மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு
- தற்போது ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன.
- இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
- அதன்படி, சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு 2022
- இந்தியா, மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாகத் மிர்ஜியோவ், துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்தேமுகமது, கஜகஸ்தான் அதிபர் காஸ்யம் ஜோமார்ட் டோகோயெவ், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜாபாரோவ், தஜிகிஸ்தான் அதிபர் எமமாலி ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயி லாக ஆலோசனை நடத்தினார்.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு
- ஒன்றிய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
- டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது.
- இந்நிலையில், ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் முழுவதும் நிறைவடைந்தது. ஏர் இந்தியாவின் பங்குகள் டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெடிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் TCSக்கு 2ம் இடம்
- பிராண்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) என்பது உலகின் முன்னணி பிராண்ட் மதிப்பீடு மற்றும் கன்சல்டன்சி நிறுவனமாகும். இது லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டது.
- ஆண்டுதோறும் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022ம் ஆண்டுக்கான உலகின் மதிப்புமிக்க 25 ஐடி நிறுவனங்களின் பட்டியலை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
- இதில் கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த ஐபிஎம்-ஐ பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது டிசிஎஸ் நிறுவனம் 12% வளர்ச்சியை பெற்றுள்ளது. அதே போல 2020ம் ஆண்டில் இருந்து 24% வளர்ச்சியில் அந்நிறுவனம் எட்டியிருக்கிறது. இதன் முலம் இந்த காலகட்டத்தில் 16.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது.
- உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனமான அசென்சர் முதல் இடத்தில் நீடித்து வருகிறது. மற்றொரு இந்திய நிறுவனமான இன்போசிஸ் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. 2ம் இடத்தில் இருந்த ஐபிஎம் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
- டிசிஎஸ் மட்டுமல்லாது இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, ஹெச்.சி.எல், LTI போன்ற பிற இந்திய நிறுவனங்களும் இந்த டாப் 25 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
- 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புக்கு உலகளாவிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுக்கான நிறுவனம் லார்சன் & டப்ரோ இன்ஃபோடெக்-வுடன் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
- இந்தியாவின் ஊரகப் பகுதியில் குறைந்த செலவில் 5ஜி வலைப்பின்னல் சேவை தொடர்பை சிறந்த முறையில் அளிப்பதற்கான ஆராய்ச்சியில் இவை ஈடுபட உள்ளன.
- ஊரகப் பகுதி தகவல் தொழில்நுட்ப தொடர்புக்கு 5ஜி அடிப்படை நிலையத்தை குறைந்த செலவில் உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.