1,700 கோடி ரூபாய் செலவில் இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை தொடர்வதற்கு ஒப்புதல்
- இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை (IFLDP) 2021-22ம் ஆண்டிலிருந்து 1,700 கோடி ரூபாய் செலவில் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- முந்தைய ஐஎஃப்எல்டிபி திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அல்லது மேலும் மறுஆய்வு செய்யும் வரை, இதில் எது முன்போ அதுவரை இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
- தோல் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தோல் துறையில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கூடுதல் முதலீடுகளுக்கு வழி ஏற்படுத்துவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது போன்றவற்றை இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
- 2017-18ம் ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டு வரை மனிதவள மேம்பாட்டு துணை திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 3.24,722 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் 2,60,880 பயிற்சியாளர்களுக்கு தோல் மற்றும் காலணி துறையில் வேலைகள் வழங்கப்பட்டன.
- கடந்த 2019-20ம்ஆண்டில், 12,947 தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 2020-21ம் ஆண்டில் கோவிட்-19 தொற்று காரணமாக எந்த பயிற்சியும் அளிக்க இயலவில்லை.
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன்
- இந்தியா - இங்கிலாந்து இடையிலான U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
- டாஸை வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் ஆட களமிறங்கியது.
- இங்கிலாந்து அணி 44வது ஓவரிலேயே 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் ராஜ் பாவா 5 விக்கெட்களும் ரவிகுமார் 4 விக்கெட்களும் குஷால் டம்பே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
- நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து 190 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 5 விக்கெட்களை கைப்பற்றியதோடு 35 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ராஜ் பவா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 40 லட்சம் ரூபாயும் பயிற்சியாளர்களுக்கு தலா 25 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
- ஆண்டிகுவாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யஷ் துல் தலைமையிலான இந்திய இளம் பட்டாளம் நாட்டிற்காக 5வது முறை கோப்பையை வென்றுள்ளது.
- U19 உலகக்கோப்பை தொடரில் 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை கோப்பை வென்ற ஒரே அணி எனும் வரலாற்றிச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா
பாகிஸ்தான் தூதா் நியமனம் - அமெரிக்கா ஒப்புதல்
- அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக சா்தாா் மசூத் கானை நியமனம் செய்து பாகிஸ்தான் சமா்ப்பித்த பரிந்துரைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
- இவா் பயங்கரவாதிகளின் ஆதரவாளா்' என்று குறிப்பிட்டு, அவருடைய நியமனத்தை அமெரிக்கா ரத்து செய்யவேண்டும்' என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்காட் பொரி வலியுறுத்தியிருந்த நிலையில், அவருடைய நியமனத்துக்கான ஒப்புதலை அமெரிக்கா அளித்துள்ளது.
- சா்தாா் மசூத் கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதராகவும், சீனாவுக்கான பாகிஸ்தான் தூதராகவும் இவா் இருந்துள்ளாா்.
தமிழ் பல்கலை மாணவி ஆய்வில் அரிய தாள் சுவடி கண்டுபிடிப்பு
- தஞ்சாவூர், தமிழ் பல்கலைக் கழகத்தின், அரிய கையெழுத்து சுவடித்துறையில், கடலுார் மாவட்டம், வடலுாரைச் சேர்ந்த கவுசல்யா, 25, கடந்த 2017-ம் ஆண்டு முதல் முனைவர் பட்ட ஆய்வுக்கு படித்து வருகிறார்.
- அருட்பிரகாச வள்ளலார் படைப்புகள் என்ற தலைப்பில், இவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். வடலுாரில் பல்வேறு சுவடிகளை பதிப்பு செய்தவர்கள், வள்ளலாரின் திருவருட்பா பங்களிப்பு செய்தவர்கள் ஆகியோரிடம் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
- அப்போது, திருவருட்பா முற்றோதல் செய்யும் டாக்டர் பாண்டுரங்கன் என்பவரிடம் கையெழுத்து சுவடிகள் தொடர்பாக கேட்டுள்ளார். அவரிடம் இருந்த அரியதாள் சுவடியை, கவுசல்யாவிடம் வழங்கியுள்ளார்.
- அந்த சுவடி தொகுப்பில், இலக்கண வழக்கப்பாடு அறிவுறுத்தும் பத்திரிகை, அனுஷ்டான விதி, பூவரங்க முதலியார் தொகுத்த கவிகள், குலோத்துங்க சோழன் கோவை, நியாய சாஸ்திரம் 16, அருணகிரிப் புராணம், திருக்கழுகுன்றக்கோவை, உலகம்மை கலித்துறை அந்தாதி தலைப்புகளில் 300 பக்கங்கள் உள்ளன.
- இதில், சித்தரபானு ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பதால், அது எந்த ஆண்டை சேர்ந்தது என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.அந்த அரிய தாள் சுவடியை திரட்டிய மாணவி கவுசல்யா, அரிய கையெழுத்துச் சுவடித்துறை தலைவர் கண்ணன் முன்னிலையில், தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவனிடம் வழங்கினார்.
- சுவடியை பெற்றுக் கொண்ட துணைவேந்தர், மாணவி கவுசல்யாவை வெகுவாக பாராட்டினார்.தமிழ் பல்கலையில் டாக்டர் ரா.பாண்டுரங்கன் பெயரில், அந்த தாள் சுவடி, அரிய கையெழுத்து சுவடித்துறை ஆவண பதிவேட்டில் பதியப்பட்டது.
பிரதமர் மோடி ஐதராபாத்தில் 216 அடி உயர சிலை திறப்பு
- தெலங்கானா மாநிலம், ஐதராபாத்துக்கு ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று வந்தார். பின்னர், சங்கரெட்டி மாவட்டம், படன்செருவில் உள்ள இக்ரிசாட் (சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்) சென்றார்.
- இக்ரிசாட் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்று 50ம் ஆண்டு லோகோவை வெளியிட்டு, சிறப்பு கண்காட்சியை பார்வையிட்டார். புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.
- பின்னர், ஐதராபாத் முச்சிந்தலில் சின்னஜீயர் ஆசிரமத்தில் ₹1,000 கோடியில் 1,500 டன் ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இது, சமத்துவ சிலை என்று அழைக்கப்படுகிறது. மேலும், கோயிலில் உள்ள 200 கிலோ தங்கத்தாலான ராமானுஜர் சிலையையும் அவர் வணங்கினார்.
அமேசான் சந்தை மதிப்பு ஒரே நாளில் 191 பில்லியன் டாலர் உயர்வு
- ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 191 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதன உயர்வை சந்தித்துள்ளது.
- இதன் மூலம் மிகப்பெரும் நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்கு அடுத்து நான்காவது இடத்தில் அமேசானும் இணைந்துளளது.
- இதற்கான காரணமாக பார்க்கப்படுவது அமேசானின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கும் அதிகமாகவே லாபத்தை ஈட்டியுள்ளதுதான். ஆன்லைன் விற்பனைத் தாண்டி அமேசானின் க்ளவுட் கம்ப்யூட்டிங், விளம்பரங்கள் மூலமாக வரும் வருவாய் அதிகரித்துள்ளது.
- கடந்த வாரத்தில் ஆப்பிள், ஒரே நாளில் 179 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு உயர்வை எட்டியது. அதை அமேசான் நேற்று முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 14 சதவிகிம் அளவுக்கான இந்த உயர்வு அமேசானின் சந்தை மதிப்பை 1.6 ட்ரில்லியன் டாலருக்குக் கொண்டு சென்றிருக்கிறது.