பிச்சை எடுப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 15வது இடம் - ஒன்றிய அரசு
- அதில், இந்தியாவில் அதிகளவில் யாசகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில் அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909 பேருடன் மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது
3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
- மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்த சட்டங்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார்.
- அதன்படி கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை, அத்துறையின் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.
- குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், மசோதாவை ரத்து செய்வதற்கு பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேறியது.
- தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட, அவர் அதற்கு அதற்கு ஒப்புதல் அளித்தார். இதனால், மூன்று புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்ட நிலையை அடைந்துள்ளன.
காகிதமில்லா நிர்வாக நடைமுறை - 'டிஜிலாக்கரில்' பதிய அரசு உத்தரவு
- நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று பெறாமல், டிஜிட்டல் வாயிலாக, டிஜிலாக்கர் செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யும் முறையை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
- காகிதமில்லா நிர்வாகம் என்ற நடைமுறையை ஊக்கப்படுத்த, அனைத்து மாநிலங்களையும், டிஜிலாக்கர் முறையில் இணைய அறிவுறுத்தி உள்ளது.
- இதன்படி, டிஜிலாக்கர் முறையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பல்கலைகளும் இணைய, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக இயக்குனர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
- அவர் அளித்த பரிந்துரையை, தமிழக அரசு ஆய்வு செய்து, டிஜிலாக்கர் முறையில், அனைத்து அரசு அலுவலகங்களும், பல்கலைகளும் பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது.
- நாட்டின் குடிமகன்கள், எந்த மூலையில் இருந்தும், தங்களின் வாகன உரிமம், மதிப்பெண் பட்டியல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சான்றிதழ்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் பெற, இந்த முறை வழிவகுக்கும்.
- எனவே, அரசு அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் என, அனைத்து அரசு அலுவலகங்களும், டிஜிலாக்கரில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம் வழங்கும்.
இனப் பெருக்க சிகிச்சை மசோதா நிறைவேறியது
- குழந்தைப் பேறு இல்லாத பெண்களை மாற்று வழியில் கருத்தரிக்க செய்யும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மருத்துவ மையங்கள் நாடு முழுதும் செயல்பட்டு வருகின்றன.
- பல்வேறு மருத்துவ மையங்கள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப சிகிச்சை மையங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
- அந்த வகையில், உதவி இனப் பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா லோக்சபாவில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிலைக்குழுவின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- நிலைக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
- உதவி இனப்பெருக்க சிகிச்சை மையங்களை ஒழுங்குபடுத்தி, கண்காணிப்பதோடு, மகப்பேறுக்கான சிகிச்சையை முறையாகவும், பாதுகாப்பானதாக செய்யவும், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.
நவம்பரில் ஜிஎஸ்டி ரூ1.31 லட்சம் கோடி வசூல்
- கடந்த நவம்பர் மாதத்தில், மொத்தம் ரூ1,31,526 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ23,978 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ31,127 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ66,815 கோடியாகவும் உள்ளது.
- ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில், இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலான ரூ32,165 கோடியும் அடங்கும். இதுபோல் செஸ் ரூ9,606 கோடி வசூலாகியுள்ளது. இதில், இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் மூலம் ரூ653 கோடி கிடைத்துள்ளது.
- கடந்த மாத ஜிஎஸ்டி வசூல், முந்தைய ஆண்டு இதே மாதம் வசூலானதை விட சுமார் 25 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு நவம்பரில், ரூ1.05 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியிருந்தது. மேலும், கடந்த மாத ஜிஎஸ்டி வசூலானது.
லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் இடதுசாரி வேட்பாளர் சியோமாரா காஸ்ரோ வெற்றி
- லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தேசியக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நஸ்ரி அஸ்ஃபுராவும் அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சியின் சார்பில் சியோமாரா காஸ்ரோவும் போட்டியிட்டனர்.
- இந்நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவிகிதம் வாக்குகளையும், அஸ்ஃபுரா 34 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் மீண்டும் ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டில் இடதுசாரி கட்சி ஆட்சியமைக்க உள்ளது.
- நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன்மூலம் ஹோண்ட்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் எனும் பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.