ரூ.1,000 கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் 1,156 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் சர்வதேச அறைகலன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- விழாவுக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார்.
ரூ.4,755 கோடியில் புதிய தொழில்கள் தொடங்க 33 புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது அந்த பூங்காவில் தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் ரூ.2 ஆயிரத்து 845 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
- இதுதவிர தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,910 கோடி முதலீட்டில் புதிய தொழில்கள் தொடங்க 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- தொழில் துறை சார்பில் ரூ.1,643 கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 653 பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.
- இதே போன்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை சார்பில் ரூ.267 கோடி முதலீடு மற்றும் 2 ஆயிரத்து 373 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.
- இதன் மூலம் நடந்த விழாவில் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 755 கோடி முதலீடும், 17 ஆயிரத்து 476 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 33 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேகாலயாவுக்கும் அசாமுக்கும் இடையே எல்லைப் பிரச்னை
- வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மேகாலயாவுக்கும், அதன் அண்டை மாநிலமான அசாமுக்கும் இடையே, பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது.
- இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை, மேகாலயா உரிமை கோரியது. எனினும், அதை ஏற்க அசாம் மறுத்தது.பின், அதற்கு தீர்வு காண, இரு மாநில அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
- இந்தக் குழு, எல்லையை வரையறுக்கும் பணிகளில் ஈடுபட்டது. சர்ச்சைக்குரிய எல்லை கிராமங்களுக்கு, இரு மாநில குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். எல்லையை வரையறுக்க, சிறப்பு தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
- இதில், உரிமை கோரப்பட்ட 36 கிராமங்களில், ஆறு கிராமங்களைத் தவிர, மீதமுள்ள 30 கிராமங்களும் மேகாலயா மாநிலத்தின் அங்கமாக இருக்க, குழுவினர் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.
- இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு மாநிலங்களுக்கும் இடையே, கடந்த ஜனவரியில் கையெழுத்தானது.
மான்டெரே ஓபன் டென்னிஸ் தொடர்
- மெக்சிகோவில் நடைபெற்ற மான்டெரே ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.
- இறுதிப் போட்டியில் கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவுடன் (20 வயது, 35வது ரேங்க்) மோதிய நடப்பு சாம்பியன் லெய்லா (19 வயது, 21வது ரேங்க்) 6-7 (5-7), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 2 மணி, 52 நிமிடம் போராடி வென்றார்.
- மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அவர் 5 முறை கமிலாவிடம் இருந்து சாம்பியன்ஷிப் பாயின்ட்டை பறித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இத்தொடரில் லெய்லா பட்டம் வென்றிருந்தார்.
மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும் Spic தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக ரூ.150.4 கோடி செலவில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- தினமும் 22 மெகா வாட் என ஆண்டுக்கு 42 மி.யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடையது மின்நிலையம் என்று கூறப்படுகிறது. உற்பத்தியாகும் அனைத்து மின்சாரமும் ஸ்பிக், க்ரீன் ஸ்டார் உரங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
- இந்தியா- இலங்கை இடையே 9-வது கூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
- முதல்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கிறது. அதன் பின் இரண்டாம் கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
- இலங்கை கடற்படையின், ரோந்து கப்பலான எல்எல்என்எஸ் சயூரலா, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.
- முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி திரிகோணமலையில் நடைபெற்றது.
- இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல் சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.
- 2021 மார்ச் 31-க்கு பின்னரும் 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளில் ஸ்வதந்த்ரதா சைனிக் சம்மான் யோஜனா என்று அழைக்கப்படும் எஸ்எஸ்எஸ்ஒய் திட்டத்தைத் தொடர்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த நிதி மதிப்பீடு ரூபாய் 3,274.87 கோடி ஆகும்.
- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இத்திட்டத்தை தொடர்வதற்கான முன்மொழிதல் பெறப்பட்டது.
- சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதற்கும், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது அவர்களிடம் இருந்து ஊக்கம் பெறுவதற்குமான அரசின் உறுதியை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது.
- பின்னணி விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தகுதியுடைய அவர்களது சார்ந்தோருக்கு ஸ்வதந்த்ரதா சைனிக் சம்மான் யோஜனா ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- தற்போது நாடு முழுவதும் உள்ள 23,566 பயனாளிகள் இதைப் பெற்று வருகின்றனர். ஓய்வூதியத் தொகை அவ்வப்போது திருத்தி அமைக்கப்டுவதோடு 2016 ஆகஸ்ட் 15 முதல் அகவிலைப்படியும் வழங்கப்படுகிறது.