இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து
- இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால், மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் ஃபிபா அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய ஃபிபா முடிவு செய்துள்ளது.
செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் - 5 உறுதிமொழிகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு
- சுதந்திர தின அமுதப் பெருவிழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க, 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
- வரும் 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அதற்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்குவதற்காக நாம் 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க,இளைஞர்கள் தங்கள் அடுத்த 25 ஆண்டு கால வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.
- செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி 83 நிமிடங்கள் (1 மணி 23 நிமிடங்கள்) உரையாற்றினார். அப்போது அவர் டெலிபிராம்ப்டரை பயன்படுத்தாமல் காகித குறிப்புகளை வைத்தே உரை நிகழ்த்தினார்.
- முதலாவதாக, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அடிமைத்தன மனப்பான்மைக்கு முடிவு கட்ட வேண்டும். 3-வதாக இந்திய பாரம்பரியத்தை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, அனைவரும் ஒற்றுமையின் வலிமையை உணர்ந்து செயல்பட வேண்டும். 5-வதாக பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட குடிமக்கள் அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
- வாரிசுஅரசியல், ஊழல் ஆகிய 2 தீய சக்திகள் நாட்டின் வளர்ச்சியை தடுத்து வருகின்றன. இவற்றை வேரோடு ஒழிக்க வேண்டும். நாட்டின் செல்வத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு, அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- அதைத் தொடர்ந்து, பல்வேறு காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.
- அதன்பின், கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், சரியாக 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
- முதல்வர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:
- இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதந்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம். நாட்டுக்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்கள் இறக்க நேரிட்டால், வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- அந்த வகையில், இந்திய விடுதலையின் பவள விழா நிறைவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
- விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் 15 முதல் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருதுபாண்டிய சகோதரர்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947.60 கோடி கூடுதலாக செலவாகும்.
- விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 'விடுதலை நாள் அருங்காட்சியகம்' ஒன்று சென்னையில் அமைக்கப்படும்.
இலங்கை கடற்படைக்கு 'டோா்னியா்' விமானம் - இந்தியா நன்கொடை
- இலங்கை கடற்படையின் கடல்சாா் கண்காணிப்பை வலுப்படுத்தும்விதமாக 'டோா்னியா் 228' ரக விமானத்தை இந்தியா நன்கொடையாக திங்கள்கிழமை வழங்கியது.
- கொழும்பு காட்டுநாயக்க சா்வதேச விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோா்மடே, இந்த விமானத்தை அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தாா். அப்போது இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே உடனிருந்தாா்.