ஜவுளித்துறை உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி - மத்திய அரசு ஒப்புதல்
- 'நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்,1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில், 13 துறைகளுக்கான உற்பத்தி சார்ந்தஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்படும்' என, மத்திய அரச அறிவித்திருந்தது.
- இதன் ஒரு பகுதியாக, ஜவுளித்துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு, 10 ஆயிரத்து 683 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- இதன் வாயிலாக, கூடுதலாக 7.5 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளும், பல லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் ஜவுளித்துறையில் புதிதாக 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கவும், மூன்று லட்சம் கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக அரசு கணக்கிட்டுள்ளது.
- இத்திட்டத்தால், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் அதிக பயனடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் ஆளுநர் பேபி ராணி மவுரியா ராஜினாமா
- உத்தராகண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாகவும் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளர்.
- உத்தராகண்ட் ஆளுநராக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பேபி ராணி மவுர்யா பதவியேற்றார். மார்கரெட் ஆல்வாவுக்கு பிறகு உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது பெண் ஆளுநர் என்ற சிறப்பை பெற்றிருந்தார். இந்நிலையில் 2 ஆண்டு பதவிக் காலம் எஞ்சியுள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்.
ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 'கருடா' செயலி கையேடு
- தேர்தல் கமிஷன், ஆண்டுதோறும், ஓட்டுச்சாவடிகளையும், வாக்காளர் பட்டியல் விவரத்தையும் புதுப்பிக்கிறது. இதற்காக, சுருக்கமுறை திருத்தப் பணி நடத்தப்படுகிறது. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் ஓட்டுச்சாவடி பிரிக்கப்படுகிறது.
- அதற்கேற்ப புதிய எண் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் வாக்காளர் மற்றும் ஓட்டுச்சாவடி விவரங்களை பதிவு செய்ய வசதியாக, 'கருடா' என்ற செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் - முதல்வர் அறிவிப்பு
- மாநில அளவில், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினரின் சட்டப்பூர்வ மான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்' என்ற புதிய அமைப்பு அமைக்கப்படும்.
- தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் ஆணையத்தை உருவாக்க, அரசு சட்டம் இயற்றும். அதற்கான சட்ட முன்வடிவ வரைவு, இந்த சட்டசபை தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்
- ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை, பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும்.
- பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வசமே இருக்கும்.பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புதல், பணி அமைப்பை நிர்வகித்தல், நிர்வாக பணிகளை கையாளுதல் போன்றவற்றை, அத்துறையே செயல்படுத்தும். பள்ளிக் கல்வித்துறை அவற்றில் தலையிடாது
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை, விரைவாக இறுதி செய்ய, தற்சமயம் தமிழகத்தில், 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும், நான்கு புதிய நீதிமன்றங்கள் அமைக்க, ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
- இது தவிர, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என, வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில், கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை, சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்க தேவையான, விழிப்புணர்வு பயிற்சிகள், 'சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில், காவல் துறை, வருவாய் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்
- தமிழகத்தில், பல கிராமங்களில், ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் சிற்றுார்களுக்கு, ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த, அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு, வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து, 8.25 லட்சம் ரூபாய் வரை, தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை குறைந்தபட்சம், 1 லட்சம் ரூபாய்; அதிகபட்சமாக, 12 லட்சம் ரூபாய், மாநில அரசு நிதி வழியே உயர்த்தி வழங்கப்படும்.
தேசிய கடற்கரை டெக்பால் போட்டி தமிழக அணி சாம்பியன்
- தமிழ்நாடு டெக்பால் சங்கம் சார்பில், இந்திய டெக்பால் பெடரேஷன் ஆதரவுடன் தேசிய அளவிலான முதலாவது டெக்பால் சாம்பியன்ஷிப் போட்டி, மாமல்லபுரம் சுற்றுலாக் கழக விடுதி வளாக மைதானத்தில் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட 18 மாநிலங்களில் இருந்து 170 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- 4 நாட்கள் நடந்த இந்த தொடரில் நடந்த இறுதிப் போட்டியின் முடிவில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. 2ம் இடத்தை மஹாராஷ்டிரா அணியும், 3ம் இடத்தை குஜராத் அணியும் வென்றன.
- இந்த போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அடுத்த ஆண்டு சீனாவில் நடக்கும் உலக அளவிலான கடற்கரை டெக்பால் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணுவ அகாதெமியில் பெண்களை சோக்க முடிவு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
- இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.