பாக்.,கிற்கு ரூ.7,482 கோடி ஐ.எம்.எப்., நிதி
- நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு உதவும் வகையில், 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கடனாக வழங்க, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம் முடிவு செய்தது.
- இந்த நிதி, தவணை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆறாவது தவணையாக, 7,482 கோடி ரூபாயை, ஐ.எம்.எப்., விடுவித்துள்ளது.
'நீட்' விலக்கு மசோதா அரசுக்கே அனுப்பினார் கவர்னர்
- செப்., 13ல் தமிழக சட்டசபையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்காக தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை, மறு பரிசீலனை செய்யும்படி, கவர்னர் ஆர்.என்.ரவி, சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
கீழ்பென்னாத்தூர் அருகே தேசிங்கு ராஜா வழிபட்ட கோயிலில் பட்டத்து யானை கல்வெட்டு கண்டெடுப்பு
- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேக்களூர் கிராமத்தில் பழமைவாய்ந்த நவநீத கோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த மதன்மோகன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், பழனிசாமி, மதன்மோகன், சுதாகர் மற்றும் தர் ஆகியோர் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூர் நவநீத கோபால கிருஷ்ணன் திருக்கோயிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பமும், கல்வெட்டும், சம்புவராயர் காலகல்வெட்டும் கண்டறிந்தனர்.
- மேக்களூர் கோயிலில் உள்ள யானைச்சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள கல்லின் மேல் பகுதியில் பாதி வட்டமாகவும் கீழ்ப்பகுதி நீளமாகவும் உள்ளது.
- மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் யானையின் உருவம் தனது தும்பிக்கையை மடக்கிய நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. யானையின் மேற்பகுதியில் இலட்சனைப்போல் கல்லின் அமைப்பு உள்ளது.
- கல்லில் உள்ள யானையின் கீழ் யானை பெயர் 'நீலகண்டரையன்' என தனியாக ஒரு வரியில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு கீழ் நான்கு வரியிலும் மொத்தம் ஐந்து வரியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
- யானைகளுக்கு எடுக்கப்படும் நினைவுக்கல் புத்தன் புவந திவாகரன் என்பவர் இந்தப் பட்டத்து யானைக்கு நீலகண்டரையன் என்று பெயர் கொடுத்துள்ளான். இது 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
- யானையின் உருவம் பொறித்து அதன் கீழ் நீலகண்டரையன் என்று சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற அமைப்பில் ஏற்கனவே திருநாவலூரில் ஒரு யானையும் பூதகன் உருவம் பொறித்து அதன் கீழ் பல்லவர் கிரந்த எழுத்தில் கலிநாரை என்று பொறிக்கப்பட்டுள்ளது.
- கூகையூரிலும் ஒரு சமஸ்கிருதச் சுலோகத்துடன் இதுபோன்ற அமைப்பில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் யானைகளுக்கும்-பட்டத்து யானைகளுக்கும் எடுக்கப்படும் நினைவுக்கல் என தொல்லியல் அறிஞர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.