ஓசூரில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- நாட்டு கோழிக்குஞ்சு உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமங்களில் இத்தொழிலை ஊக்குவித்து தொழில் முனைவோரை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் குஞ்சுபொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதைசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
- இந்த வளாகத்தில் 5,100 வளரும்கோழிகள், 9,150 முட்டையிடும் கோழிகளைப் பராமரிக்க முடியும்.வாரத்துக்கு 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 10 லட்சம் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
போயிங் நிறுவனத்தின் 11வது பி-8ஐ போர் விமானம் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
- அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம், நீர் மூழ்கி கப்பல்களை தகர்க்கக்கூடிய பி-8ஐ ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து இத்தகைய 8 விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2009ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.
- அதன் பின்னர், 2016ம் ஆண்டு மேலும் 4 பி-8ஐ போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. இவற்றில் 9 விமானங்கள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட நிலையில், 10வது விமானம் கடந்த ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், 11வது பி-8ஐ ரக போர் விமானத்தை போயிங் நிறுவனம் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. .
இல்லம் தேடி கல்வி திட்ட பணி அமைச்சர் மகேஷ் துவக்கினார்
- தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற பெயரில், புதிய கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
- இதன்படி, 200 கோடி ரூபாய் நிதி உதவியுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்கான இணையதளம் மற்றும் கலைப் பயணத்தை, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார்.
- முதற்கட்டமாக, 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் நேரம் போக, மாலை 5:00 முதல் 7:00 மணி வரை தன்னார்வலர்கள் வழியே, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- மேலும், கரகாட்டம், பொம்மலாட்டம், சைக்கிள் பேரணி, வீதி நாடகம் போன்றவற்றின் வாயிலாக, விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஒரு வாரத்தில் துவங்கி வைக்க உள்ளார்.
இந்தியா-இஸ்ரேல் உறவை பறைசாற்றும் பூதான் தோட்டத்தில் நினைவு தகடு வெளியுறவு அமைச்சர் திறந்து வைத்தார்
- இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்த அவர் அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- இப்பயணத்தில் அமைச்சர் ஜெய்சங்கர், ஜெருசலேம் வனப்பகுதியில் உள்ள 'பூதான் தோட்டத்தில்' நினைவு தகட்டை திறந்து வைத்தார்.
- இந்திய அறப்போராளியும் மனித உரிமை ஆர்வலருமான வினோபா பாவே, 1951ல் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். பூதான் இயக்கம் எனப்படும் அவ்வியக்கத்தின் மூலம் நிலம் உள்ள பணக்காரர்கள் தாமாக முன்வந்து நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை தானமாக வழங்கச் செய்தார்.
சீனாவுடன் பூட்டான் எல்லை ஒப்பந்தம்
- பூட்டான்-சீனா இடையே எல்லை பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் Wu Jianghao இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை பூட்டானும் சீனாவும் எல்லை தகராறு தொடர்பாக 26 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன.
இந்தியா - இலங்கை ராணுவ 'மித்ர சக்தி 2021' கூட்டுப்பயிற்சி நிறைவு
- இந்தியா - இலங்கை இடையேயான 'மித்ர சக்தி' என்றழைக்கப்படும் ராணுவ கூட்டுப்பயிற்சி அம்பாறையில் நிறைவடைந்தது.
- இந்தியா மற்றும் இலங்கை ராணுவங்களுக்கிடையேயான கூட்டுப்பயிற்சியின் 8-வது பதிவான 'மித்ர சக்தி 2021' அக்டோபர் 4ம் தேதி முதல் 16ம் தேதி வரை அம்பாறை போர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று நிறைவடைந்தது.
- தாக்குதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலான மித்ர சக்தி, இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய இருதரப்பு கூட்டு பயிற்சியாகும்.
ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்கள் துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- ஜம்மு - காஷ்மீரில் ரியல் எஸ்டேட் மேம்பாடு, தொழில்துறை பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப கோபுரங்கள், பல்நோக்கு கோபுரங்கள், தளவாடங்கள், மருத்துவக் கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காக துபை அரசுடன் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- மேலும், இந்நிகழ்வில் மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், துபை அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.