முதல்வர் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப வருமானம் ரூ.1.20 லட்சமாக உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
- முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறுபவர்கள் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் பெறுவதற்காக தமிழக அரசால் 2009-ல் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற காப்பீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் 2012 ஜனவரி 11-ம்தேதி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட பெண் திருமண வயதை உயர்த்தும் மசோதா
- இந்தியாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 21ஆகவும் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக உள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும் என ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
- இந்நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
- அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து குழந்தை திருமணத் தடுப்பு சட்ட (திருத்த) மசோதா 2021 நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.
அமெரிக்கா திபெத் விவகார ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளி அதிகாரி நியமனம்
- திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சோந்த தூதரக அதிகாரி அஸ்ரா ஸெயாவை அமெரிக்க அரசு நியமித்துள்ளது.
- தற்போது அவா் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான இணையமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.
உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு
- தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையின் கீழ் இந்தாண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மேலும், அதன்படி, முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 255 கி.மீ நான்கு வழிச்சாலைகள் ரூ.2,123 கோடியில் தரம் உயர்த்தப்படுகிறது.
- ரூ.865 கோடி செலவில் 639 கிலோ மீட்டர் நீள சாலைகள் இரு வழிச் சாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது. நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 96 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.412 கோடியில் மேம்படுத்தப்படுகிறது.
- சாலைகளை பலப்படுத்தும் பணி ரூ.750 கோடியிலும், பாலங்கள் கட்டும் பணி ரூ.117 கோடியிலும் நடைபெறுகிறது. சாலை பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது.
- ரூ.768 கோடியில் 2,356 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளில் வாகன பயன்பாட்டின் தரத்தினை மேம்படுத்தப்படுகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்காத வகையிலும், மழைநீர் வடிந்து செல்ல ஏதுவான வகையிலும் திட்டமிட்டு சாலைகள் அனைத்தும் ரூ.7500 கோடியில் மேம்படுத்தப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 16 லட்சம் பெண்களுக்கு ரூ1,000 கோடி சுழல்நிதி - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி பிரயாக்ராஜ் செல்கிறார்.
- அங்கு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த சுமார் 16 லட்சம் பெண் உறுப்பினர்களுக்கு ரூ.1,000 கோடி சுழல்நிதியை வழங்கினார். இன்றைய கூட்டத்தில் 2 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
சிலி அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் வெற்றி
- லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரிக் கூட்டமைப்பின் சார்பில் கேப்ரியல் போரிக்கும், குடியரசுக் கட்சியின் ஜோஸ் அண்டோனியோவும் போட்டியிட்டனர்.
- இதில் இடதுசாரி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 35 வயதான கேப்ரியல் போரிக் பதிவான மொத்த வாக்குகளில் 55.87 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோஸ் அண்டோனியோ 44.13 சதவிகித வாக்குகள் பெற்றார்.
- இந்த வெற்றியின் மூலம் சிலி நாட்டை மீண்டும் இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளனர். சிலியில் மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினரிடம் 25 சதவிகித சொத்துக்கள் உள்ளன.
- மேலும் வாரத்தில் 40 முதல் 45 மணி நேரம் மட்டுமே வேலை, சூழலியல் முதலீடுகள், ஓய்வூதிய அறிவிப்புகள் உள்ளிட்டவை கேப்ரியல் வெற்றிக்கு வலுசேர்த்துள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளான கியூபா, வெனிசுலா, ஹோண்டுராஸைத் தொடர்ந்து சிலியிலும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
உலக நீச்சல் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் நிகழ்த்திய ஹாட்ரிக் இந்திய சாதனைகள்
- ஷார்ட் கோர்ஸ் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.
- இந்த போட்டியின் தகுதி சுற்றில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீஹரி நடராஜ், 48.65 வினாடியில் இலக்கை எட்டினார். அனைத்து தகுதி சுற்றுகளின் முடிவில் ஸ்ரீஹரி நடராஜ் 38-வது இடத்தை பிடித்தார்.
- இருப்பினும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் குறைந்த தூரம் கொண்ட நீச்சல் போட்டிக்கான பிரிவில் வேகமாக இலக்கை அடைந்த இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீஹரி நடராஜ் பெற்றுள்ளார்.
தேர்தல் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
- தேர்தல் சட்டத் திருத்த மசோதா, வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோக்க விரும்புவோரிடம் அவா்களின் ஆதாா் எண்ணைத் தோதல் அதிகாரிகள் கேட்பதற்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது.
- எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி ரூ.609 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின்கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கான 5-வது மாநில நிதி ஆணையத்தின் மானியங்களின்படி கிராம பஞ்சாயத்துகள்,பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மக்கள் தொகை மானியம் ஆகிய மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர்,டிசம்பர் மாதங்களுக்கான வளர்ச்சி நிதியாக ரூ.609,43,59,714 நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
- 10வது குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டை, காந்தி நகரில் குஜராத் அரசு, 2022 ஜனவரி 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்துகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை குஜராத் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காந்தி நகரில் உள்ள பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தில் கடந்த 18ம் தேதி நடத்தியது. மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் என்ற கருப்பொருளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- இந்நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் திரு. புபேந்திர படேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- இந்நிகழ்ச்சியில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் பல அம்சங்கள் மற்றும் மருந்துகளை அதிகளவில் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்த தொழில்நுட்ப கூட்டங்கள் நடத்தப்பட்டன.
- இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் உலகின் 4-வது அதிக அளவாக உள்ளது. 30 நவம்பர் 2021 வரை நாட்டில் மொத்தம் 150.54 ஜிகாவாட் அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (பெரிய அளவிலான நீர்மின் திட்டங்கள் உட்பட) நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இது தவிர 2021-22-ல் (அக்டோபர் 2021 வரை) பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மொத்தம் 2,19,817.14 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்.
- ஆய்வுக்கான அதன் தீவிர செயல்திட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதன் தொடர்ச்சியாக, திறந்தவெளி ஏக்கர் உரிமம், திட்டத்தின் சர்வதேச போட்டி ஏலத்திற்கான ஏழாம் சுற்றை அரசு தொடங்கியுள்ளது.
- இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 15, 2022 அன்று 12 மணி வரை பிரத்யேக மின்-ஏல இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மார்ச் 2022 இறுதிக்குள் ஒப்பந்தங்கள் வழங்கி முடிக்கப்படும். இதன் மூலம் கூடுதலாக 15,766 சதுர கி.மீ. நிலப்பரப்பு ஆய்வுக்குள் கொண்டுவரப்படும். மொத்த பரப்பளவு 207,692 சதுர கி.மீ ஆக அதிகரிக்கப்படும்.
- ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (ஹெல்ப்) மார்ச் 2016-ல் அங்கீகரிக்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், ஆய்வு மற்றும் உற்பத்தி செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்குமான உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையில் சீர்திருத்தங்களை பிப்ரவரி 2019-ல் அரசு அறிவித்தது.
- இதன் கவனம் 'வருவாய்' என்பதிலிருந்து 'உற்பத்தி அதிகரிப்புக்கு' மாற்றப்பட்டது. அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிப்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது.
- 30 மார்ச் 2016 அன்று ஹெல்ப் தொடங்கப்பட்டதிலிருந்து, 105 ஆய்வு மற்றும் உற்பத்தி தொகுதிகளுக்கு ஐந்து சுற்று ஏலம் நிறைவடைந்துள்ளது;
- ஆறாவது சுற்றின் கீழ் 21 தொகுதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 126 தொகுதிகள் சுமார் 191,926 சதுர கி.மீ. பரப்பளவு 18 வண்டல் படுகைகளில் பரவியுள்ளது.
- ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துடன் ஆராய்ச்சிக்கான உடன்பாட்டில் நித்தி ஆயோக் 2021, டிசம்பர் 20 அன்று கையெழுத்திட்டது. 2023 சிறு தானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக இருக்கும் நிலையில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உலகளவில் அறிவு பரிமாற்றம் செய்வதில் தலைமையேற்க இந்தியாவிற்கு உதவுவதில் சிறு தானியங்களின் முக்கிய நாடாக விளங்குவதும் இந்த உடன்பாட்டின் நோக்கமாகும்.
- மேலும் சிறிய அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கான வாழ்வாதாரங்களை உறுதியாகக் கட்டமைப்பதையும், பருவநிலை மாற்றத்திற்கான திறன்களை பயன்படுத்துவதையும் உணவு முறைகளில் மாற்றம் செய்வதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.
- இந்தியாவில் விரிவடைந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு பருவநிலையைத் தாக்குப் பிடிக்கும் வேளாண்மையை பலப்படுத்துவதற்கு யுக்திகள் வகுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு இந்த உடன்பாடு கவனம் செலுத்தும்.
- மத்திய அரசின் அமைச்சகங்கள், மாநில அரசுகளில் உள்ள சம்பந்தப்பட்ட துறைகள், தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள், சிறு தானியங்களை ஊக்கப்படுத்துவதற்கான துறையில் செயல்படும் அமைப்புகள் ஆகியவற்றுடன் இருதரப்பினரும் கூட்டாக தேசிய அளவில் கலந்தாலோசனை நடத்த இந்த உடன்பாடு வகை செய்கிறது.
- பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, இவற்றை சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அமல்படுத்துவதற்கு, 2 நாள் பயிலரங்கை, சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க தொழிற்பேட்டையில், சிபெட்- பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப மையம் (ஐபிடி) நடத்தியது. இந்த பயிலரங்குக்கு தேவையான உதவியை மத்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை அளித்தது.
- இந்த பயிலரங்கின் தொடக்க நிகழ்ச்சி சிபெட்: ஐபிடி சென்னை வளாகத்தில் நடைபெற்றதுது. இதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் திரு ஏ.உதயன் ஐ.எஃப்.எஸ். தொடங்கி வைத்தார். சிபெட் தலைமை இயக்குனர் டாக்டர் சிஷிர் சின்ஹா முன்னிலை வகித்தார்.
- சீனாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக பிரதீப் குமார் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். 1990-ஆம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதி காரியான ராவத், இப்போது நெதர்லாந்து தூத ராகப் பணியாற்றி வருகிறார்.
- ராவத் ஏற்கெனவே பெய்ஜிங் மற்றும் ஹாங் காங்கில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இந்தோனேசிய தூதராகவும் பணியாற்றியுள்ள அவர், சீன மொழியில் சரளமாகப் பேசும் திறனுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்போது சீன தூதராக உள்ள விக்ரம் மிஸ்ரியைத் தொடர்ந்து பிரதீப் குமார் ராவத் அந்தப் பொறுப்பை ஏற்க இருக்கிறார். சீனாவுடன் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை உள்பட பல்வேறு விஷயங்களில் பிரச்னைகள் உள்ள நிலையில் இந்தப் புதிய நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது