அடுத்த 3 ஆண்டில் ரயில்வேயில் 50,000 பேருக்கு தொழில் திறன் பயிற்சி - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
- நாட்டில் இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள 'பிரதமரின் இலவச தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்'' கீழ் ரயில்வேயில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் காணொலிமூலம் தொடங்கி வைத்தார்.
- அதன்படி, நாடு முழுவதும் 75 ரயில்வே பயிற்சி கூடங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தெற்கு ரயில்வேயில் சென்னைபெரம்பூர் கேரேஜ் மற்றும் போத்தனூரில் உள்ள தொழிற்கூடங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுபோன்ற பயிற்சி சென்னை ஐசிஎப்-லும் தொடங்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 45வது கூட்டம்
- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 45-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடந்தது.
- பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இது உகந்தநேரம் அல்ல.
- இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் தற்போதைக்கு அந்த முடிவு கைவிடப்படுகிறது. பயோ டீசல் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- இ-வே பில், பாஸ்டாக் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், வரிகளை சீரமைப்பது குறித்து பரிந்துரைக்கவும் மத்திய அமைச்சர்களை கொண்ட 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வரி சீரமைப்பு குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
- கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லாத விலை உயர்ந்தமருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜோல்ங்ஜெல்ஸ்மா மற்றும் விடெப்ஸோ ஆகிய மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல அம்போடெரிசின் பி, டொசிலிஸுமாப் உள்ளிட்ட கரோனா மருந்துகளுக்கான வரி விலக்கு சலுகை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அளிக்கப்படும்.
- சில மருந்துகள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தசலுகை டிசம்பர் 31 வரை அளிக்கப்படும். அந்த வகையில் இடோலிஸுமாப், போஸாகோனஸோல், இன்பிளிக்ஸிமமாப், பாம்லனிவிமாப், எட்சிவிமாப், கஸிரிவிமாப், இம்டெவிமாப், 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ், பாவிபிரியாவிர் ஆகிய மருந்துகளுக்கு வரி குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும் ஏற்கெனவே மருந்துப் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி குறைப்பு மற்றும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கான அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஆனால், மருத்துவ உபகரணங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி முற்றிலுமாக விலக்கப்பட்டுள்ளது.
- மரபுசாரா மின்னுற்பத்தி கருவிகள் மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பேனா மற்றும் உதிரி பாகங்கள் மீதானவரி 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி 75சதவீத அளவுக்கு செயல்படுத்தப்படும் பயிற்சி திட்டங்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படும்.
- சரக்குகளை ஏற்றிச் செல்லும் தேசிய பர்மிட் வாகனங்கள் மீது மாநில அரசு விதிக்கும் ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானம் மூலம்ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அதேநேரத்தில் சில பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இரும்பு, மாங்கனீஸ், தாமிரம், நிக்கல், கோபால்ட், அலுமினியம், ஈயம், துத்தநாகம், குரோமியம் உள்ளிட்ட தாது மற்றும் அவற்றின் அடர்வுகள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ரயில் இன்ஜின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை மீதான வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் உணவு விநியோக நிறுவனங்களாக செயல்படும் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ ஆகிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- இவற்றுக்கு புதிதாக வரி விதிக்கப்படவில்லை. ஆனால் டெலிவரி செய்யும் உணவுப் பொருள் மீதான ஜிஎஸ்டி-யை அவை நேரடியாக செலுத்த வேண்டும். உணவகத்தில் இருந்து வசூலாகும் ஜிஎஸ்டி தொகையில் ஏற்படும் சில முறைகேடுகளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
- நிச்சயமற்ற நிலை மற்றும் அடிப்படைவாதம் ஆப்கானிஸ்தானில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அடிப்படைவாத கொள்கைகளை உலகம் முழுவதும் ஊக்கப்படுத்த ஆப்கானின் சூழல் வழிவகுக்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
- மேலும், எந்த நாட்டிலும் பயங்கரவாதத்தை பரப்ப ஆப்கானிஸ்தானை பயன்படுத்த கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் மரியாதை இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
- எஸ்சிஓவில் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.