முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு
- குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
- இன்று காலை 11.47 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது தரையிறங்க 5 நிமிடமே இருந்தநிலையில் மதியம் 12.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் - 37ம் இடத்தில் நிர்மலா சீதாராமன்
- அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, 18-வது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் சிஇஓ-க்கள், நிறுவனத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நன்கொடையாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.
- இந்தப் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37-வது இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார். 2019-ல் 34-வது இடத்தையும், 2020-ல் 41-வது இடத்தையும் அவர் பிடித்திருந்தார்.
- மேலும் 3 இந்திய பெண்கள்இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ரோஷ்னி நாடார் (52), பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா (72), நைகா நிறுவனத்தின் சிஇஓ ஃபால்குனி நாயர் (88) ஆகியோர் உள்ளனர்.
- இப்பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும், 3-வது இடத்தை ஈரோப்பியன் சென்டிரல் வங்கித் தலைவர் கிறிஸ்டின் லகார்டேவும், 4-வது இடத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியான மேரி பர்ராவும், 5-வது இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மனைவியான மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸும் பிடித்துள்ளனர்.
ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அதிகாரம் மிக்க நாடுகளில் இந்தியாவுக்கு 4ம் இடம்
- ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையகமாகக் கொண்ட லோவி இன்ஸ்டிடியூட், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அதிகாரம், வளங்கள், பொருளாதார வளர்ச்சி, ராணுவ திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் பட்டியலிடுகிறது.
- இந்த ஆண்டுக்கான ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரம் மிக்க நாடுகள் பட்டியலில் ஒட்டுமொத்த காரணிகளின் அடிப்படையில் இந்தியா 4-ம் இடம் பிடித்துள்ளது.
- எனினும் 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்த ஆண்டில் புள்ளிகள் சரிந்த 18 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெற்றுள்ளது.
- இந்தப் பட்டியலில் முதல் முறையாக சீனாவை 2-ம் இடத்துக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான், இந்தியா ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜொமனி பிரதமராகப் பொறுப்பேற்றாா் ஒலாஃப் ஷோல்ஸ்
- 16 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த ஏஞ்சலா மொகெலுக்குப் பதிலாக, அந்தப் பொறுப்பை ஷோல்ஸ் ஏற்றுள்ளாா். 63 வயதாகும் ஒலாஃப் ஷோல்ஸ், ஹம்பா்க் நகர மாகாணத்தின் முதல் மேயா் ஆவாா்.
- அவரைப் பிரதமராக நியமிப்பது தொடா்பாக நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், அவரது நியமனத்துக்கு ஆதரவாக 395 வாக்குகளும் எதிராக 303 வாக்குளும் பதிவாகின.
- அதையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக ஒலாஃப் ஷோல்ஸ் அதிகாரப்பூா்வமாகத் தோந்தெடுக்கப்பட்டாா். அவரது தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சி, கிரீன்ஸ் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணி அரசு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் வாகன தொழிற்சாலை 'சிம்பிள் எனர்ஜி' ரூ.2,500 கோடி முதலீடு
- தமிழகத்தில் அமைக்கும் மின் வாகன தொழிற்பிரிவுகளில், 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக 'சிம்பிள் எனர்ஜி' நிறுவனம் அறிவித்துள்ளது.
- இந்நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூரில், 'சிம்பிள் ஒன்' என்ற மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. அடுத்து, தமிழகத்தில் ஓசூர் அருகே சூலகிரியில், மின் வாகனத் தொழிற்சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- சூலகிரியில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்டமான தொழிற்சாலை அமைய உள்ளது.இங்கு முதற்கட்டமாக ஆண்டுக்கு, 10 லட்சம் இரு சக்கர மின் வாகனங்கள் தயாரிக்கப்படும்.
- அடுத்த ஆண்டு மின் வாகன தயாரிப்பு துவங்கும். இரண்டாம் கட்ட தொழில் பிரிவு, 600 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு, 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் தொழிற்சாலையில், 2023ல் மின் வாகன தயாரிப்பு துவங்கும்.
- அந்நியச் செலாவணி கையிருப்பை (India currently has the fourth largest foreign exchange reserves in the world) அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
- 19 நவம்பர் 2021-ஆம் தேதி நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 6 640.4 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.48.28 லட்சம் கோடி) இருந்தது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கருத்துருவான பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை (பிஎம்ஏஒய்-ஜி) 2021 மார்ச்சுக்கு பின்னர் 2024 மார்ச் வரை தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் முடிக்கப்பட வேண்டிய 2.95 கோடி வீடுகள் இலக்கை எட்டுவதற்கு ஏற்றவகையில் இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. எஞ்சிய 155.75 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க ரூ.2,17,257 கோடி தேவை.
- இதில் மத்திய அரசின் பங்கு ரூ.1,25,106 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.73,475 கோடி. அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் வீட்டுவசதியை உறுதி செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு நிதி அளித்தல் மற்றும் அமலாக்கத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் இன்று ஒப்புதல் அளித்தது.
- 2020-21 விலை நிலவரப்படி, கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் மொத்த செலவு ரூ.44,605 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.39,317 கோடி நிதியுதவி செய்யவும், இதில் ரூ.36,290 கோடி மானியமாகவும், ரூ.3,027 கோடி கடனாகவும் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- நவீன தொழில்நுட்பத்துடன் இந்தத் திட்டத்தை 8 ஆண்டுகளில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 10.62 லட்சம் ஹெக்டேர் பாசன வசதிப் பெறும். 62 லட்சம் பேருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். 103 மெகாவாட் புனல் உற்பத்தியும், 27 மெகாவாட் சூரிய மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படும்.
- நாட்டின் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைக்காக 8 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 3 செயல்பாடுகளை தொடங்கியுள்ளன.
- ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிசிசிஎல் பேர்ல் சிட்டி ஃபுட் போர்ட் எஸ் இ இஸட் லிமிடெட் ஒன்றாகும். உணவு பதப்படுத்துதல் துறையை சேர்ந்த இந்த மண்டலம் தனது செயல்பாடுகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது.
- நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 2019-2 0-ல் ரூ 61.75 கோடியும், 2020-21-ல் ரூ 94.71 கோடியும், 2021-22-ல் 2021 செப்டம்பர் 30 வரை ரூ 48.03 கோடியும் வருவாய் ஈட்டி உள்ளன.
- வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பகுதியிலிருந்து டிசம்பர் 8, 2021 அன்று காலை 10.30 மணிக்கு சுகோய் 30 எம்கே-I சூப்பர் சானிக் போர் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
- பிரமோஸ் மேம்பாட்டில் இது முக்கியமான மைல்கல்லாகும். உள்நாட்டிலேயே வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளின் தொடர்ச்சியான உற்பத்தி முறையை இது உறுதிப்படுத்தியுள்ளது.
- இந்தப் பரிசோதனையின் போது கட்டமைப்பில் ஒருங்கிணைப்பும், செயல்பாட்டில் திறனும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை கடைசியாக ஜூலை 2021ல் நடத்தப்பட்டது.
- சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பிரதமரின் நலத்திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு மாவட்ட கனிம நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- 2021 அக்டோபர் வரை தமிழகத்திலிருந்து மாவட்ட கனிம நிதியின் வாயிலாக ரூ 888.89 கோடி வசூலான நிலையில், சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதமரின் நலத்திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ரூ 706.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஊட்டச்சத்து இயக்கத்தின்கீழ் கீழ் 2018-19 முதல் 2021-22ம் நிதியாண்டு வரை ரூ. 25931.46 லட்சத்தை மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவித்திருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
- புதுச்சேரிக்கு 943.62 லட்சமும், ஆந்திரப் பிரதேசத்துக்கு 2563.32 லட்சமும், கேரளத்துக்கு 10974.73 லட்சமும், கர்நாடகத்துக்கு 14276.52 லட்சமும், மத்தியப் பிரதேசத்துக்கு 39398.53 லட்சமும், உத்தரப் பிரதேசத்துக்கு 56968.96 லட்சமும் விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.