இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானிகள் பயிற்சி விமானம் ஹன்சா-என்.ஜி.யின் கடல் மட்ட சோதனை வெற்றி
- இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வுக்கூடங்களில் ஒன்று பெங்களூருவிலுள்ள தேசிய விமானவியல் ஆய்வகம் (என்ஏஎல்). இந்த ஆய்வகம், விமானி பயிற்சிக்காக ஹன்சா என்ற இரு நபர் விமானத்தை 1993-ல் உருவாக்கியது.
- மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டபுதிய தலைமுறை ஹன்சா - என்.ஜி (New Generation) என்ற அடையாளத்தோடு செப்.2021-ல் முதன்முதலாக பறக்க விடப்பட்டது.
- பிப்.19 முதல் மார்ச் 5 வரை கடல் மட்ட சோதனைகளில் இந்த விமானம் 18 மணி நேரம் ஈடுபடுத்தப்பட்டது. விமானத்தின் பல்வேறுசெயல்பாடுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனைகளுடன் இதுவரை விமானம் 37 முறை பறக்க விடப்பட்டு 50 மணி நேரம் சோதிக்கப்பட்டது.
சர்தாம் திட்ட குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிக்ரி நியமனம்
- உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களை இணைக்கும் வகையிலும், எல்லைப் பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையிலும், கடந்த 2016ம் ஆண்டு சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கான உச்ச நீதிமன்றத்தன் உயர்மட்டக்குழு தலைவராக பேராசிரியர் ரவி சோப்ரா கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில், இந்த குழுவில் இருந்து விலகுவதாக கடந்த ஜனவரியில் ரவி சோப்ரா உச்ச நீதிமன்ற அமர்வுக்கு கடிதம் எழுதினார். நீதிபதிகள் சந்திராசூட், சூர்யாகாந்த் ஆகியோர் பேராசிரியர் ரவியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டனர்.
- இதனை தொடர்ந்து, சார்தாம் திட்டத்திற்கான உயர்மட்ட குழுவின் தலைவராக ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதபதி சிக்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திட்டத்தின் சுற்றுச்சூழல் விவகாரம் மற்றும் திட்டம் தொடர்பான பிற சிக்கல்களை கவனித்து வரும் கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.
பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை
- ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் அகர்வால் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- பேடிஎம் நிறுவனமும் தகுதியான தகவல் தொழில்நுட்ப தணிக்கைநிறுவனத்தை அமர்த்தி நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஐடி நிர்வாகத்தையும் தணிக்கை செய்ய வேண்டும்.
- தகவல்தொழில்நுட்ப தணிக்கையாளர்கள் அளிக்கும் அறிக்கைக்குப்பின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேர்ப்பது குறித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கும்.
ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக தேபசிஷ் பாண்டா நியமனம்
- ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக, தேபசிஷ் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
- பாண்டா, நிதி சேவைகள் துறையின் முன்னாள் செயலாளராக பணியாற்றியவர்.காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக பாண்டாவை நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
- இவரது பதவிக்காலம், துவக்கத்தில் மூன்று ஆண்டுகளாக இருக்கும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால நிதி உக்ரைனுக்கு ரூ.2,600 கோடியை வழங்கியது ஐரோப்பிய ஆணையம்
- உக்ரைனில் கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் ரஷியப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதுடன் தொடர் தாக்குதலையும் நடத்தி வருகிறார்கள்.
- இதற்கிடையே உக்ரைன் அரசு போரைச் சமாளிக்க பல நாடுகளின் உதவியை நாடி வரும் நிலையில் ஐரோப்பிய ஆணையம் அவசரகால நிதியாக உக்ரைனுக்கு ரூ.10,200 கோடியை(1.2 பில்லியன் யூரோ) வழங்க முன் வந்தது.
- இந்நிலையில், அவசரகால நிதியின் முதல் தொகையாக ரூ.2,600 கோடியை(300 மில்லியன் யூரோ) ஐரோப்பிய ஆணையம் உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
2021-22 நிதியாண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ 933.61 கோடியை இந்திய அரசுக்கு என்எச்பிசி வழங்கியது
- இந்தியாவின் முதன்மையான நீர்மின் நிறுவனமும், இந்திய அரசின் ‘மினி ரத்னா’ வகை-I நிறுவனமுமான என்எச்பிசி லிமிடெட், 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ 933.61 கோடியை மார்ச் 4, 2022 அன்று இந்திய அரசுக்கு வழங்கியது.
- 2020-21 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையின் அடிப்படையில் நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்திய அரசுக்கு ரூ 249.44 கோடியை நிறுவனம் ஏற்கனவே வழங்கியுள்ளது. மொத்த ஈவுத்தொகையாக 2021-22 நிதியாண்டில் இந்திய அரசுக்கு ரூ 1183.05 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- நிதி ஆண்டு ‘22 உடன் நிறைவடைந்த ஒன்பது மாதங்களில் ரூ 2977.62 கோடி நிகர லாபத்தை நிறுவனம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ 2829.16 கோடியாக இது இருந்தது. 2020-21 நிதி ஆண்டில் ரூ 3233.37 கோடி நிகர லாபத்தை நிறுவனம் ஈட்டியது.