நகர்ப்புற மகளிர் பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்க 'பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்' - ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்
- நகர்ப்புற மகளிர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்கவும், மகளிர் பாதுகாப்பு திட்டமான நிர்பயா திட்டத்தை கண்காணிக்கவும் மாநகராட்சி சார்பில் 'பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் சேவையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்.
- சென்னை மாநகராட்சி சார்பில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் மற்றும் பயிற்சி கருத்தரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.
பொருளாதார நெருக்கடி - இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்
- இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அதில் வீழ்ந்த அந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, மக்கள் போராட்டம் என இலங்கை அரசுக்கு நாலாபக்கமும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
- இலங்கையின் பொருளாதாரமென்பது கிட்டத்தட்ட 80% பிற நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்துக்குக்கிடையில், இலங்கையின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்களும் கூறிவருகின்றனர்.
- இதனால் பெட்ரோல், டீசல் தொடங்கி காகிதம் வரை அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கடும் விலையுயர்வைச் சந்தித்துள்ளன. மேலும் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின்தடையும் ஏற்பட இலங்கையில் சாமான்ய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
- அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் இலங்கையில் அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
- 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலும், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவிலும் இடம் பெற்றுள்ளதாக, மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது.
- உலக அளவில் பாரம்பரிய, கலாசார இடங்களை கண்டறிந்து, அதை யுனெஸ்கோ அமைப்பு அடையாளப்படுத்தி வருகிறது.
மார்ச் 2022 மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல்
- கடந்த மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் ₹1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது.
- இதில், ஒன்றிய ஜிஎஸ்டி ₹25,830 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ₹32,378 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹74,470 கோடியாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில், இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலான ₹39,131 கோடியும் அடங்கும்.
- இதுபோல், செஸ் வரி ₹9,417 கோடி வசூலாகியுள்ளது. இதில், இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் மூலம் ₹981 கோடி கிடைத்துள்ளது.
- கடந்த மாத ஜிஎஸ்டி வசூல், முந்தைய ஆண்டு இதே மாதம் வசூலானதை விட 15 சதவீதம் அதிகம். மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, அதிகபட்சமாக கடந்த ஜனவரி மாதம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபுடன் சண்டிகரை இணைக்க மசோதா
- பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கும், ஹரியானாவுக்கும், ஒரே தலைநகராக சண்டிகர் உள்ளது.
- யூனியன் பிரதேசமான சண்டிகரை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.சமீபத்தில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
- இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையில், இன்று (ஏப்.01) ஒரு நாள் சிறப்பு கூட்டத் தொடர் நடந்தது. அதில், சண்டிகரை உடனடியாக பஞ்சாபுடன் இணைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.