அதன்படி, 2018-19ம் ஆண்டுக்குசிறந்த விளையாட்டு வீரர்களாக டென்னிஸ் வீரர்கள் எஸ்.பிரிதிவிசேகர், ஜீவன் நெடுஞ்செழியன், சிறந்த வீராங்கனைகளாக பி.நிவேதா (துப்பாக்கி சுடுதல்),சுனைனா சாரா குருவில்லா (ஸ்குவாஷ்), சிறந்த பயிற்சியாளர்களாக சத்குருதாஸ் (ரைபிள் ஷூட்டிங்), ஜி.கோகிலா (தடகளம்), சிறந்த உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியராக சி.ராஜேஷ் கண்ணா (கால்பந்து), எம்.பி.முரளி (கைப்பந்து), சிறந்தநடுவராக வி.பி.தனபால் (கூடைப்பந்து) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- சிறந்த விளையாட்டு அமைப்பாளராக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- அதேபோல, 2019-20-ம் ஆண்டுக்கு சிறந்த வீரர்களாக பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (டென்னிஸ்), ஆர்.மோகன்குமார் (தடகளம்), சிறந்த வீராங்கனைகளாக பி.அனுசுயா பிரியதர்ஷினி (டேக்வாண்டோ), எஸ்.செலேனா தீப்தி(மேஜைப்பந்து), சிறந்த பயிற்சியாளராக கே.எஸ்.முகமது நிஜாமுதீன் (தடகளம்), ஜி.கோகிலா (கால்பந்து), சிறந்த உடற்கல்வி இயக்குநர், ஆசிரியராக ஆர்.ராமசுப்பிரமணியன் (பால் பாட்மிண்டன்), ஏ.ஆரோக்கிய மெர்சி (கைப்பந்து), சிறந்த நடுவராக டி.சுந்தரராஜ் (கபடி) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரஷியாவில் 'வாஸ்டாக்' என்ற பெயரிலான ராணுவ கூட்டுப் பயிற்சி
- கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி ரஷியாவில் 'வாஸ்டாக்' என்ற பெயரிலான ராணுவ கூட்டுப் பயிற்சி தொடங்கியது. ரஷியாவின் தொலைதூர கிழக்கு பகுதியிலும், ஜப்பான் கடல் பகுதியிலும் நடைபெறும் இந்தப் பயிற்சி, புதன்கிழமை (செப்.7) நிறைவடைகிறது.
- இதில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றுள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்தப் பயிற்சியில் சீன முப்படைகள் சாா்பில் 2,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா். அந்நாட்டின் 300 ராணுவ வாகனங்கள், 21 போா் விமானங்கள், 3 போா்க் கப்பல்கள் உள்ளிட்டவையும் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- இந்நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு வெளியே சொகெய்வ்ஸ்கி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
- அவருடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சொகெய் ஷோய்கு, முப்படை தலைமைத் தளபதி வலேரி கெராசிமோவ் ஆகியோா் உடனிருந்தனா்.
வட இந்தியாவில் முதல் தமிழ் துறை - டெல்லி ஜேஎன்யூ-இல் தமிழ் துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
- உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்புகளைப் பரப்பத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையாக முகிழ்த்து எழச் செய்துள்ளது தமிழக அரசு. இதற்கென ரூ.5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு கொள்கை ஆவணம் தயாரிப்பதற்காக புதிய குழு உருவாக்கம்
- மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் புதிய தேசிய கூட்டுறவு கொள்கை ஆவணத்தை தயாரிப்பதற்கான குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- காந்திகிராம் ஊரக நிறுவனத்தின் கூட்டுறவுத் துறையின் தலைவரான டாக்டர் பிச்சை, தமிழ்நாடு கோ-ஆப் டெக்ஸ் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் செயலாளர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இந்தக் குழுவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமை வகிக்கிறார். கூட்டுறவுத் துறையின் பொருளாதார வளர்ச்சி மாதிரியை உருவாக்கும் பணிகளில் இந்த குழு ஈடுபட உள்ளது.
- கடந்த 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கூட்டுறவு கொள்கை ஆவணங்களில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் பேராசிரியர் சுக்பால் சிங், ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் போர்டு இயக்குனர் சதீஷ், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் இணைச்செயலாளர் உள்ளிட்ட 47 முக்கிய நபர்கள், புதிய தேசிய கூட்டுறவு கொள்ளை ஆவணம் தயாரிப்பதற்கான குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.