நாட்டின் 73-வது குடியரசு தின விழா 2022
- நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் நடந்த அணிவகுப்பில் புதிய சீருடையுடன் ராணுவ வீரர்கள் வீர நடை போட்டு சென்றனர்.
- தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
- அவை இந்தியாவின் ஆயுத வலிமையை பறைசாற்றும் வகையில் இருந்தன. ராஜ்புத் படை பிரிவினர் ராஜபாதையில் மிடுக்குடன் அணிவகுத்தனர்.
- மெட்ராஸ் ரெஜிமென்ட், அசாம் ரெஜிமென்ட் வீரர்கள் உள்ளிட்டோர் கம்பீரமாக அணிவகுப்பில் பங்கேற்றனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் சீக்கிய படை பிரிவுகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.
- அதைத் தொடர்ந்து மேகாலயா, குஜராத், கோவா, ஹரியாணா, உத்தராகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. மத்திய அரசு துறை ஊர்திகளும் இதில் பங்கேற்றன.
- 25 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அணிவகுப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை சென்றது.
- இவை நடனங்கள், விளையாட்டுத் திறன், பல்லுயிர் பெருக்கம், சுதந்திரப் போராட்டம், மதம் சார்ந்த இடங்கள், வளர்ச்சி ஆகியற்றை சிறப்பிக்கும் வகையில் அமைந்திருந்தன.
- இவை தவிர மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 9 ஊர்திகளும் ஆயுதப் படைகள் மற்றும் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) சார்பில் 3 ஊர்திகளும் இடம்பெற்றன.
- கடற்படையின் அலங்கார ஊர்தி இரண்டு முக்கிய கருப்பொருளை சித்தரித்தது. முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் 1946-ம் ஆண்டு கடற்படை எழுச்சி. 2-வது, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கடற்படை உருவாக்கும் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை சித்தரித்தது.
- பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ல் நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு. விமானப் படை ஊர்தியில் மரியாதை செலுத்தப்பட்டது. ராணுவ வீரர்கள் புதிய வகை சீருடை அணிந்து ஆயுதங்களுடன் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.
- அணிவகுப்பு முடிந்ததும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. 75 விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்தன. இதில் ரஃபேல் விமானங்கள் விண்ணில் பறந்து சாகசங்களை நிகழ்த்தின.
- அத்துடன் சுகோய், ஜாகுவார், எம்ஐ-17, சாரங், அபாச்சி, டகோட்டா, ராஹத், மேக்னா, ஏகலைவா, திரிசூல், திரங்கா, விஜய், அம்ரித் போன்ற விமானங்கள், ஹெலி காப்டர்களும் வானில் வட்டமடித்து சாகசங்கள் செய்தன.
- தேசிய மாணவர் படையின் சாகச நிகழ்ச்சி, 480 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாராசூட் ரெஜிமெண்ட் ராணுவப் பிரிவு வீரர்கள் புதிய ரக போர் உடையில் பங்கேற்றனர்.
- முதன்முறையாக விமானப் படை விமானிகள், விமானத்தை இயக்கிய காட்சி அங்கிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதற்காக இந்திய விமானப் படையின் உதவியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பெற்றிருந்தது.
- அணிவகுப்பின்போது ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற ஷிவாங்கி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற 2-வது பெண் போர் விமானி ஷிவாங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
- வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங், இந்திய விமானப் படையில் 2017-ல் சேர்ந்தார். முதலில் மிக்-21 பைசன் ரக விமானத்தை இயக்கி வந்த ஷிவாங்கி தற்போது ரஃபேல்போர் விமானத்தை இயக்கி வருகிறார்.
- குடியரசு தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார்.
- அதில், அந்த மாநிலத்தின் மாநில மலரானபிரம்ம கமலம் பொறிக்கப்பட்டிருந்தது. அதோடு, மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டினையும் பிரதமர் மோடி அணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
வைரக்கல் திருட்டால் 30 ஆண்டு பகை தாய்லாந்தை மன்னித்தது சவுதி
- தாய்லாந்து பிரதமர் பிரயூத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பழைய பகைமையை மறந்து, இரு நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஒப்புக் கொண்டதாக சவுதி அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- முன்னதாக, சவுதி இளவரசரின் அரண்மனையில் பணிபுரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த வாயிற்காவலர் அங்கிருந்து ரூ.150 கோடி மதிப்பிலான 50 காரட் நீல வைரக்கல்லை கொள்ளையடித்து சென்ற பிறகு, தாய்லாந்து நாட்டினருக்கு விசா வழங்குவது, தாய்லாந்து முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை வருவது ஆகியவற்றை சவுதி அரசு தடை செய்திருந்தது.
- வைரக்கல்லை திரும்பி தரக் கோரிக்கை விடுத்த 3 சவுதி அரசு அதிகாரிகள் பாங்காக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை யாரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்காக கைது கூட செய்யப்படவில்லை.
- தற்போது இந்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ள தாய்லாந்து அரசு, 1989-90ம் ஆண்டுகளில் நடந்த இந்த கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
என்.டி.ஆர், ஸ்ரீ பாலாஜி உட்பட 13 மாவட்டங்கள் புதிதாக உதயம் - ஆந்திர அரசு
- ஆந்திராவில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 லிருந்து 26 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, திருப்பதியை மாவட்ட தலைநகராக கொண்ட ஸ்ரீ பாலாஜி மாவட்டம் உதயமாகிறது.
- ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு தற்போது ஆந்திராவில் இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 ல் இருந்து 26 ஆக உயர்த்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- ஆந்திராவில் தற்போது ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், பிரகாசம், அனந்தபுரம் ,கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் உள்ளன.
- நிர்வாக காரணங்களுக்காக ஆந்திராவில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்திருந்தது. இந்தநிலையில் பதிமூன்று மாவட்டங்களையும் இருபத்தி ஆறு மாவட்டங்களாக மாற்றியமைக்க தேவையான அரசாணையை மாநில அரசு இன்று வெளியிட்டது.
- புதிதாக அமைய இருக்கும் மாவட்டங்களுக்கு மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, அனகாப்பள்ளி, காக்கிநாடா, கோனசீமா, ஏலூரு, என்டிஆர் மாவட்டம், பாபட்லா, பல்நாடு, நந்தியாலா, ஸ்ரீசத்யசாய், அன்னமய்யா, மற்றும் ஸ்ரீ பாலாஜி என்று பெயரிடப்பட்டுள்ளன.
- இந்த நிலையில் ஓய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சந்திரபாபு நாயுடுவின் மாமனாரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆன என்.டி. ராமராவ் பெயரில் புதிய மாவட்டம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ‘பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட கூட்டுக் கடல்சார் பயிற்சி 2022 ஜனவரி 25ம் தேதி நிறைவடைந்தது.
- இந்தியக் கடற்படை, விமானப்படை, ராணுவம் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படைகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காகவும், தனது செயல்பாட்டுத் திட்டங்களை மதிப்பிடுவதற்காக இந்திய கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் இந்த கூட்டுப் பயிற்சியை 20 நாட்கள் நடத்தியது. கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையத் தலைமை அதிகாரியின் கீழ் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
- இந்த கூட்டுப் பயிற்சியில், இந்தியக் கடற்படையின் 40 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. மேலும், சுகாய், ஜாக்குவர், விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம், அவாக்ஸ் ரேடாருடன் கூடிய விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை அனுப்பியது. கடற்படையின் கண்காணிப்பு விமானங்கள் பி8ஐ, டார்னியர், ஐஎல் 38, மிக் 19கே ரக விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றன. இந்திய ராணுவத்தின் படைப்பிரிவுகள், கடலோரக் காவல்படையின் கப்பல்களும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.
- தற்போதைய கடல்சார் சவால்களை எதிர்கொள்ள, அனைத்துப் படைப்பிரிவுகளும் கூட்டாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் பயிற்சி வழங்கியது.
- இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான அறிவியல் & தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பில் முக்கிய மைல் கல்லாக, சுகாதார ஆராய்ச்சியில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டியர் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமமும், பாஸ்டியர் நிறுவனமும் கூட்டாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளன. புதிதாக மற்றும் மீண்டும் தோன்றும் தொற்று நோய்கள் மற்றும் பரம்பரைக் கோளாறுகள் மற்றும் வலுவான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரசேவைத் தீர்வுகளை இந்தியா மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
- மேலும், சாத்தியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும், மனித ஆரோக்கியத்தில் நவீன மற்றும் புதிதாக உருவாகும் பிரச்சினைகளில், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்திற்குட்பட்ட நிறுவனங்கள்/ஆய்வுக்கூடங்கள் மற்றும், பாஸ்டியர் நிறுவனத்தின் சர்வதேச கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
- அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனரும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் சேகர் சி.மன்டே-யும், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டியர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஸ்டீவர்ட் கோல் ஆகியோர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.