22-வது காமன்வெல்த் போட்டி - 4வது நாள் முடிவுகள்
- 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம், இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயை எதிர்கொண்டார். போட்டியில் பின்தங்கியதால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட அவர், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- அதேபோல், ஆடவருக்கான ஜூடோ போட்டியின் 66 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் விஜய்குமார் யாதவ் வெண்கல பதக்கத்தை, தன்வசப்படுத்தினார்.
- பளுதூக்கும் போட்டியில், 71 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 93 கிலோ எடை, கிளீன் & ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடை என மொத்தம் 212 கிலோ எடையை தூக்கினார்.
- இதேபோல், பேட்மிண்டன் கலப்பு பிரிவில், சிங்கப்பூரை எதிர்க்கொண்ட இந்திய அணி 3-0 எனும் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
- ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியிலும், நைஜீரியாவை 3க்கு பூஜ்யம் எனும் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியது
- நேற்றைய தினம், இந்தியாவிற்கு பளுதூக்குதலில் ஒரு பதக்கமும், ஜூடோ பிரிவில் இரண்டு பதக்கங்களும் கிடைத்தன. இதன்மூலம் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன், பட்டியலில் இந்தியா 6ம் இடத்தில் உள்ளது. 30 தங்கப் பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
5ஜி ஏலம் முடிந்தது ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை விற்பனை
- 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி துவங்கியது. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.
- முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்தது. இந்நிலையில், 7வது நாளான நேற்றுடன் ஏலம் நிறைவடைந்தது. இதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்ச தொகையான ரூ.88,078 கோடிக்கும், பார்தி ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ரூ.18,784 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளன. அதானி நிறுவனம் மிக குறைந்த அளவிலான 5ஜி அலைக்கற்றைகளை ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
தெற்கு சூடானிற்கான ஐ.நா.வின் புதிய படை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த மோகன் சுப்ரமணியம் நியமனம்
- ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர், தெற்கு சூடான் நாட்டிற்கான அமைதியை நிலை நாட்டுவதற்காக புதிய படை தளபதியாக இந்தியாவின், தமிழகத்தை சேர்ந்த மோகன் சுப்ரமணியத்தை நியமித்துள்ளார்.
- தற்போது மோகன் சுப்ரமணியம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் ஆக உள்ளார்.
ஜூலை 2022 ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,48,995 கோடி
- கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,48,995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வரியை விட இந்த ஆண்டு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து கிடைத்த மாத வருவாயில் இது இரண்டாவது அதிக தொகை ஆகும்.
- இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,751 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.32,807 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.79,518 கோடி, செஸ் வரி ரூ.10,920 கோடி ஆகும்.
- ஜிஎஸ்டி வசூல் 1.4 லட்சம் தாண்டுவது 6வது முறை. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து 5வது முறையாக ரூ.1.4 லட்சதை தாண்டியுள்ளது.
- தொடர்ந்து 13 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. மகராஷ்டிரா மாநிலம் 22,129 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது.
- 9,795 கோடி ரூபாயுடன் கர்நாடகா, 2ம் இடத்திலும், 9,183 கோடியுடன் குஜராத் 3ம் இடத்திலும், 8,449 கோடியுடன் தமிழ்நாடு 4ம் இடத்திலும், 7,074 கோடி ரூபாயுடன் உத்தரப் பிரதேசம் 5ம் இடத்திலும், 6,791 கோடி ரூபாயுடன் அரியானா 6ம் இடத்திலும் உள்ளது.
116 நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது
- இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் எந்தவொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் இந்தியாவிற்கோ அல்லது இந்தியாவிலிருந்தோ விமான சேவையை அளிக்க முடியும்.
- இந்த ஒப்பந்தம் தொடர்பாக 116 வெளிநாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதே போல் இந்தியாவிலிருந்தும் அந்த வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை இயக்க முடியும்.
- சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
- ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், கனடா, சீனா, சிரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் இந்தியா, பிரான்ஸ் கடற்படை கப்பல்கள் பயிற்சி
- இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் தர்காஷ், ஜூலை 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் எஃப்.என்.எஸ் சோம் கப்பலுடன் கடல்சார் கூட்டுமுயற்சி பயிற்சியில் ஈடுபட்டது.
- கடல்சார் கண்காணிப்பு விமானம் ஃபால்கோன் 50 உடன் கூட்டு வான் பயிற்சிகளில் பங்கேற்றன. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே உள்ள உயர் வல்லுனத்துவம் மற்றும் இயங்கு நிலையை இந்த பயிற்சிகளின் வெற்றி குறிக்கிறது.