நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு
- நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளனர்.
- இதனால் டாலருக்கு நிகரான ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. புதினின் இந்த புதிய அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக என்.மாலா, எஸ்.சவுந்தரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
- சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்துக்கு அரசு மற்றும் அரசு சாராத வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர்மோகன், கே.குமரேஷ்பாபு, அப்துல் ஹமீத், ஆர்.ஜான்சத்யன்ஆகிய 6 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்தமாதம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்திருந்தது.
- அதன்படி, இதில் முதற்கட்டமாக என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
- இவர்கள் இருவரும் விரைவில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
மத்திய பட்ஜெட் மானிய ஒதுக்கீடு ஒப்புதல் வழங்கியது லோக்சபா
- பிப்., 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 - 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்து வந்தது.
- மத்திய பட்ஜெட் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தனி மசோதா தாக்கல் செய்யப்படும்.
- வரி வசூல் உள்ளிட்டவை அடங்கிய, நிதி மசோதா தனியாக தாக்கல் செய்யப்படும். இவை இரண்டும் பண மசோதாக்கள் என்பதால், லோக்சபாவில் நிறைவேறினால் போதும். ராஜ்யசபாவில் இவற்றின் மீது விவாதம் மட்டும் நடக்கும். ராஜ்யசபாவின் ஒப்புதல் இதற்கு தேவையில்லை.
- அதன்படி, துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கான மசோதாவை, நிர்மலா சீதாராமன் மார்ச் 24 லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
- இதில் எதிர்க்கட்சிகள் சில திருத்தங்களை முன்வைத்தன. அவை நிராகரிக்கப்பட்டு, இறுதியில் குரல் ஓட்டெடுப்பில் இந்த மசோதா நிறைவேறியது. இதன் வாயிலாக மத்திய பட்ஜெட் நடவடிக்கைகளில், மூன்றில் இரண்டு பங்கு முடிந்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமனம்
- கடந்த மாதம் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இதற்கான உத்தரவை ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக 4 ஆண்டுகள் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கான சட்டமசோதா நிறைவேறியது
- 2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தாக்கல் செய்தார்.
- அதில், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் நலனை உறுதி செய்யவும், ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களை வழங்குவதற்கான நிவாரணத்தை அளிக்கவும், நலவாரியம் ஒன்றை அமைக்க 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு இருந்தது.
- அதன்படி, தமிழ்நாட்டில் வாழாத தமிழர்களின் நலனுக்காக கூட்டுறவு சங்கங்கள் அல்லது வேறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டம் உருவாக்கப்பட்டது.
- தற்போது, சங்கமாக இருந்ததை வாரியமாக மாற்றியுள்ளதால் அதிலுள்ள பதவிகளையும் அதற்கேற்ற வகையில், தலைவர், உறுப்பினர் என்று மாற்றுவதாகவும்,
- வாரியத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 13-ல் இருந்து 15-ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்காத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையரை அந்த வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக பதவி வகிக்கவும் அரசு முன்மொழிந்துள்ளது.
- அதன்படி, இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.