தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்க மேம்பாட்டுக் குழு
- "ஏற்றுமதியில் ஏற்றம்" முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
- இதன்படி, மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவில் நிதித்துறைச் செயலாளர், தொழில்துறைச்செயலாளர், வேளாண்மைத்துறைச் செயலாளர், கால்நடைத்துறைச் செயலாளர், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளர், மற்றும் ஏற்றுமதி நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
- இக்குழு குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் தொழில்துறை துறையின் முதன்மைச் செயலாளர் தலைமையிலான ஒரு நிர்வாக துணைக்குழுவும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைவரான தலைமைச்செயலாளருக்கு அறிக்கைகளை அளிக்கும்
'ADOBE' சாந்தனு நாராயண் உட்பட 5 முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
- இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் எனும் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. சார்க் அமைப்பு போல இது ஒரு சர்வதேச அமைப்பு.
- குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
- இதனையடுத்து குவால்காம் (Qualcomm), அடோப் (Adobe), ப்ளாக்ஸ்டோன் குரூப் (Blackstone), ஜெனரல் அடாமிக்ஸ்(General Atomics), ஃபர்ஸ்ட் சோலார் (First Solar) ஆகிய உலகின் 5 முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு முடிவு
- டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை தயாரித்துள்ளது. இந்த அதிநவீன பீரங்கியை பயன்படுத்த ராணுவ அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்தது.
- ஆவடி கன வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன பீரங்கிகளை பிரதமர் மோடி பிப்ரவரியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இந்நிலையில், 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை 7,523 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் 'ஆர்டர்' கொடுத்துள்ளது. இந்த பீரங்கி, 58.5 டன் எடை உடையது. 10.638 மீட்டர் நீளமும் 9.456 மீட்டர் உயரமும் உடையது. 1,400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த பீரங்கி வாகனம், நவீன 120 மி.மீ துப்பாக்கியுடன் இயங்குவதுடன் எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த பீரங்கி வாகனங்கள் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும், மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு, 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் உடையவை.
தமிழகத்தில் காலியான 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் தேர்வு
- தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
- இந்த பதவிக்கு திமுக சார்பில் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோரும், 3 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
- அதில், சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் முன்மொழியாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.
- திமுக சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.2,427 கோடியை விடுவித்தது
- நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறை விடுவித்துள்ளது.
- அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக 2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 268 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இது நடப்பு நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் முதல் தொகை ஆகும். இந்த நிதியானது குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்பட உள்ளது.