புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம் தான் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
- வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள். வேலைகள் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள்.
- தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள். இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன.
- எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படிப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
- புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும். 5 கோடி ரூபாய், 'புலம்பெயர் தமிழர் நலநிதி' என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும்.
- மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.
- புலம்பெயர் தமிழர் குறித்த தரவுத் தளம் ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
- கொரோனா பெருந்தொற்றுக் காரணமாகச் சுமார் ஏழு இலட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையிழந்தும் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- வெளிநாடுவாழ் தமிழர்களில் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பினைத் தாய்நாட்டில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இவர்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.
இந்தியாவில் 7 இடங்களில் ரூ.4,445 கோடியில் ஜவுளி பூங்கா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நாட்டின் 7 இடங்களில் 'பிஎம் மித்ரா' திட்டத்தின்கீழ் மெகா ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடி செலவிடப்படும்.
- தனியார் முதலீடுகளும் அனுமதிக்கப்படும். இதன்மூலம் ஜவுளி உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வளர்ச்சி ஏற்படும். மேலும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
- பெரிய அளவில் அமைக்கப்படும் இந்த ஜவுளிப் பூங்காக்கள், அந்நிய முதலீடு களை பெருமளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2021-22 நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி மூலம் 4,400 கோடி டாலர் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர் சூட்டி கவுரவம்
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில், ஹாரிஸ் பகுதியின் துணை போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சந்தீப் சிங், 42. இவர், 2019ல் ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமான ஒரு காரை மடக்கினார்.
- அப்போது, காரில் இருந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் சந்தீப் சிங் உயிரிழந்தார். டெக்சாஸ் மாகாணத்தில், முதன் முதலாக சீக்கியர்களின் பாரம்பரிய டர்பன் மற்றும் தாடியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டவர் சந்தீப் சிங்.
- கடமை தவறாத, நேர்மையான அதிகாரியான சந்தீப் சிங்கின் சேவையை கவுரவிக்கும் வகையில், மேற்கு ஹூஸ்டன் நகரின், ஹாரிஸ் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு, சந்தீப் சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1.71 லட்சம் பேருக்கு 'இ - சொத்து' அட்டைகளை வழங்கினார் மோடி
- மத்திய பிரதேசத்தில் 'ஸ்வமித்வா' திட்டத்தின் கீழ், ௧.௭௧ லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, 'இ - சொத்து' அட்டைகளை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக வழங்கினார். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இது கிராமப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.நகர்ப்புறங்களில் உள்ளது போல, கிராமத்தில் வசிப்பவர்கள் கடன் பெறுவதற்கும், இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலத்தை பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
'ஹாக்கி ஸ்டார்' விருது 2021
- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்ஐஎச்) வழங்கும் இந்த ஆண்டுக்கான 'ஹாக்கி ஸ்டார்' விருதுகள் அனைத்தையும் இந்தியாவே பெற உள்ளது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஹாக்கி வீராங்கனைக்கான விருது இந்தியாவின் குர்ஜித் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சிறந்த ஹாக்கி வீரருக்கான விருதுக்கும் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கோல் கீப்பர்களாக மகளிர் பிரிவில் சவீதா, ஆடவர் பிரிவில் ஸ்ரீஜேஷ் ஆகியோரும், சிறந்த வளரிளம் ஆட்டக்காரர்களாக மகளிர் பிரிவில் ஷர்மிளா தேவி, ஆடவர் பிரிவில் விவேக் பிரசாத் ஆகியோர் என இந்தியர்களே தேர்வாகி உள்ளனர்.
- சிறந்த பயிற்சியாளர்களாக இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ஸ்ஜோர்டு மரிஜ்னே(நெதர்லாந்து), இந்திய ஆடவர் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட்(ஆஸ்திரலேியா) ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.