1000வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் நிதானமாக விளையாடிய ஹோல்டர் அரை சதம் அடித்தார்.
- இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், 32 ஓவர்களில், இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- நேற்றைய போட்டியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி எனும் பெருமையை பெற்றது இந்தியா அணி.
ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு
- கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்து வைத்தார்.
- அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் ஆசியாவிலே மிகப் பெரியது. கர்நாடக அரசு இதனை ரூ.40 கோடி செலவில் உருவாக்கியுள்ளது.
- உலகளாவிய அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் சந்தையில் 10 சதவீதமான இடத்தை இந்தியா கைவசம் வைத்திருக்கிறது. வரும் 2027ம் ஆண்டில் இது 20 முதல் 25 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக சார்லஸ் & ராணியாக கமீலா - பிரிட்டன் ராணி விருப்பம்
- ''ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக சார்லஸ் பதவியேற்கும்போது, அவரது மனைவி கமீலா, ராணியாக இருக்க வேண்டும்,'' என, ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
- 'குயின் கன்சார்ட்'பிரிட்டன் ராணியாக பொறுப்பேற்று வரும் ஜூனில் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறார், 95 வயதாகும் ராணி எலிசபெத்.
- பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தின்படி ராணி ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது, அவரது கணவர்கள், 'பிரின்ஸ் கன்சார்ட்' எனப்படும் இளவரசராகவே கருதப்படுவர்.
- ராஜாவாக கருதப்படமாட்டார்கள்.அதே நேரத்தில் அரசர் பொறுப்பை ஏற்கும்போது, அவரது மனைவி 'குயின் கன்சார்ட்' எனப்படும் ராணியாகவே கருதப்படுவர்.
பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் 92-வது வயதில் காலமானார்
- பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார். மெலடி குயீன் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற அவரது இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்.
- 1972-ல் லதா மங்கேஷ்கர் பரிச்சே படத்திற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான முதலாவது தேசிய விருதைப் பெற்றார். பல ஆண்டு காலத்தில், பெருமைமிகு பாரத ரத்னா, ஆஃபீசர் ஆப் தி லெஜியன் ஆப் ஆனர், தாதா சாகிப் பால்கே விருது உள்பட பல தேசிய, சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
- 1984-ம் ஆண்டில் மத்தியப்பிரதேச அரசும், 1992-ல் மகாராஷ்டிரா அரசும் பாடும் திறமையை வளர்க்கும்வ்வகையில், லதா மங்கேஷ்கர் பெயரில் விருதுகளை நிறுவியுள்ளன.