ரூ.36,000 கோடி முதலீட்டை பெற ராஜஸ்தான் அரசு புது ஒப்பந்தம்
- ராஜஸ்தான் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரியில் நடக்கிறது. அதையொட்டி, ராஜஸ்தானில் தொழில் துவங்க முன்வருமாறு, அம்மாநில தொழில்துறை சார்பில், நாடு முழுதும் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடந்து வருகிறது.
- சென்னையில் இந்த கருத்தரங்கம் நடந்தது. ராஜஸ்தான் மாநில தொழில் துறை அமைச்சர் சகுந்தலா ராவத், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
- தமிழகத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். ராஜஸ்தானில் உள்ள வாய்ப்புகள், அரசு அளிக்கும் சலுகைகள் குறித்தும் விவரித்தனர்.
- கருத்தரங்க முடிவில், 36 ஆயிரத்து 820 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதோடு, ஐந்து நிறுவனங்களின் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது.சூரிய மின் உற்பத்தி, ஜவுளி பூங்கா, மருந்து தயாரிப்பு, இரும்பு, மின் வாகனம், சுற்றுலா, எரிவாயு ஆகிய துறைகளின் கீழ், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நியமனம்
- சீனாவுக்குப் புதிய தூதராக பிரதீப்குமாா் ராவத் நியமிக்கப்பட்ட நிலையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
- கல்வான் தாக்குதல் உள்பட சீனாவுடனான முக்கிய எல்லைப் பிரச்னைகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதராக விக்ரம் மிஸ்ரி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. சீனத் தூதராக மூன்றாண்டுகள் அவா் பணியாற்றினாா்.
- இந்திய வெளியுறவுப் பணியின் 1989-ஆம் ஆண்டு பிரிவைச் சோந்த விக்ரம் மிஸ்ரி, வெளியுறவு அமைச்சகத்திலும் பிரதமா் அலுவலகத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். மேலும் ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு இந்திய தூதரகங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ளவா்.
இஸ்ரேல் 4ஆவது தவணை தடுப்பூசி சோதனை தொடக்கம்
- கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகளவில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. 93 லட்சம் மக்கள்தொகையில் 63 சதவீதம் போ இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
- 45 சதவீதம் போ மூன்றாவது தவணையாக ஃபைசா்/பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இந்நிலையில், 4-ஆவது தவணை தடுப்பூசி சோதனையை அந்த நாடு தொடங்கியுள்ளது.
- டெல் அவிவ் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 150 மருத்துவப் பணியாளா்களுக்கு 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் கடந்த ஆகஸ்டில் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள். மேலும், குறைந்த நோய் எதிா்ப்புத் திறனுடையவா்கள் ஆவா்.
முதல் முறையாக ரியல் எஸ்டேட் மாநாடு காஷ்மீரில் வீடு, ஓட்டல் கட்ட ரூ.19,000 கோடியில் ஒப்பந்தம்
- ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு நாட்டின் அனைத்து பகுதி மக்களும் நிலங்களை வாங்க வழிவகை செய்யும்படியாக, ஜம்மு காஷ்மீர் நில உரிமையாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
- இந்நிலையில், காஷ்மீரில் ரியல் எஸ்டேட் தொழிலை ஊக்குவிக்க முதல் முறையாக ரியல் எஸ்டேட் மாநாடு ஜம்முவில் நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகமும், ஒன்றிய வீடு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ரியல் எஸ்டேட் அமைப்புடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.
- இதில், காஷ்மீரில் வீடு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டி விற்பனை செய்ய அரசுடன் 39 ஒப்பந்தங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்துள்ளன. ரூ.18,300 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
ரூ.28,197 கோடியில் இமாச்சலில் வளர்ச்சி திட்டங்கள் பிரதமர் மோடி அடிக்கல்
- இமாச்சல் பிரதேசத்தில் நடந்த அரசு திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ரூ.28,197 கோடி மதிப்பிலான 287 முதலீட்டு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.6700 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
- இதேபோல் லுக்ரி நீர்மின் திட்டம், தவுலாசித் நீர் மின் திட்டம், சாவ்ரா- குட்டு நீர் மின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.11,281 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த 3 நீர்மின் திட்டங்களும் பிராந்தியத்தின் நீர்மின் திறனை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.
செங்கம் அருகே சோழர், விஜயநகர நாயக்கர் காலத்து நீர் மேலாண்மை கல்வெட்டுகள் கண்டெடுப்பு
- மணியக்கல்லை சேர்ந்த குணவரன் அம்பலவன் மாதேவன் என்பவர் ஏரி கிணறு அமைத்து விளை நிலங்கள் உண்டாக்கியுள்ளார். அவற்றை, வலிகண்டப்படையார் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு, ஏரிக்கு அப்படையின் பெயரை வைத்திருக்கிறார்.
- அந்த ஏரிப்பாசனத்தில் உள்ள பெரிய விளைச்சல் நிலத்தை, தனது பெயரிட்டு குணவரன் மாதேவி என்று அழைத்திருக்கிறார். படையின் பயன்பாட்டிற்காக கிணற்றின் கிழக்கில் அமைந்த கீழைப்பட்டி என்ற நிலத்தினை, படையில் உள்ள அம்பலத்தரையன் என்பவருக்கு பூவில் நீர்வாத்து கொடுத்துள்ளார்.
- கிழமைப்பட்டி என்ற சொல்லுக்கு உரிமை பொருள் என்பது அர்த்தமாகும். இந்த கல்வெட்டின் முதல் 3 வரிகளின் வலதுப்புறம் சற்று சிதைந்துள்ளது.
- அதில் குறிப்பிட்டுள்ள மணியக்கல் என்பது தற்போதைய மணிக்கல் கிராமமாக இருக்கலாம். புன்னாத்தூர் என்பது தற்போது மேல்பென்னாத்தூர் என்று மருவியதாக தெரியவருகிறது.
- மேலும், இந்த ஊரின் காந்திநகர் ஏரி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டை ஆய்வு செய்ததில், ஏரிக்கரை அருகே உள்ள இரண்டு பெரிய பாறைகளில் 40 வரிகளில் விஜயநகர காலத்தை சேர்ந்த கல்வெட்டு என்பது உறுதியானது. இந்த கல்வெட்டு 1538ம் ஆண்டில் விஜயநகர அரசர் அச்சுத தேவமகாராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.
- செயங்கொண்ட சோழ மண்டலத்து செங்குன்ற கோட்டத்து பெண்ணை, வடகரை ஆடையூர் நாடு செங்கந்தப்பட்டில் இருக்கும் துளுவ நாயக்கரான மஞ்சுநாயக்கர் மகன் தேவப்ப நாயக்கருக்கு அண்ணாநாட்டு தனியூர் திருவண்ணாமலை மாளிகை மடத்து முதலியார் அளித்த தானத்தின்படி என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும், செங்கந்தப்பட்டு புத்தேரி உடைந்து நெடுநாள் ஆனதால், ஏரி காடுபோல் மாறியிருக்கிறது. எனவே, ஏரியை வெட்டி உடைப்புகளை சரிசெய்து கிணறு வெட்டி, சீர்திருத்தம் செய்யும் துரிஞ்சிப்படைக்கு நிலம் தானம் வழங்கிய விபரமும், அதன் நான்கு புற எல்லையும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்திய கடற்படை அகாடமி, எழிமலாவின் தலைமைப் பொறுப்பை 2021 டிசம்பர் 26 அன்று வைஸ் அட்மிரல் புனீத் கே பஹல் ஏற்றுக் கொண்டார்.
- 1984-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைந்த என்டிஏ, கடக்வஸ்லா மாணவரான இவர், வெல்லிங்கனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மற்றும் மும்பயில் உள்ள கடற்படை போர்திறன் கல்லூரியில் பயின்றுள்ளார்.
- ஐஎன்எஸ் கருடா, ஐஎன்எஸ் ராஜாளி, ஏஎஃப்எஸ் யெலஹங்கா மற்றும் சிஜிஏஎஸ் 700 ஆகிய இடங்களிலும், ஐஎன்எஸ் விக்ராந்த், பேட்வா, கோதாவரி, சுஜாதா மற்றும் போர்பந்தர் ஆகிய கப்பல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
- தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உபகரணங்கள் மேலாண்மை குறித்த வருடாந்திர மாநாட்டை எல்லைகள் ரோடு அமைப்பு புதுதில்லியில் நடத்தியது.
- இந்த மூன்று நாள் மாநாட்டை பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தொடங்கி வைத்தார். எல்லைகள் ரோடு அமைப்பின் தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சௌத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
- எல்லைப் பகுதியில் சாலை கட்டமைப்பு மேம்பாடு, புதிய தொழில்நுட்ப பயன்பாடு, போன்றவற்றில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது.