வள்ளலார் பிறந்த அக்.5ம் தேதி இனி 'தனிப்பெருங்கருணை நாள்' ஆக கடைப்பிடிக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5ம் நாள் 'தனிப்பெருங்கருணை நாள்' ஆக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5.10.1823-ல் பிறந்தார்.
- கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார்.
- 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.
- மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.
- இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கி கொள்கிறேன் என்றார்.
- சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.
- அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி. தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது.
தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் - மத்திய அரசு அறிவிப்பு
- தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அதன் விதிமுறைகளுடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
- வாரியத்தின் அமைப்பு, தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதி, தேர்வு செயல்முறை, பதவிக்காலம், ராஜினாமா மற்றும் நீக்கத்திற்கான நடைமுறை, வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள், வாரிய கூட்டங்கள் போன்றவை குறித்த விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- வாரியத்தின் தலைமை அலுவலகம் தேசிய தலைநகர் பகுதியில் இருக்க வேண்டும். இந்தியாவில் மற்ற இடங்களில் அலுவலகங்களை வாரியம் நிறுவலாம்.
- மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய தலைவர் மற்றும் மூன்று பேருக்கு குறையாமல் ஏழு பேருக்கு மிகாமல் உறுப்பினர்கள் வாரியத்தில் இருக்க வேண்டும்.
- சாலை பாதுகாப்பு, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும்.
ஆசாதி @ 75 - புதிய நகர்ப்புற இந்தியா - நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்' என்ற கருத்தரங்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- 'ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்' என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்தீப் பூரி, மகேந்திரநாத் பாண்டே, கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
- உத்திரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி (பிஎம்ஏஒய்-யு) திட்டத்தின்கீழ் 75,000 பயணாளிகளுக்கு இணையவழி நிகழ்ச்சியில் பிரதமர் சாவிகளை ஒப்படைத்தார்.
- பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் அம்ருத் திட்டத்தின்கீழ் உத்திரப்பிரதேசத்தில் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார் / அடிக்கல் நாட்டினார்:
- லக்னோ, கான்பூர், வாரணாசி, ப்ரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி, காஜியாபாத் ஆகிய ஏழு நகரங்களுக்கு ஃபேம் -II திட்டத்தின் கீழ் 75 பேருந்துகளைக் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
- மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு முக்கிய இயக்கங்களின் கீழ் அமலாக்கப்பட்ட 75 திட்டங்களை உள்ளடக்கிய காஃபி மேசை புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
- லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைப்பது பற்றியும் பிரதமர் அறிவித்தார்.